முல்லைத்தீவு வைத்தியசாலையின் மருத்துவ சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்கள் யார்?

75

யாழ் போதனா வைத்தியசாலாயில் வைத்தியர்களின் பற்றாக்குறை இருந்தும் அனைத்து பிரிவுகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைவாக வைத்தியர்கள் தற்காலிகமாக சேவைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கினறனர். அவர்கள் அங்கு கடமையேற்ற பின்னரும் கடந்த மூன்று நாட்களாக அங்கு மருத்துவ விடுதிகள் இயங்கவிடாமல் தடுக்கப்பட்டமை அங்குள்ள மக்களை அவலத்துக்குள்ளாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐப்பசி மாதம் தொடக்கம் இரு வைத்தியர்கள் நிரந்தரமாகவும் மேலும் இரு வைத்தியர்கள் இரண்டு கிழமைக்கு சுற்றோழுங்கிலும் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

வடக்கில் எந்த ஒரு மேலதிக சிகிச்சையையும் வழங்குவதற்கு போதனா வைத்தியசாலை தயார் நிலையில் இருக்கின்றது. வைத்தியசாலை நோக்கி சிகிச்சை பெற நேரடியாக வருகின்றன நோயாளிகளுக்கு மேலதிகமாக பல பகுதிகளிலிருந்தும் அம்புலன்ஸ் வண்டிகளிலன் ஊடாக எடுத்து வரப்படும் நோயாளிகளுக்கான சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகள் வைத்தியர்களின் பற்றாக்குறையினால் கடும் சிரமத்தை எதிர் நோக்குகின்றன. இருப்பினும் இருக்கின்ற வசதிகளோடு சேவைகளை வழங்குவதற்கான ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் மேலும் இரண்டு சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் போதனா வைத்தியசாலையின் பற்றாக்குறையின் மத்தியிலும் முல்லைத்தீவு வைத்தியசாலையின் மருத்துவ விடுதிகள் இயங்கவில்லை என்ற காரணத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
முல்லைத்தீவு மருத்துவமனையில் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கடமைக்குச் சென்ற 2 வைத்தியர்கள் மகப்பேற்று விடுதியிலும் 4 வைத்தியர்கள் மருத்துவ விடுதிகளில் கடமையாற்ற அங்கு தயாராக இருக்கின்றனர்.

இந்நிலையில் வைத்தியர்கள் கடமையாற்ற தயார் நிலையில் இருந்த போதும் கடந்த மூன்று நாட்களாக அங்கு மருத்துவ விடுதிகள் திறக்கப்படாமல் தடுக்கப்பட்டமை வேதனைக்குரியது.

முல்லைத்தீவு மருத்துவமனையின் மருத்துவ விடுதிகளில் கடமையாற்ற அங்கிருக்கின்ற வைத்திய நிபுணர் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கடமைக்குச் சென்ற வைத்திய அதிகாரிகள் இருந்தும் அங்கு விடுதிகளில் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் அம்புலன்ஸ் வண்டிகளின் ஊடாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். இதனால் நோயாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள்.

குறிப்பாக முல்லைத்தீவைச் சேர்ந்த வறிய மக்கள் அங்கிருக்கின்ற தனியார் நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. இவர்களுக்கு அரச மருத்துவமனையின் சேவை இன்றியமையாதது.

அதேசமயம் முல்லைத்தீவு மருத்துவமனையின் சில பிரிவுகள் சிறப்பாக இயங்குகின்றமை மிகவும் பாராட்டுதற்குரியது.

ஆகவே முல்லைத்தீவைச் சேர்ந்த பல ஆளுமை படைத்த வைத்தியர்கள் அங்கு கடமையாற்றுவதனால் விரைவாக இந்நிலையே போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைத்தீவு மக்களின் சுகாதார சேவை உங்கள் கைகளில் தான் உள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள் தனது முகநூல் வழியாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.