தமிழ் தொல் குடி குல வரலாறு

467

தமிழ் குடி, குலம் பற்றி சரியான புரிதலை திருக்குறள் தொல்காப்பியம் போன்ற பல தமிழ் நூல்கள் தருகின்றனர்.

குடிப்பிறந்துகுற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான்கட்டே தெளிவு137 – (நல்லகுடியில் பிறந்து குற்றமற்றவனாய்ப் பழிக்கு அஞ்சி நாணுபவனையே (அரசன்) தேர்ந்தெடுக்க வேண்டும்)

சலம்பற்றிச்சார்பில் செய்யார்மா சற்ற
குலம்பற்றிவாழ்த்தும் என்பார்139 – (மாசிலாகுலநெறியுடன் வாழ்வோர் எவரும் வஞ்சனையுடன் வேண்டாத எதையும் செய்யார்)

மேற்கண்ட குறட்பாக்களில் ‘இல்’ , ‘குடி’, ‘குடிமை’ , ‘குலம்’ எனும் சொற்கள் ஆளப்படுகின்றன. அவற்றில், ‘இல்’ என்பது குடும்பத்தைக் குறிக்கும். ஒரு குடும்பத்தில் பிறந்த பிள்ளை பெரியவானவுடன் அவனுக்கு மணம் முடித்துத் தலையில் ‘தலைப்பா’ கட்டி அவனை ஒரு தனித் ‘தலைக்கட்டு’ ஆக்குவது தொன்றுதொட்டு வந்த தமிழர் மரபு. ஒரு பாட்டன் வழிவந்த ‘கொத்து’ எனும் குடும்ப அமைப்போ, பாட்டி வழிவந்த ‘கிளை’ எனும் குடும்ப அமைப்போ பொதுவாக ஒரு ‘கூட்டுக் குடும்ப’ மாயிருந்தது. அக் கூட்டுக்குடும்பத்தில் பல தலைக்கட்டுகள் இருந்தன. இந்தக்கூட்டுக்குடும்பம் காலத்தால் பெருத்து உடைப்பட்டு வெவ்வேறு பாட்டன்மார்களின் தலைமையில் வெவ்வேறு குடும்பங்களாகத் தனித்து வளர்ந்தன. அப் பாட்டன்மார்களெல்லாம் சேர்ந்து ஒருதனிச் சிற்றூராயினர். அச் சிற்றூரிலிருந்த ஒருமூலக்கொத்தையே ‘குடி’ என்றனர்.

அக்குடி பெருகிய போது, அவற்றில் பல குடிபெயர்ந்தன. புதுப்புது ஊர்களை உருவாக்கின. காலப்போக்கில், மூலக்குடியினரின் பெயரில் எல்லாரையும் சேர்த்து ‘குலம்’என்றாக்கினர். குடியும் குலங்களும் தொல்குடி நிலையில் தோன்றிய குமுகக் கட்டுமானங்களாகும்.

ஆநிரைபெருக்கிய முல்லை வாழ்க்கையில் தான், ஒரு குடி அல்லதுகுலத்தின் தேவைக்கும் மிஞ்சிய ‘மீத்தம்’ (Social Surplus) தோன்றியது. அதைத்தான் ‘செல்வம்’ என்றனர். அச் செல்வத்தின் முதல்வடிவம் ‘மாடு’களின் எண்ணிக்கையைப் பொருத்ததாயிருந்தது. ‘கோ+திரம்’ எனப்பிரிவதே ‘கோத்திரம்’ . இதில் ‘கோ’ என்பது தூய தமிழ்ச்சொல்லே! ‘கோத்திரம்’என்பதற்கு ‘மாட்டுக்கொட்டில்’ என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி பொருள் கூறுகிறது. இந்நிலையில், தமிழ்த் தொல்குடிக்குள்ளே பூசாரித் தொழில் தனித்தொழிலானபோது, பூசாரிக் குடும்பத்தினர் ‘பார்ப்பார்’ ஆயினர். அப் பார்ப்பார்களும் தனித்தனிக்குடியாகவும் குலமுமாகி, தங்களின் குலங்களைக் ‘கோத்திரம்’ சொல்லிக்கொண்டனர்.

