முன்னணியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம்!

174

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிக்கு எதிராக சதி செய்தமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான வி.மணிவண்ணன் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நடைபெறுகின்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய செயற்குழு மணிவண்ணனை தேசிய அமைப்பாளர் நீக்குவதாக அறிவித்த பின்னரும் அவர் அதனை கவனத்தில் எடுக்காது செயற்பட்டுவருகின்றமையால் அவரை அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தமது கட்சிக்கு எதிராக சதி அவர் செய்துள்ள சதி தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவருக்கு விளக்கம் கோரி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் பதில் வழங்கிய பின்னர் அது தொடர்பில் பகிரங்கப்படுத்தவுள்ளதாகவும் மணிவண்ணன் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் நியாயமாக செயற்படவேண்டும் என்றும் உண்மைநிலையை அறிந்து செயற்படவேண்டும் என்றும் மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரை பயன்படுத்தி முன்னெடுக்கின்ற நடவடிக்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.