அன்னையர் தினத்தில் இனப்படுகொலையான அம்மாக்களின் நினைவுகள்

101

“அம்மா என்றவுடன் நினைவுக்கு வருவது இச்சம்பவமே. ‘நான் அந்த அம்மாவை தூக்கியிருந்தால் உயிர் தப்பியிருப்பார். நான் இறந்துவிட்டார்’ என எண்ணியே அவ்விடத்தினை விட்டு சென்றிருந்தேன். சில மணித்தியாலங்கள் கழித்து அந்த அம்மாவை தூக்கும் போது உயிர் இருந்தது. கொஞ்ச நேரத்தில் என்ர மடியிலேயே அவர் இறந்துபோன நினைவுகள் என்னை விட்டு இன்னும் அகலவில்லை.”

தைப்பொங்கலுக்கு பிறகு தான் விசுவமடுவில் இருந்து உடையார்கட்டு பகுதிக்குச் சென்றிருந்தோம்.

28 ஆம் திகதி காலை திடீரென எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள மைதானத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டுகொண்டிருந்தது. அவ்விடத்திலேயே எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருந்தது. அதில் பலர் கொல்லப்பட்டும், படுகாயமடைந்துள்ளனர்.
சிலநிமிடங்களின் பின் மீண்டும் எறிகணைத்தாக்குதல்கள் மிக அருகில் வீழ்ந்து வெடிக்கிறது. உடனே அருகில் உள்ள பதுங்ககழிக்குள் போய்விட்டேன். பதுங்குகுழியில் இருந்து நிமிர்ந்து பார்த்தால் வீதியில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அந்த வீதியால் நிறைய சனங்கள் குளறிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. சிலர் காயங்களோடு சிலர் இரத்த ஆடைகளோடு ஓடிக்கொண்டிருந்தார். அருகில் தான் எங்கேயோ எறிகணை வீழ்ந்திருக்கிறது என்று நான் ஊகித்துக்கொண்டேன். நானும் ஜெகனும் கமராவோடு எறிகணைகள் வீழ்ந்த பகுதிக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். மக்கள் அங்கிருந்து ஓடிவருகிறார்கள்.
அதில் ஒருவர் “ தம்பி அங்க போகாதையுங்கோ நிறைய சனம் செத்துப்போச்சு, கொஸ்பிஸ்டலுக்கு முன்னால எல்லாம் நிறையபேர் செத்துக்கிடக்கினம்.” என்று சொல்லிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்.
நாங்கள் அப்;போது எறிகணை வீழ்ந்த பகுதிக்கு சென்றுவிட்டோம். வீதிக்கரையில் கூடாரங்களை அமைத்து வசித்த பலர் இறந்துகிடக்கிறார்கள். ஒரே இரத்த வெள்ளம். கமராக்குள் எல்லா காட்சிகளையும் பதிவாகிக்கொண்டிருந்தேன். பின்னர் கொஞ்சம் தூரம் போன பின்னர், மீண்டும் எறிகணைத்தாக்குதல்கள் சுதந்திரபுரம் சந்திப்பக்கம் வீழ்ந்து வெடிக்கும் சததம் கேட்டது. நாங்கள் அச்சமயத்தில் உடையார்கட்டு சாராய கடை ஒழுங்கைக்கு அருகில் நின்றவேளை “எமக்கு அருகில் செல் வீழ்ந்து வெடிச்சதுதான் எனக்கு தெரியும் றோட்டில படுத்திட்டன். அருகில் நண்பனைப்பார்த்தேன். “அண்ணை வாங்கோ திரும்பிப்போவம்” என்று கேட்கவும். எங்களைத்தாண்டி நாலைந்து எறிகணைகள் கடந்து சென்று வெடித்துக்கொண்டிருந்தது. இப்பொழுது இரண்டும் கெட்டான் நிலை முன்னேயும் செல்லமுடியாது பின்னேயும் செல்லமுடியாது. நாங்கள் நிற்பது உடையார்கட்டு வீதிக்கரையில், மீண்டும் எறிகணைகள் வீழ்ந்தால் அருகில் பதுங்குகுழிகளும் அவ்விடத்தில் இல்லை. உடனே உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் இயங்கிய வைத்தியசாலைக்கு ஓடிப்போய்க்கொண்டு இருந்தோம். வைத்தியசாலையில் இருந்து ஐம்பது மீற்றர் தூரத்தில் ஒரு அம்மா ஒருவர் இரத்த வெளியேற நிலையில் இறந்து கிடந்தார். எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருபடியால் அந்த அம்மாவையும் கடந்து ஒருவாறு வைத்தியசாலைக்கு சென்றோம்.

