முல்லையில் குருந்துமலை விகாரை கட்டுமானப் பணிக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

146

முல்லைத்தீவு குருந்துமலையில் விகாரை கட்டுமானப் பணிகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் அவர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்வதற்காக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொல்பொருள் திணைக்களம் மாவட்ட அதிகாரி ஆகியோரை நாளைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

முல்லைத்தீவு குருந்துமலையில் விகாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை மன்றில் அழைக்குமாறு கிராம மக்கள் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் இன்று நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை அனைத்து விண்ணப்பம் செய்துள்ளார். அதனடிப்படையில் வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்டுள்ளது.

குருந்துமலையில் வைரவர் சூலம் உடைத்து அகற்றப்பட்டு அங்கு விகாரை அமைக்கும் கட்டுமான பணிகள் நாளை ஆரம்பிக்கவுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும். அதனால் அந்த கட்டுமானப் பணிகளை நிறுத்த கட்டளையிட வேண்டும் என்று சட்டத்தரணி சுகாஷ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கின் எதிர்த்தரப்பினரான முல்லைத்தீவு பொலிஸார், தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகததால். வழக்கை நாளை வரை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

அத்துடன் தொல்பொருள் திணைக்கள அதிகாரி, முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய இருவரையும் நாளை நீதிமன்றில் முற்படுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.