சைக்கிளுக்குதான் பெல் தேவை,பெல்லுக்கு சைக்கிள் தேவையில்லை..

772

முன்னணியிலிருந்து வெளியேறுவதில்லையென்ற முடிவுக்கு வி.மணிவண்ணன் வந்துள்ள நிலையில் தொடர்ந்தும் மணியின் ஆதரவாளர்கள் திரண்டு சந்தித்து வருகின்றனர்.

அவரிற்கு நீதி கோரி பேனர்கள் பரவலாக கட்டப்பட்டுமுள்ளன.போராட்டங்களில் அவர்கள் மும்முரமாகியுள்ள போதும் வி.மணிவண்ணனின் அழுத்தங்காரணமாக அமைதி நிலை நீடிக்கின்றது.
மேலும் கட்சியுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள மணிவண்ணன் விரும்பவில்லை எனவும் தலைமையுடன் பேச முனைவதாகவும் அறியமுடிகின்றது.

மேலும் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை எந்தவகையில் குற்றங்களாக எடுத்துக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிநிலைகளிலிருந்து நீக்கும் முடிவுக்கு வந்தமை தொடர்பில் கட்சியின் மத்திய குழுவிடம் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரவுள்ளார்.

எனினும் பதவிகளிலிருந்து நீக்கியமை தொடர்பில் கையொப்பமிடப்படாத கடிதமே அனுப்பப்பட்டுள்ளதாகவும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைத்தவுடன் மேற்கண்டவாறு கோரி வி.மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளார் என்று அவரது தரப்புகள் தெரிவித்தன.

அத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். எந்தவொரு தீர்மானத்தையும் ஆற அமர யோசித்து எடுக்குமாறு அவர்கள் நேரில் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவிகளை மீளப் பெற்றுக் கொள்ளவது என்று கடந்த வியாழக்கிழமை கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்தது. இதனை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது என்று கட்சி எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை, நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது சிறு குழுக்களை அமைத்து செயற்பட்டமை மற்றும் புலம்பெயர் தேசத்தில் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர் என கட்சியால் அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் தொடர்புகளை பேணியமை போன்ற குற்றச்சாட்டுக்களே அந்தக் கட்சியின் மத்திய குழுவால் வி.மணிவண்ணனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு அவர் வகிக்கும் பதவிகளை மீளப் பெறுவதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.