அங்கே வைத்தியர்களும் தாதியர்களும் நிலத்தில் படுத்திருந்தபடியே படுகாயமடைந்தவர்களுக்கு மருந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நானும் படுத்திருந்தபடியே படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு பின்பக்கத்தில் நிறைய இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் யாரென நான் அங்கிருந்து வெளியேறும் அடையாளம் காணவில்லை. இவர்கள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கும் போதே வைத்தியசாலையில் முன் வீழ்ந்த எறிகணைகளால் கொல்லப்பட்டுள்ளனர் என அருகில் நின்ற தாதி ஒருவர் எமக்கு தெரிவித்திருந்தார்.

பின்னர் சிறிது நேரம் அங்குள்ள நிலமைகளை படம் எடுத்து விட்டு வைத்தியர்களிடம் நிலவரங்களை கேட்டறிந்தோம். அந்த நேரத்தில் மீண்டும் செல் குத்தும் சத்தம் எம் காதுகளுக்கு கேட்கிறது. எல்லாரும் நிலத்தில் படுக்கவும் வைத்தியசாலை வளவில் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிறது. ஒரே புகைமண்டலம். காயமடைந்தவர்களை ஏற்றி இறக்குவதற்கு தயார் நிலையில் நின்ற பல அம்புலன்ஸ் வண்டிகள் சேதமடைந்தன.. அடுத்த கட்டட வளாகத்தில் பலர் இறந்துவிட்டனர். இப்போது நிலமை இன்னும் மோசமடைந்துவிட்டது. ஏனெனில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மிகக்குறைந்தளவான பணியாளர்களே அங்கே இருந்தனர்.
அவர்களால் நெருக்கடிகளை சமாளிக்கமுடியாமல் தடுமாறினாலும், அன்று பலருடைய உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்கள்.
எறிகணைத்தாக்குதல்கள் கொஞ்சம் குறைந்து விட்டிருந்த நேரத்தில் அப்போது வைத்தியர் சத்தியமூர்த்தி எறிகணைத்தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் உடல்களை எடுப்பது வைத்தியசாலையில் நின்ற வேறொரு அம்புலன்ஸ் வண்டியை ஒழுங்குபத்தியிருந்தார். உடனே நானும் அதில் ஏறிச்சென்றேன். அம்புலன்ஸ் வண்டிக்கு பக்கக்கதவு இல்லை. நானும் இரத்தவங்கியில் பணியாற்றிய செல்வகுமார் அண்ணையும் சாரதியோடு சுதந்திரபுரம் வீதியில் எறிகணைகள் வீழ்ந்த காணிக்குள்ளே சென்றுவிட்டோம். அங்கு ஒருதரையும் காணவில்லை. ஆனால் எறிகணைகள் வீழ்ந்த அடையாளங்கள் மட்டும் இருக்கின்றது. நாங்கள் அவ்விடத்தில் நின்று “ காயப்பட்டவை யாரும் இருந்தா கொண்டுவாங்கோ, என்று மாறி மாறி சத்தமாக கூப்பிட்டோம். அதன் பிறகே பதுங்குகுழிகளுக்குள் இருந்து ஒரிருவர் வெளியே வந்தனர். ஆனால் மிகுதி மக்கள் யாரும் வெளியே வரவில்லை. ஏனெனில் எறிகணைகள் மீண்டும் வீழலாம் என்ற அச்சத்தால் யாரும் வெளிவரவில்லை. அந்தக்காணிக்குள் மட்டும் எழுபத்தைந்து குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தனர். எல்லா வீட்டு மக்களும் பதுங்ககழிக்குள் தான் இருக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொரு பதுங்குகுழியாக எல்லாரையும் கேட்டோம் “காயமடைந்தவர்கள் இருக்கிறார்களா? இருக்கிறார்களா?” ஏனெனில் பலர் காயமடைந்தாலும் இடைவழியில் எறிகணைகள் வீழ்ந்து செத்துவிடுவோம் என்று வைத்தியசாலைக்கு வரமாட்டார்கள். அந்த காணிக்குள் இருந்து நான்கு காயமடைந்தவர்கள் மட்டும் இருந்தார்கள். “ஏனையவர்கள் வைத்தியசாலைக்கு ஏற்கனவே கொண்டு சென்று விட்டோம்” என்று அயலவர்கள் தெரிவித்தனர். அப்போது நாங்கள் இருந்த அடுத்த கொட்டிலுக்கும் ஒரு அம்மா கதறி அழும் சத்தம் கேட்டது. அங்கு போய் பார்த்தால். ஆந்த பெண்ணின் உயிர் அப்போது பிரிந்திருக்கிறது என தெரிந்தது. காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியாமல் அப்பெண் இறந்துவிட்டார். அவரது உடலையும் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தோம்.

