இஸ்ரேலியர்களின் வீர சின்னம் மசாடா மலை : Never Again

225

ரோமானியர்கள் பலஸ்தீனத்தை (தற்போதைய இஸ்ரேல்) பிடித்த போது ‘மக்கபீஸ்’ என்று அழைக்கப்படும் யூத இனத்தைச் சேர்ந்த கொரில்லா போராட்டக் குழு ரோமானிய படைகள் மீது அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டது, தாக்குதலின் பின் அவர்கள் ரோமானியர்களிடம் அகப்படாமல் மலைகளில் தான் ஒளிந்து கொண்டார்கள், அவர்கள் ஒளித்திருந்த அந்த மலைக்குப் பெயர் “மசாடா”, அது பாதுகாப்பான மலை என்பதால் போராளிகள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும் தமக்கு தேவையான உணவுகளை கொண்டு போய் வைத்துக் கொண்டு அங்கிருந்து தான் ரோமானியர்களுக்கு எதிரான கொரில்லா தாக்குதல்களை மேற்கொண்டார்கள்,

இறுதியில் ரோமானியர்கள் ‘மக்கபீஸ்’ அமைப்பைச் சேர்ந்த போராளிகள் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு பிடித்து விட்டார்கள் ஆனால் பல வருடங்களாக முயன்றும் அந்த மலை உச்சியை ரோமானியர்களால் அடைய முடியவில்லை, இதனை தமக்கான சவாலாகக் கருதிய ரோமானியர்கள் இறுதியில் அந்த மலையை நோக்கி வரம்பு போலொன்றைக் கட்டி நீண்ட நாள் போரின் பின் எப்படியோ மலை உச்சிக்கு சென்று விட்டார்கள்,
ரோமானியர்கள் உள்ளே வந்ததை உணர்ந்த அந்த போராளிகளின் குடும்பத்தினர் பெண்கள், குழந்தைகளென ஒருவர் மீதமில்லாமல் தற்கொலை செய்து கொள்ள, இறுதிவரை ரோமானியர்களுடன் போராடிய போராளிகள் எவருமே ரோமானியர்கள் கையில் அகப்படாமல் இறந்து போனார்கள்,

பாரிய இழப்பு, நீண்ட நாள் போர் என இறுதியில் மலையைக் கைப்பற்றி அதன் உச்சிக்கு வந்த ரோமானிய படைகளுக்கு அங்கே இறந்து போய்க்கிடந்த யூத மக்களின் பிணங்கள் மட்டுமே கிடைத்தன, ஒருவரைக் கூட அவர்களால் கைது செய்ய முடியவில்லை, அந்தக் காலம் ஓடிப் போனது அதன் பின்னர் யூதர்கள் தமக்காக இஸ்ரேல் என்றொரு தேசத்தை உருவாக்கிய நாளில் இருந்து இன்றுவரை இஸ்ரேலிய இராணுவத்தின் ஒரு பிரிவினர் தமக்கான பயிற்சி முடிந்த பின் அந்த “மசாடா” மலையில் தான் சத்திய பிரமாணம் செய்வார்கள், அந்த சத்தியப் பிரமாணம் வேறெதுவும் அல்ல ‘NEVER AGAIN’ என்பது தான் அது, அதாவது எம்மினத்துக்கு இனி ஒருபோதும் இதுபோல நடக்க நாங்கள் விடமாட்டோம் என்பது தான் அந்த ‘NEVER AGAIN’

எம்மினமும் கூட என்றோ ஒரு நாள் முள்ளிவாய்காலில் நின்று ‘NEVER AGAIN’ சொல்கிற காலம் வருமா..

அல்லது எம்மினத்தின் விடுதலைக்கு என்றைக்குமே உதவப்போகாத நைந்து போன வெள்ளை வேட்டிகளில் எது நல்ல வேட்டி என்ற வாதத்திலேயே எம் வாழ்வு முடிந்து விடுமா..?

– திரு

முள்ளிவாய்க்கால் பதினோராம் ஆண்டை கடந்து கொண்டிருக்கும் போது,வாக்குகளை வாங்குபவர்களும்,வாக்கு போடுபவர்களும் இவற்றை தேடி படிப்பதற்கும் இவற்றை சிந்திப்பதற்கும் முள்ளிவாய்க்காலில் ஒருநாள் ஒன்று கூடி Never Again சொல்லுவதற்குமான காலம் வருமா? இல்லை அந்தந்த நேரத்து சாக்குபோக்குகளை அள்ளி வீசி அரசியல்வாதிகளும்,பெரும்பான்மையான மக்களும் முள்ளிவாய்க்காலை கடந்து வேறு எங்கேதான் போவார்கள்?