பிரித்தானியா முள்ளிவாய்கால் நினைவு நிகழ்வு

168

மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நாள்

பன்னிரு ஆண்டாகியும்
ஆறாத வலி….!
நீர் வழியில் தொடங்கி
நீர்க்கரையில் முடிந்த
முள்ளிவாய்கால்
தமிழினப்படுகொலையின்
நேரடிச் சாட்சிகளில்
நானும் ஒருத்தி….!

கண்முன்னே சிதறி எரிகிறது
முள்ளிவாய்காலெனும்
யாரும் அறியாதிருந்த
ஓர் அழகிய கடற்கரை கிராமம்..!
காதைக் குடைகிறது
மக்களின் அவலக்குரலும், அழுகுரலும்
எங்கும் எம்மினச்சடலங்களும்….!

அடுத்தது என்ன செய்ய
எதுவும் புரியாதவளாக
திருவிழாவில் தொலைந்த
குழந்தை மனமாய் நானும்
திக்கறியா நிலையில்
எக்கரைக்குப் போவேன்.. ?

கொத்துக்குண்டுகளில்
சிதறுண்ட உடலங்கள்
அங்காங்கே கிடக்க
உயிா் தப்பிய
எம் உறவுகளை
அள்ளித் தூக்கி
வாகனங்களில் ஏற்றி
மருத்துவமனைக்கு
அனுப்பி விட்டு
திரும்பி பாா்த்தால்…!
விமானக்குண்டு வீச்சில்
இந்த நிமிடம் வரை
உரையாடியவா் கூட
இறந்து போய் இருப்பாா்…!

எப்படி கூறுவேன்..
கொடூரக்காட்சியை….
எப்படிச் சொல்வேன்.!!
எண்ணவே நெஞ்சம்
இயங்க மறுக்கிறது
என்ன செய்யப் போகிறோம்.?

ஒரு வீட்டில்
அனைவருமே இறந்து
கருகிய உடல்களும்
தசைகள் வேறாக
உடற்துண்டங்கள்
ஆங்காங்கே சிதறி
கருகிய நிலையில்
கருவுற்றதாயின்
வயிற்றைக் கிழித்தபடி
என்ன பிழை
செய்ததிந்தக்குழந்தை
தமிழ் தாயின் வயிற்றில்
பிறந்தது தான் தவறா..?

எப்படி உரைப்பேன்…?
தசைகள்வேறாக
உடல்கள் பாகங்களாக
சிதறி கருகிய நிலையில்
கருவுற்றிருந்த அன்னையின்
வயிற்றிலிருந்த குழந்தை
தலைகாட்டிய படி
அந்த தாயின் வயிறு கிழிக்கப்பட்டு
அக் காட்சியை
இப்போது நினைத்தாலும்
என் உடல் நடுங்குகிறது…!

பனை மரங்களின்
இடுக்குகளில்
வௌவ்வால்கள் போல்
தொங்கிய படி
எங்கும் சிதறிய
சதைத் துண்டங்கள்
யார் எவர் இறந்தார்கள்
என்று தெரியாத நிலை…..!

கத்தி அழவும் முடியாமல்
மரத்துப்போன மனசோடு
அனைவருடன் நானும்
இரத்தக்கறைகள் படிந்த
கைகளுடன் அழுவதற்கு கூட நாதியற்றவளாக
நடக்கிறேன்…!

அடுத்து என்ன நடக்குமோ
என தெரியாத
மன உணர்வுகளுடன்
இருப்பதை உணா்ந்தேன்
கண்முன்னே கணவனை,
மனைவியை, பிள்ளையை
என உறவுகளை இழந்தவர்கள்
எப்படி இருப்பார்கள்…!
உங்களால்
கற்பனை செய்து கூட
பாா்க்க முடியாது…!

பல மாதங்களாக
ஒரு நேரக்கஞ்சி மட்டுமே
எம் மக்களின் உணவாக
அன்றை நாட்களில்
அக் கஞ்சிக்காக சென்ற
சிறுவா்கள் மீது இராணுவம் விமானக்குண்டுகளை வீசினான்
எத்தனை சிறாா்கள்
சின்னபின்னமாகி
துடி துடித்து இறந்து மடிதனா் அக்கொடுமைகளை
நினைக்கும் போது
இன்றும் கூட நெஞ்சம் வெடிக்குது…!

