இதுதான் அந்த இடம்…

80

இதுதான் அந்த இடம்
எம் லட்சம் மக்களை கொன்ற இடம்

எம் மக்களின் கண்ணீரும் செந்நீரும்
கலந்துவிட்ட முள்ளிவாய்க்கால் இடம்.

எம் ஜனங்களின் அழுகுரல் ஓலம்
கலந்த காற்று வீசும் இடம் இது.

இங்கு படர்ந்து இருக்கும் வெறுமையில்
எம் இனம் பட்டதுயர் நாம் அறிவோம்

முன்னர் முள்ளிவாய்க்காலை கடக்கையில்
அத் தண்ணி எடுத்து வற்றாபளை அம்மனுக்கு
விளக்கு எரிப்பது நினைவுக்கு வரும்

இனி முள்ளிவாய்க்காலை கடக்கையில்
எம் ஆயிரம் விளக்குகள் அணைக்கப்பட்டது
நினைவில் வந்து தொலைக்குமே!

விஷவாயுவால் உருக்குலைந்தவர் எத்தனை?
ஷெல் குண்டுகளால் கொல்லப்பட்டவர் எத்தனை?
அரை குறை உயிருடன் புதைக்கப்பட்டவர் எத்தனை?

பால் அருந்திய நிலையிலேயே குழந்தையும் தாயும்
ஒன்றாக புதைக்கப்பட்டது எத்தனை?

அத்தனையும் நினைக்கையில் இன்றும்கூட
எம் கண்ணில் நீர் முட்டித் தெறிப்பதை யார் அறிவார்?

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கடக்கையில்
எம் ஆவி துடிப்பதை அவர்கள் அறிவார்களா?

சொந்தம் சொல்லி அழுவதற்குகூட எமக்கு
அனுமதி தர மறுக்கிறார்களே அவர்கள்.

போர்த்துக்கேயர் வந்தபோது வீழ்ந்தோம்
ஒல்லாந்தர் வந்தபோதும் வீழ்ந்தோம்
ஆங்கிலேயர் வந்தபோதும் வீழ்ந்தோம்

ஆம். வரலாற்றில் பல தடவை வீழ்ந்தோம்
ஆனால் அத்தனை தடவையும் மீண்டும் எழுந்தோம்

முன்னர் வீழ்ந்த போதெல்லாம்
மீண்டும் எழுந்து நின்ற எம் இனம்

முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தபோது மட்டும்
எழுந்துவிடாமல் கிடந்து விடுமா என்ன?

மண்ணுக்கு அடியில் இருக்கும் அருகம்புல் வேர்கூட
ஒரு துளி நீர் பட்டவுடன் பொட்டென்று முளைக்கிறது.

முள்ளிவாய்க்காலில் புதையுண்டவர்களை எருவாக்கி
புதுயுகம் ஒன்றை உருவாக்க எம்மால் முடியாதா?

குறிப்பு – எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம்.