நம் நிலத்தில் நாம் நிலை பெறாமல் உரிமைகளை வெல்ல முடியாது

77

தமிழர்களே.. விழித்துக் கொள்ளுங்கள்!

பொதுவாக வெளியூர்களில் விருப்பமின்றி சிக்கிக் கொண்ட பலருக்கும், உள்ளூர ஒரு ஏக்கம் இருப்பது உண்டு. ஊர் திரும்புதல் குறித்து அவர்கள் அடிக்கடி மனதில் அசை போடுவதும் உண்டு. இதில் இன வேறுபாடுகள் கூட இருந்தது இல்லை. யாராக இருப்பினும் அவரவர்க்குரிய சொந்த ஊர் திரும்பி, நிம்மதியாக வாழ வேண்டுமென ஆசைப்படுவதை நாம் அறிவோம். அதன்படியே, கொரானா எல்லோரையும் அவரவர் ஊருக்கு துரத்தியடித்து இருக்கிறது. இந்த இடத்தில்தான் நாம் நின்று நிதானமாக சில திட்டமிடல்களை உருவாக்க வேண்டும்.

இயற்கை நமக்காக ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருப்பதாகவே இந்த சூழலை நாம் ஏற்க வேண்டும். வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு திரும்புகின்றனர். அதேபோல, வெளி மாநிலங்களில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும் நம் மாநிலம் நோக்கிப் படையெடுக்கின்றனர்.

வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட தமிழர்கள் பலரும் உணவின்றிக் கதறி அழும் காணொளிகள் பரவிக் கொண்டு இருக்கின்றன. அதேபோல எல்லா மாநிலத்திலும் வெவ்வேறு மொழி பேசுகின்ற பலரும் கண்ணீர் சிந்துவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. சாரை சாரையாக குடும்பம் குடும்பமாக நடந்தே சொந்த நிலம் நோக்கி, பெருந்திரள் மக்கள் கூட்டம் இடம்பெயர்கின்ற கொடூரமான காட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது. இதுபோன்ற பேரிடர் காலங்களில்தான் தாய் நிலத்தின் அருமையையும் எல்லோரும் உணர முடிகிறது. அதனால் நாம் இப்பொழுதேனும் பாடம் கற்க வேண்டும். அடுத்த திட்டமிடலுக்கு தயாராக வேண்டும்.

கொரானா இடர்பாடுகள் இந்த ஆண்டு முழுவதும் நீளும் என்பதை எல்லோரும் அறிவோம். ‘கொரானாவோடு வாழ பழகிக் கொள்ளுங்கள்’ என்று அரசுகளும் அறிவிக்கத் தொடங்கிவிட்டன. எனவே நம் நிலத்தைவிட்டு வெளியேறிய எந்த கூலித் தொழிலாளியும் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு திரும்ப வரப்போவதில்லை. அதேபோல, தமிழர்களும் இனி தாய் நிலத்தைவிட்டு வெளியேற வேண்டாம்.

‘சொந்த நிலத்தில் தேனீர் கடை வைத்து பிழைப்பதா? அது அவமானம்’ என்று நினைத்துதானே வெளி மாநிலங்களில் மாடு போல உழைக்க கிளம்பினீர்கள். அந்த இடத்தில்தான் ‘இஞ்சி டீ கடை’ போட்டு வளர்ந்து நின்றனர் வட மாநிலக் கூலிகள். சொந்த நிலத்தில் சீ.. சீ.. என்று எதை எல்லாம் நீங்கள் ஒதுக்கினீர்களோ, அதையெல்லாம் செய்துதான் இந்த நிலத்தில் மற்ற மாநிலக் கூலிகள் முதலாளிகளாக வளர்ந்து நின்றனர். இதுதான் நம் கடந்த கால வரலாறு. அந்த வரலாற்றுப் பாடத்தில் இருந்து நாம் கற்க வேண்டாமா?

நீங்கள் பெரிய பெரிய நகைக் கடைகளை நிறுவி முதலாளிகளாக மாறுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு பானிபூரிக் கடை கூடவா உங்களால் திறக்க முடியாது?. பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல்களை கட்டுங்கள் என்று சொல்லவில்லை, ஒரு மாலை நேர தள்ளுவண்டி கடையைக் கூடவா உங்களால் நடத்த முடியாது?

