முஸ்லிம் சமூகத்தையும் தமிழ் சமூகத்தையும் மோத விட்டுப் பார்க்க இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது . இதற்காக ராஜபக்சே சகோதாரர்கள் தங்கள் முகாமில் உள்ள தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களையும் முஸ்லீம் அரசியல்வாதிகளையும் நேர் எதிர் திசைகளில் நிறுத்தி வெறுப்பு அரசியல் செய்து வருகிறார்கள் .
மறுபுறம் ராஜபக்சே அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் அரச நிருவாகத்தை முழுமையாக சிங்கள மயப்படுத்தி இருக்கிறார்கள் . இதுமட்டுமில்லாது தமிழ் பேசும் சமூகத்தை புறம் தள்ளி சிங்கள பேரினவாதிகளை உள்ளடக்கி தொல்லியல் திணைக்களம் ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் . இதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடத்தை சிதைக்கும் வேலைகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். தொல்லியல் திணைக்கள உறுப்பினர்களே பகிரங்கமாக கிழக்கு மாகாணத்தில் 2000 இற்கு மேற்பட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவிப்பதை அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது
இந்த இடத்தில சில உண்மைகளை நாங்கள் ஏற்று கொள்ள வேண்டும்..
1. முஸ்லிம் இனத்தவர்களில் தமிழர்களுடைய போராட்டத்திற்கு குந்தகமாக நடந்து கொண்டுள்ளார்கள் என்பது உண்மை. அதே போல எங்கள் தரப்பிலும் பல மோசமான தவறுகள் நடந்து இருக்கிறது.
2. முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழ் தேசிய அரசியல் தொடர்பில் தெளிவற்ற பார்வை உடையவர்கள். என்பது உண்மை. அவர்களுடைய அரசியல் தொடர்பிலும் அவர்களுக்கு தெளிவற்ற பார்வை இருக்கிறது
3. முஸ்லிம் அரசியல்வாதிகள் பேரினவாத அரசியல்வாதிகளோடு சேர்ந்து குறிப்பாக போருக்கு பிந்தைய சூழலில் தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்குகிறார்கள் என்பதிலும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. குறிப்பாக அதாவுல்லா, ஹிஸ்புல்லா, ரிசார்ட் பதியுதீன், அமீர் அலி, ஹாரிஸ் போன்றவர்கள் தமது அரசியல் அதிகார நலன்களுக்காக சிங்கள பௌத்த பேரினவாத அரசியலோடு ஒத்துப் போவதோடு தமிழ் விரோத அரசியலை செய்கிறார்கள் என்பதும் உண்மை .
4. முஸ்லீம் மக்களின் கலாசார அரசியல் அரபுவாத முழுமைவாதத்தால் (pan arabism) பாதிக்கப்பட்டுள்ளது . இது உள்ளக ரீதியில் அச்சமூகத்தில் பெரும் சமூக பின்னடைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது . (தமிழ் அரசியலில் பரப்ப முயற்சிக்கப்படும் இந்துத்துவ அரசியலும் எம்மை அந்நிலைக்கு தள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை).
5. அதே வேளை முஸ்லீம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வுக்கு (islamaphobia) ஒரு உலகளாவிய பரிணாமம் (international dimension) உண்டு . முஸ்லிம்களுக்கு எதிராக உலகளாவிய ரீதியிலும் தற்போது இலங்கையிலும் அரங்கேற்றப்படும் எதிர்பரசியலுக்கும் இந்த சர்வதேச பரிணாமத்திற்கும் தொடர்பு இருக்கிறது .
ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் முஸ்லிம் மக்களையும் ஒரே தராசில் வைத்து நாங்கள் மதிப்பிடுவது மிக தவறான விடயமாக இருக்கும். அதே போல தமிழ் சமூகத்தின் சுயநிர்ணய அரசியலின் அறமானது எல்லா விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க சொல்லும் தன்மையானதாக இருக்க வேண்டும் . அத்துடன் வடக்கு கிழக்கு எமது தாயகம் என்பதோடு அதில் முஸ்லிம்கள் எமது சக பிரயாணிகள் என்பதையும் நாங்கள் ஏற்று கொள்ள வேண்டும் . வடக்கு கிழக்கில் தமிழர்கள் ஒருபோதும் பேரினவாத அரசியல் செய்ய கூடாது. மேலும் சிங்கள பௌத்த சமூகத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான சமூக உறவின் விரிசலுக்கு நீடித்த வரலாறு இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . தமிழ் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் அவ்வாறான ஆழமான வெறுப்புணர்வு இல்லை என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ளுவது அவசியமாக இருக்கிறது
இந்த புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் இணைந்து செயல்படுவது மிக அவசியம் . இதை தவிர விட்டால் கிழக்கு மாகாணத்தை முழுமையாக இரு சமூகங்களும் சிங்கள நிகழ்ச்சி நிரலுக்குள் பலி கொடுக்க நேரிடும்
Via இனமொன்றின் குரல்