நண்பர் கோபி (ஒரு பேப்பர் ஆசிரியர்) ஒரு கருத்து கூறியிருந்தார். “முன்னாள் போராளி என்று எவரையும் குறிப்பிட முடியாது, போராளியானவர் எப்பொழுதும் போராளி, முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் இப்பொழுது போராட்டத்தை விட்டுக் கொடுத்தோ, காட்டிக் கொடுத்தோ செல்பவராக இருந்தால், அவரை முன்னாள்போராளி என்று எப்படி அழைக்க முடியும். போராளி என்ற சொல்லின் அர்த்தம் அதில் இழக்கப்படுகிறதல்லவா, எனவே போராளி என்பவர் எப்பொழுதும் போராளி. அவர் எந்த ஆயுதம் துÖக்குகின்றார் என்பது முக்கியமல்ல, அவர் எச்சூழலில் இருக்கின்றார் என்பது தான் முக்கியம். அச்சூழலுக்கு ஏற்ப தன் போராட்ட அணுகுமுறையை மாற்றிக் கொள்வாரே தவிர, போராட்டக் குழாம்சத்தை அல்ல”
முள்ளிவாய்க்கால் துயர் நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. வரலாற்றின் பக்கங்களில் இக்காலம் குறுகியது ஆயினும், நமது வாழ் நாளில் இது நெடியகாலம். இந்த நான்கு ஆண்டுகள் எம்மை எப்படிப் புரட்டிப் போட்டது? இந்த நான்கு ஆண்டுகளில் நாம் என்ன செய்து முடித்தோம். இமயமலை சரிந்தாற் போல எம் இழப்பை நாம் எவ்வாறு எதிர் கொண்டோம்? சுமார் நாற்பதினாயிரம் மாவீரர்களும், இலட்சக் கணக்கான மக்களும் தம் உயிரை சிந்தியதில் நாம் எதனையும் பெற்றுக் கொண்டோமா? அல்லது பெற்றுக் கொண்டதை பேணிக் கொண்டோமா?
என் பேனா, மேலும் கேள்விகளை எழுப்பியபடியே இருக்கின்றது. ஆயினும் என்னசெய்கின்றோம் நாம்? நம் கண்களில் நாமே குத்துகிறோம், நம் கால்களை நாமே இடறிவீழ்த்துகிறோம். வெளியிலிருந்து நம்மை பிரித்து சண்டையிட வைக்க எவரும் வரத்தேவையில்லை என்
னும் படிக்கு வாழ்கின்றோம். ஆயினும், ஒரேயடியாக நாம் கலங்கிப் போகத்தேவையில்லை. நமக்கு நம்பிக்கையூட்டும் சக்திகளும், `மெல்ல மெல்ல’ முளைத்து எழுகின்றன. ‘மெல்ல மெல்ல’ என்ற பதத்தை கவனமாகவே பயன்படுத்துகின்றேன். மிக மெதுவான ஓர் அசைவு தான் இவை. இப்பொழுது தான் கருக்
கட்டுகிறது. ஒரு கீறு மண்ணில் மேலெழுகிறது. இலக்குத்தெளிவாக இருந்தாலும், இலக்கில் உறுதி இருந்தாலும், கால்கள் திடமாக இருந்தாலும், கவனம் பிசகாது இருந்தாலும், பயணத்தில் தெளிவு இருந்தாலும் மெதுவாகவே நகர்கிறது.
அது பரவாயில்லை, அதனால் பாதகமில்லை. எங்கள் பணி என்னவென்றால், அத்தகைய சக்திகளை இனம் காணல், கண்டபின் அவர்களுக்குத் தோள் கொடுத்தல், அரசியலாக அத்தனையையும் சிந்தித்தல், சிந்தனையில் தெளிவு பிறந்த பின் செயற்படுதல். ஈழத் தமிழ்த் தேசியத்திற்கான தாயகம் ஒன்று உண்டு. தன்னாட்சி செய்ய அதற்கு உரிமையும் உண்டு. என்பதனை யார் தமது கொள்கையாக உண்மையாக முழங்குகிறார்களோ, அதை நோக்கி மெதுவாக அங்குலம் அங்குலமாக ஆழமாக யார் அடியெடுத்து வைக்கிறார்களோ அவர்களை நாம் அணுகுவோம். அணுகி அவர்களுடன் அணைவோம்.
அவ்வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மீது என் பரிவு இப்பொழுது படர்கிறது. தொடர்ந்து அந்த அமைப்பையும், கஜேந்திரகுமாரையும் கவனித்து வந்ததில் அவர்கள் மீதான நம்பிக்கை என்னுள் வேர் விடுகின்றது. தாயகம், தேசியம், தன்னாட்சி என்பன மீதான
அவர்களின் விடாப்பிடியான அக்கறை, அவர்களது இரு தேசக் கோட்பாடு, கட்சியோ, கட்சியின் சின்னமோ முக்கியமல்ல, கொள்கை தான் முக்கியம் என்பதான அவர்களது பிரகடனம் யாவும், அவர்கள் பால் எங்களை ஈர்க்கின்றது.
