இன்று வரை நியமனம் தொடர்பாக எனக்கு எதுவும் அமைச்சரினால் அறிவிக்கப்படவில்லை. நான் இப்போதும் ஜனாதிபதி செயலணியில் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன் . என சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு தமிழ் புத்திஜீவிகளை நியமிப்பது தொடர்பில் ஏழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இவ் அறிக்கையில்,
இந்த நியமனம் தொடர்பாக பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு விசாரிப்பதனாலும் சிலர் நான் ஏற்கெனவே நியமனம் பெற்றுவிட்டதாக கருதிக் கொண்டு பல்வேறு ஆவணங்களையும் எனக்கு அனுப்பி வரும் நிலையில் இது தொடர்பான உண்மை நிலையை தெளிவு படுத்துவதற்காக இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகிறேன்.
ஜனாதிபதி 2019 நவம்பர் பதவிக்கு வந்தபின்னர் ஜூன் 2020 இல் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முகாமைத்துவத்துக்காக சிங்களவர்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலணி வர்த்தமானி (gazette) மூலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏன் கிழக்கு மாகாணம் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருந்தது மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் ஒரு மாகாணத்தில் எதற்காக சிங்களவர் மாத்திரம் உள்ளடக்கப்பட்ட செயலணி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது தொடர்பாக பலத்த கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன .
இந்த நிலையில் 2020 ஆகஸ்ட் பதவி ஏற்ற சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவையில் பதவி வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுத்தலைவர் அனுமதியுடன் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த செயலணியில் உள்வாங்கப் போவதாக முதலில் அறிவித்து பின்னர் போரினால் தமிழ் புத்திஜீவிகள் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டதாகவும் சமூக உணர்வுடன் செயலணியில் பங்காற்ற தமிழர் எவரும் முன்வரவில்லை என்று ஊடகங்களுக்கு அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த செயலணியில் ஏற்கெனவே ஒரு மருத்துவ நிபுணரும் தொல்லியல் துறை சாராத பல நிபுணர்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கும் நிலையில் அமைச்சரின் அழைப்பை ஏற்று நான் ஒரு தமிழராக இதில் அங்கம் வகிக்க தயாராக இருப்பதாக ஊடகங்களுக்கும் ஊடக நண்பர்கள் மூலமாக அமைச்சருக்கும் தெரிவித்தேன். இதை தொடர்ந்து அமைச்சர் தன்னை சந்திக்குமாறு விடுத்த அழைப்பை ஏற்று 5.09.2020 அமைச்சரை சந்தித்தேன்.
இந்த சந்திப்பில் செயலணியில் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் கலாநிதி பட்டம் பெற்ற முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பெண் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் அமைச்சருக்கு பரிந்துரை செய்ததுடன் மேலும் அதிக தமிழர்களை நியமிக்குமாறு கோரி இருந்தேன். அமைச்சரும் எனது கருத்துக்களுக்கு அந்த நேரம் உடன்பட்டிருந்தார்.
அதன் பின்பு 9.9.2020 புதன்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மூலமாக செயலணியில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரின் உதவியாளரினால் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று வரை இந்த நியமனம் தொடர்பாக எனக்கு எதுவும் அமைச்சரினால் அறிவிக்கப்படவில்லை. நான் இப்போதும் ஜனாதிபதி செயலணியில் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன் .
ஏற்கெனவே இது தொடர்பாக தொல்லியல் நிபுணர்களின் ஆலோசனைகளை நான் பெற்றுக் கொண்டுள்ளதோடு பலர் இது தொடர்பான ஆவணங்களை எனக்கு தந்துதவ தயாராக இருக்கின்றனர். இதன் மூலமாக விஞ்ஞான ரீதியாக ஆதாரங்களுடன் கிழக்கில் தமிழர்கள் மற்றும் சைவத்தின் தொன்மையை அதாவது புத்தர் தோன்றிய 2643 வருடங்களுக்கு முன்னரே கிழக்கில் சைவமும் தமிழும் இருந்தது என்பதை ஐயம் திரிபற நிரூபிக்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
இருப்பினும் பௌத்தம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பிறகு வந்த சிங்கள பௌத்த மன்னர்களின் ஆட்சியின் கீழ் கிழக்கு மாகாணம் இருந்திருக்கலாம் என்ற உண்மையையும் அதன் காரணமாக கிழக்கில் இருக்கக்கூடிய தொல்லியல் ஆதாரங்களை நிரூபிப்பதற்கும் தமிழர் பூர்வீக வரலாறுகளை திரிபு படுத்தாமல் உண்மைகளை கண்டறிவதற்கும் செயலணி உறுப்பினர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க நான் தயாராக இருக்கிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயினும் அமைச்சருடனான சந்திப்பின் போது அவரே கவலை வெளியிட்டு இருந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மாத்திரம் வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகளை ஸ்தாபிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. இந்த நிலையில் தமிழர்களை செயலணிக்கு நியமனம் செய்வதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை அமைச்சரே தெளிவாக்க வேண்டும். கிழக்கை சேர்ந்த பல பிராந்தியவாதிகள் நான் ஏற்கெனவே இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டு விட்டது போல் எனக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியுடன் பல பொய் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் அமைச்சரின் விரைவான பதில் எனக்கு பேருதவியாக இருக்கும்.