
சிங்கள பேரினவாத பௌத்த அரசுக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் அவர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்திவரும் சிங்கள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சிங்கள நடிகர்களுக்கு விருப்பமில்லையா? சிங்கள அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். பூர்விகமாக தன்னை தமிழகத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போதோ, அங்குள்ள இலங்கை தமிழர்களுக்காகவோ அவர்களின் உணர்வுகளை மதித்து இதுவரை எந்த விதமான நற்செயலையும் அவர் செய்ததில்லை. மாறாக தமிழின அழிப்பை முன்னெடுத்த சிங்கள பேரினவாத பௌத்த அரசின் எமபாதகனான இராஜபக்ஷேவின் ஏவலாளிகளாக உழைத்தார்கள் முத்தையா முரளிதரனும் அவரது குடும்பமும். ஈழத்தில் நடந்த கோரமான இனப்படுகொலையின் தாக்கம் தமிழக அரசியலில் எதிரொளிக்கும் அளவுக்கு வீரியமாக இருந்தாலும், தன் சொந்த நிலத்தில் தன் சகோதரர்கள் செத்து மடிந்த அவ்வருடத்தினை (2009) தன் வாழ்நாளின் மகிழ்ச்சியான ஆண்டாக ஒரு பேட்டியில் தெரிவித்தார் முரளிதரன்.
தொடர்ந்து சிங்கள பேரினவாத அரசுக்கு உடந்தையாக இருந்ததுடன், இன அழிப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் எல்லாம் தங்களது குழந்தைகளை காணவில்லை என பொய் கூறுகிறார்கள் என பேட்டி தந்தார் முரளிதரன். நடந்து முடிந்த இலங்கை தேர்தலில் இராஜபக்ஷேவுக்கு சாதகமாக இருந்ததுடன், முரளிதரனின் சகோதரர் இராஜபக்ஷேவின் கட்சி சார்பாக தேர்தலிலும் போட்டியிட்டார். இலங்கை கிரிக்கெட் அணி என்பதைவிட அதனை சிங்கள அணி என்று கூறினால் அது மிகையாகாது. One Team, One Nation என்பதை தங்களது அணியின் Logo வாக அறிவித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். நான் சிங்கள அணிக்காக விளையாடுகிறேன். என்னை எந்தவொரு சிங்களனும் வெறுத்து ஒதுக்கவில்லை. என்னை கொண்டாடவே செய்கிறார்கள்” என்றார் முரளிதரன். அப்படி இருக்க சிங்கள அணிக்காக உழைத்து உலக சாதனைகள் புரிந்த சிங்கள அணியின் நட்சத்திர வீரருக்கான வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒரு சிங்கள நடிகன் கூட கிடைக்காமல் போனது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அப்படி சிங்களத்தின் இனவாத அணியாக மாறிப்போன இலங்கை கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாட்டிக்கொண்டு சிங்கள அணிக்காக விளையாடிய ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்தை கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரம் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இந்த செய்தி அரசல்புரசலாக வெளியாகியிருந்தாலும் இன்று விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
இதுபோல் கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய விளம்பரப்படமான ‘Mandi App’ விளம்பரத்தில் நடித்ததால் வியாபாரிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ‘லைகா’ எனும் சிங்கள நிறுவனம் தயாரித்த காரணத்திற்காக ‘கத்தி’ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியது. இராஜபக்ஷேவினை சந்தித்தமையால் திமுகவின் கனிமொழி எம்.பி, தொல். திருமாவளவன் எம்.பி போன்றோர் சர்ச்சையில் சிக்கினார்கள். சிங்கள தேசத்தில் வர்த்தக முதலீடு செய்தமைக்காக திமுகவின் ஜெகத்ரட்சகன் விமர்சிக்கப்பட்டார். இவையெல்லாம் கூட பிஸ்னஸ், அரசியல் மரியாதை நிமித்தம் என்று கூறி முடிக்கலாம். ஆனால் இலங்கை கொடியுடன் சிங்கள பேரினவாத லோகோவுடன் கூடிய ஜெர்சியை அணிந்து திரையில் வரப்போகிறார் விஜய்சேதுபதி. முன்னொரு காலத்தில் பூர்விகமாக தமிழகத்தை கொண்டவர் எனும் ஒற்றை காரணத்தை தவிர தமிழர்களின் நலன் காக்க ஒரு சாதாரண மனித பண்பாளராக கூட இல்லாத முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தமிழக திரையரங்குகளில், சிங்கள பேரினவாத கொடியுடன் கூடிய ஜெர்சியை அணிந்து விஜய்சேதுபதி வரும்போது என்ன செய்யப்போகிறார்கள் தமிழர்கள்? பாலபிஷேகம் செய்யப்போகிறார்களா? செருப்பு மாலையை அணிவிக்கப்போகிறார்களா? அதேசமயம் இந்தியாவுடன் இலங்கை தோற்கும்போதெல்லாம் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டார்களே அவையெல்லாம் படத்தில் காட்சியாக்கப்படுமா? இனப்படுகொலை குற்றவாளியான இராஜபக்ஷேவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாரே முரளிதரன் அவை தான் படமாக்கப்படுமா? இப்படம் தமிழகத்தில் வெளிவருமாயின் தமிழீழ போராட்டத்தை இதைவிட யாராலும் கொச்சைபடுத்திவிட முடியாது. தமிழ், தமிழர் என்பது வெறும் பிறப்பினால் மட்டுமே கிடைப்பதல்ல என்பதை இனியாவது தமிழர்கள் உணர்ந்துக்கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!