ஈழத்தமிழ் தேசிய வரலாற்றில், இவ்வாறான கொள்கைப் பிடிப்பு, நமது தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பின்னர் இவர்களிடம் தான் காண முடிகிறது. விலை போகாமை, விட்டுக் கொடுப்பற்ற தன்மை என்று இன்னோரன்ன பல அம்சங்களை இவர்களிடம் காண்கின்றேன். எங்கேயிருந்து இந்த உறுதிப்பாடு பிறந்தது என்பது தான் என் ஆச்சரியம். நிச்சயமாக நமக்குள்ளே ஒருவர் இருந்து அவர் வழி நடக்கின்றமையால் விளைந்தது இது. அத்தலைவர் கட்டிய மாளிகையிலிருந்து தான் அவரை எதிர்போரும் கூக்குரல் இடுகின்றார்கள், அவரை ஆதரிப்போரும் குரல் கொடுக்கின்றார்கள்.
அடுத்து நம்பிக்கை தரும் சக்தி என்று நாடு கடந்த அரசாங்கத்தை குறிப்பிடுவேன். அதன் பிரதமர் உருத்திரகுமாரனும் நம்பிக்கைக்குரிய ஒருவரே. நாடு கடந்த அரசாங்கத்தை தொடந்து கவனித்து வருகையில் அவர்கள் எவ்விதத்திலும் ஏமாற்றமளிப்பவர்களாகவோ, மழுப்பல்வாதிகளாகவோ தென்படவில்லை. தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவையே அவர்களது கொள்கை முழக்கமாக இருக்கின்றது. பிரிந்து செல்வது ஒன்று தான் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்று அவர்களும் உளமார நம்புகின்றார்கள். புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த அரசாங்கம் இருப்பதனால் அவர்களது கொள்கை முழக்கம் உறுதியோடும், பயமற்றும் வெளிப்படுகின்றது. சுதந்திரமான சிந்தனையை அவர்களிடம் காண்கின்றேன்.
இவ்விரு அமைப்புக்களையும் பலப்படுத்துவது, புலம்பெயர்தேசத் தமிழர்களது கடமை. இவ்விரண்டு அமைப்புகளும் மெதுவாக அடியெடுத்து வைக்கின்றது என்பது உண்மை. அதற்கு மிகமுக்கிய காரணி பொருளாதாரம் தான் என்பேன். ஆட்பலம் இன்மையும் அடுத்த காரணம். அதற்குக் கூட பொருளாதாரம் தான் காரணம். எனவே, எம்மாலான பங்களிப்பையும் நல்குவது நலம்.
இவற்றைக் கூறுகின்றபோது ஒரு தயக்கம் எனக்கு நேருகின்றது. ஒரு கலைஞனாக என்னைக் காட்டிக் கொள்கின்ற போது, ஓர் அரசியல் பிரகடனம் இங்கு எதற்கு? என்றுசிலர் கேட்கின்றார்கள், என்னுள் நானும் கேட்கின்றேன். ஒருமுறை நண்பர் சோபாசக்தி எனக்குக் கூறியதையே கூறுகின்றேன். `இந்த அரசியல் உணர்வு இல்லை என்றால், எங்கள் படைப்புகளுக்கு அர்த்தமில்லை’ தமிழ்த் தேசவிடுதலைக்கு எதிரானவரே இக்கருத்தை வைத்திருப்பின் விடுதலையை ஆதரிப்போர் இக்கருத்தினில் எவ்வளவு உறுதி எடுப்பர்.
கலைஞர்கள் யாபேரும், ஏதோ ஒரு அரசியலால் உந்தப்பட்டே வாழ்கிறார்கள். சில படைப்புக்களில் அது வெளிப்படையாகத் தெரிகிறது. சிலவற்றில் அது உள்ளுறைந்து காணப்படுகிறது. காசுக்காக கலையை வியாபாரம் ஆக்குபவர்களிடம் கூட ஓர் அரசியல் இருக்கின்றது. அத்தகைய அரசியலையும், கலைஞர்களையும் பிரிக்க முடியாது என்பது தான் உண்மை. ஆனால், ஓர் அரசியல்வாதிபோல கலைஞர்களும் இயங்கலாமா என்று கேட்டால், சூழல் தான் அதனை தீர்மானிக்கும் என்று பதில் சொல்வேன். முள்ளிவாய்க்கால் துயர் நிகழ்ந்து இந்நான்கு ஆண்டுகளின் பின்னரும் நாம் வேறு எதைத் தான் செய்ய முடியும்?