லாக்டவுன் முடிவுறும் போது, ஏராளமான பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும். ஏனெனில், ஊர் சென்ற கூலிகள் உடனடியாக திரும்பி பணிகளுக்கு வர முடியாது. அத்தகைய சிக்கலான பொருளாதார சூழல்தான் நிலவும். இந்த சூழலைப் பயன்படுத்தியேனும் அவரவர் படிப்பு தகுதிகளுக்கு ஏற்ப எல்லாப் பணிகளிலும் சென்று அமருங்கள். வாய்ப்புள்ளவர்கள் சிறு முதலீட்டில் தொழில் தொடங்குங்கள். கடுமையாக உழைக்கத் தயாராகுங்கள். மிக மிக முக்கியமாக, குடிப்பழக்கத்தை முழுமையாக விட்டொழியுங்கள்.

தமிழகக் கூலிகளின் மீது வைக்கப்படும் முதன்மையான குற்றச்சாட்டே அவர்களின் குடிப்பழக்கமும், சோம்பேறித்தனமும்தான். குடிப்பழக்கமும், சோம்பேறித்தனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்று மற்றொன்றைச் சார்ந்தே நிற்கும்.

முதலில் சிறு முதலீட்டில் முதலாளிகளாக மாறுவதும், பிறகு அத்தொழிலை வளர்த்து எடுக்க கடுமையாக உழைப்பதும் எவ்வளவு அவசியமோ, அதற்கு நிகரான அவசியம் குடிப் பழக்கத்தை ஒழிப்பது. குடிப்பழக்கத்தை வைத்துக் கொண்டு கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கினாலும், தொழில் விருத்தி அடைய வாய்ப்பில்லை. குடி குடியைக் கெடுத்தே தீரும்.

கொரானா தடை காலம் முடிந்து, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட வருமானம் குறைவாகவே வந்துகொண்டு இருக்கிறது. காரணம், ஒரு பக்கம் வருமானம் இன்றி தவிக்கும் மக்கள், மறுபக்கம் மறந்த குடியை இத்தோடு தலை முழுகிவிடுவோம் என்று நினைக்கும் சிலரது எண்ணம்.

20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்டிப் படைத்த குடி எனும் அரக்கன் கொஞ்சம் தடுமாறத் தொடங்கி இருக்கிறான். அவனைக் கொன்று புதைக்கும் வேலையையும் தமிழர்கள்தான் செய்ய வேண்டும். அரசாங்கம் இதை செய்யும் என எதிர்பார்ப்பது வீண். அவர்களுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காகவே இதை திறந்துவிட்டு இருக்கின்றனர். நாம் எத்தகையை எதிர்ப்பை பதிவு செய்தாலும் அவர்கள் கடையை மூடப்போவதில்லை என்பதே நம் அனுபவம். அதனால், குடியை குடிமக்கள்தான் ஒழிக்க வேண்டும்.

குடியை ஒழித்து, சொந்த தொழில்களை தொடங்கி, கடுமையான உழைப்பால் நம் நிலத்தில் ஆழமாக கால் ஊன்றி நிற்பதற்கு கொரானா பெரு வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. ‘கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு…’ என்று நம் மூத்தோர்கள் சொல்வார்களே, அதுதான் இப்பொழுது நடந்தவை. இந்த உண்மைகளை உணர்ந்து, தமிழர்கள் விழிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது.

ஒரு இனத்தின் மீட்சி என்பது அதன் அடிக்கட்டுமானமான தனிநபர் மீட்சியில் இருந்துதான் தொடங்கும். ஒவ்வொரு தமிழரும் தன்னளவில் மாற்றத்தை முன் வைக்காது, இனம் மீள்வதென்பது சாத்தியப்படாது. ஒரு தனிநபர் ஒழுக்கத்தோடும் நேர்மையோடும் வாழாது, அந்த நபருக்கான பொருளாதார மீட்சி நிகழாது. நிகழ்ந்தாலும் அது நீடித்த பயனைத் தராது. தனி நபர் பொருளாதார மீட்சியை நுண்பொருளாதார வளர்ச்சியென வரையறுக்கலாம். நுண்பொருளாதார கட்டமைப்பை வலுவாக உருவாக்கினால்தான், நிலமும், நிலத்தின் மீதான உரிமையும் பறிபோகாமல் தடுக்க முடியும்.

முதலில் நம் நிலத்தில் நில்லுங்கள்…

பிறகு இனத்தின் உரிமைகளை வெல்லுங்கள்…

நன்றி அருள்ராம்