அக்குழந்தைகள் என்ன
பாவம் செய்தாா்கள்
தமிழராய் பிறந்ததை தவிர?
இந்த இன அழிப்புக்களிற்கெல்லாம்
நாம் என்ன செய்ய போகின்றோம்??
இன்று வரை என்ன செய்கிறோம்??
இன்னும் ஏராளம் கொடுமைகள் நடந்திருக்கின்றன..!

எம் தமிழினத்தின் மீது நடந்த இனப்படுகொலையில்
ஒரு குறிப்பிட்ட சதுர நிலத்தில்
தமிழினத்தை ஒடுக்கி
நச்சுவாயுக்களாலும் நச்சு புகைக்குண்டுகளாலும்
நசுக்கி எறிந்தது சிங்களம்….!!

இறுதி நாட்கள் என்று
இன்று கூறுகின்றேன் அன்று நமக்கு தெரியாது அன்றைய நாட்கள்
தான் முள்ளிவாய்கால்
இறுதி நாள் என்று…!
நான் நின்ற இடத்திலிருந்து
குறுகிய தூரத்தில்
குழந்தைகள் பசியில்
துடித்து அழுவதையும்
பசியாற்ற முடியாமல்
பெற்றவா்கள் அழுவதையும்
கண்டேன்…!

இராணுத்தின் எறிகணைத்தாக்குதலும் துப்பாக்கி ரவைகளும்
என் தலைக்கு மேலாக
செல்லும் போது கூட
எனக்கு அக்குழந்தைகளின்
அழுகையே கேட்டது மனதில்
அவ்விடத்திற்கு சென்று
அவா்களிடம் இருந்த அரிசி பருப்பு என்பவற்றை வேண்டி
கஞ்சிகாச்சி கொடுத்த
மனநிறைவுடன்

அவ்விடத்தை விட்டு
நகா்ந்து சென்று
சில நிமிடங்களில்
எங்கோ இருந்து வந்த
எறிகணைகள் அவா்களின்
தற்காலிக தறப்பாள் குடிசைகள்
மீது வீழ்ந்து வெடித்து
மக்கள் சிதறுண்டு
என் கண் முன்னே கதறி அழுது
துடித்து இறந்தாா்கள்…!!
காயமடைந்தவா்கள்
எம்மை காப்பாற்ற
யாரும் இல்லைய இவ்விடத்தில்??
வானை பிளந்தது அவா்கள்
அவல ஓலங்கள்…!!
நானும் அவ்விடத்தில்
காயமுற்றிருந்தேன்
அவா்களை காப்பாற்ற
முடியாத கையலாகத
நிலையில் துடிதேன்…!

எங்கோ ஓா் மூலையில் இருந்த எம் சகோதரா்கள் பலா் தம் உயிரையும் பொருள்படுத்தாது…!!
அனைவரையும் ஓடி வந்து அவ்விடத்திலிருந்து…!!
காப்பாற்றினாா்கள்
காயங்களுக்கு மருந்து கட்ட மருத்துவமனைகள் இல்லாது அல்லல்பட்டாா்கள்
இறந்தவா்களை
அடக்கம் செய்ய கூட
முடியாமல் மக்கள் தினறினாா்கள்
உறவுகளின் உடலங்களை
அவ்விடங்களிலே சிலா் விட்டுச்செல்ல சிலபோ் இறந்த
இடங்களிலேயே
கிடங்கு வெட்டி புதைத்து விட்டு
கடந்து செல்கிறாா்கள்…!

எம்மினத்திற்கு ஏன் இந்தனை கொடுமைகளும் நடந்தன?
தமிழன் என்ற ஒரே
காரணத்திற்காக தானே…!

நம் தமிழினம்
ஒன்று பட்டிருந்தால் இன்று சுதந்திர தமிழீழத்தை அழங்கரித்திருக்கலாம்….!
என்பது அனைவருக்கும்
தெரிந்ததொன்றே
விழித்துக்கொள் தமிழினமே…!
எம்மினத்தின் விடுதலை என்பது
எம் கைகளில் மட்டுமே…

“மீண்டும் வோ்விடுவோம்
விழுதெறிவோம் பெருவிருட்சமாக
கிளைவிட்டெழுந்து எல்லாக்கரங்களும் சேரும் ஓா் நாளில் எழும் எம் தமிழீழம்”
-நன்றி-

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

Sajee.k