‘சாதி’எனும் சொல் தொல்காப்பியத்திலேயே வருகிறது. உயிரின் ஒரு வகையைக் குறிக்கவே அச் சொல் ஆளப்படுட்டுள்ளது. வடுகப்படையெடுப்புகள் அடுத்தடுத்து வந்து குதிர்ந்தபின், தொல் தமிழரிடையே விளங்கிய‘குலங்கள்’ கல்போல் இறுகிச் ‘சாதி’களாயின. திருக்குறள் தமிழரிடையே விளங்கிய குலங்கள் சாதிகளாக இறுகியதற்குமுன் — அதாவது, பன்னூறு ஆண்டுகளுக்குமுன்– இயற்றப்பட்ட அறநூலாகும். அக் குலங்களும் சாதிகளும்ஒன்றொடொன்று மயக்கிக் கிடக்கும் இக்காலத்தில் வழங்கும் பொருளில் திருக்குறளில் வரும் குலத்தையோ குடியையோ பார்க்கக் கூடாது.

‘சாதி’ வேறு; ‘வண்ணம்’ வேறு. வண்ண முறையைத் தோன்ற வித்தாயிருந்தது கிரேக்க அறிவர் பிளாட்டோ, தாமெழுதிய ‘குடியரசு’ (The Republic) என்னும் நூல். அலெக்சாண்டர்‘பொறையன்’ (Porus) எனும் சேரர்குடியினனிடம் தோற்றுத் திரும்பி பாபிலோனில் செத்தப் பிறகு, முதலாம் டெமெட்ரியசு எனும் கிரேக்கன் பாக்டீரியாவிலிருந்து படையெடுத்து வந்து சிந்துச் சமவெளியைப் பிடித்தப் பிறகு, கிரேக்கர்கள் அமைத்த ‘இந்திய-கிரேக்க அரசு’ (Indo-Greek Kingdom) ஏறத்தாழ நூற்றாண்டுகள் அப் பகுதியை ஆண்டது. கிரேக்கர்கள் நிற வெறியராயிருந்தனர். அப்போது, வெள்ளையாயிருந்த கிரேக்கருக்கும் கருப்பராயிருந்த சிந்துவெளி மக்களுக்கும் இடையில் இனக்கலப்பு நிகழ்ந்தது. வெள்ளயான கிரேக்கர் ஒரு வண்ணம் என்றும்,மாநிறத்துக் கலப்பினரத்தவர் ஒரு வண்ணம் என்றும்,மெல்லியக் கருப்பு நிறத்தவர் ஒரு வண்ணம் என்றும்,அடர் கருப்பு நிறத்தவர் ஒரு வண்ணத்தவர் என்றும் ஆனதை அடியொற்றி இந்தியக் கிரேக்க ஆண்டைகள் கற்பித்த நிறவெறிக் கொள்கைதான் ‘நால்வண்ண முறை’.

புத்தர்கள் தான் இந் நால்வண்ண நிறவெறி முறையை கிரேக்கரிடமிருந்து முதலில் தழுவிக்கொண்டனர். அருகர்களும் அந் நிறவெறிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். இவர்களிடமிருந்து தான் வடுகப் பிராமணியம் ‘நால்வண்ணக் கொள்கை’யைக் கற்றுக்கொண்டது. வடுகர் அழைத்து வந்த புத்தர்களும் அருகர்களும் வடுகப் பிராமணர்களும் அந் ‘நால்வண்ண’ முறையைத்தமிழர்மேல் திணிக்க என்னென்னவோ செய்துபார்த்தனர். அது முற்றிலும் கைக்கூடவில்லை.

தமிழ் பேராசான் ஐயா குணா