“நான் ஏற்கனவே வைத்தியசாலைக்கு போய்கொண்டிருக்கும் போது ஒரு அம்மா ஐம்பது மீற்றர் தூரத்தில் இறந்து கிடந்தார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா.” அந்த அம்மாவையும் தூக்கி வைத்தியசாலைக்கு கொண்டு போவோம் என நானும் செல்வகுமார் அண்ணையும் அந்த அம்மாவை தூக்க “ ஐயோ அம்மா” என்று அந்த அம்மா முனகினார். எனக்கு ஐந்தும்கெட்டு அறிவும்கெட்டுப்போச்சுது. உயிரோடு இருக்கும் அம்மாவை அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி என் மடியிலேயே வைத்திருந்தேன். வைத்தியசாலை வாயிலில் போய்க்கொண்டிருக்கும் போதே அம்மாவின் கை சோர்ந்து விழுந்தது. அம்மா இறந்தவிட்டார் என்பதை விளங்கிக்கொண்டேன். வைத்தியசாலைக்குள் சென்று அம்புலன்ஸ் காயமடைந்தவர்களை இறக்கி விட்டு இறந்தவர்களை அப்படியே வைத்து விட்டு மீண்டும் நான் அருகில் உள்ள தகரக்கொட்டிலுக்கும் இருந்தேன்.

அங்கே அப்போதைய நிலைமையில் நின்று பணியாற்ற முடியாது. தொடர்ச்சியாக எறிகணைகள் வந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. குண்டுச்சிதறல்கள் வந்து எமக்கு அருகில் எல்லாம் வீழ்வது தெரிகிறது. அதனால் நான் இருந்தபடியே புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன்.

நாங்கள் காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் ஏற்றி வந்த அம்புலலன்ஸ் வண்டி இவர்களுக்கு பின்னால் நிற்கின்றது. நானும் படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன்.
இப்படத்தில் தொப்பி அணிந்துள்ள இளைஞன் அம்புலன்ஸ் வண்டியைப்பார்க்கிறார். அவர் தனது அம்மா தான் அதில் இறந்து கிடக்கிறா என்று அவரின் சாறியினை வைத்தே கண்டுபிடித்திருந்தார். அவர் ஓடிப்போய் “ஐயோ அம்மா, பக்கத்தில் இருந்தும் உன்னை காப்பாற்ற இல்லாமல் போட்டனே” என்று கதறினார்.

அவர் அந்த அம்மாவின் உடலில் வீழந்து கதறி அழும் காட்சியினை அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்ப்பதையே இரண்டாவது படத்தில் காட்டியுள்ளேன்.

உடையார்கட்டு வைத்தியசாலை என்பது உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் இயங்கியது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தபாடாசாலையில் ஏனைய கட்டடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் வசித்து வந்தனர். அங்கே இந்த அம்மாவின் மகள் வசித்து வந்துள்ளார்.
வுள்ளிபுனத்தில் இடம்பெயர்ந்து வசித்து வந்த அம்மா (இறந்தவர்) தனது மகளைப்பார்ப்பதற்கு உடையார்கட்டுக்கு வந்துள்ளார். அந்த நேரத்திலேயே எறிகணைத்தாக்குதலில் அகப்பட்டுள்ளார். இந்தநிலையில் வள்ளிபுனத்தில் எறிகணைத்தாக்குதலில் காயமடைந்த ஒருவரை அந்த அம்மாவின் மகன் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளார். இது தான் எனக்கு தெரிந்த விடயங்கள்.
நான் அந்த இளைஞனிடம் சென்று நடந்த விபரத்தைச் சொன்னேன். “ஏறிகணைகள் வீழ்ந்து கொண்டிருக்கும் போது நான் ஓடிவந்;துவிட்டேன். அந்த இடத்திலதான் உங்கட அம்மா இரத்த வெள்ளத்தில் கிடந்தா. என்னலா உதவ முடியில்லை” “இறந்துவிட்டார் என நினைத்துதான் வந்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள்” என்று விபரத்தைச்சொன்னேன். இப்படி பல அம்மாக்களை அந்நாட்களில் இழந்திருக்கின்றோம்.

– suren