நாங்கள் மனிதர்கள் மீது
காதலுக்காக
நட்பிற்காக
மரியாதைக்காக
தேவைக்காக
காத்துக்கிடக்கிறோம்
ஆனாலும் காத்திருப்புகள்
அத்தனை சுவாரசியமானவை அல்ல
அவை ஒரு பயத்தை
ஒரு அவ நம்பிக்கையை
ஒரு தோல்வியை
ஒரு பெரும் வலியை
ஒரு இயலாமையின் கோவத்தை
எங்களுக்கு பரிந்துரைக்கிறது
படிக்கப்படிக்க நிறைவில்லா
அனுபவங்கள் மனிதர்கள்
ஆனாலும் மனிதர்களை
படிப்பதற்காக
எங்கள் சுயத்தை
எங்கள் கௌரவத்தை
எங்கள் அடையாளத்தை
எங்கள் தனித்துவத்தை
அடமானம் வைக்கவேண்டியிருக்கிறது
நிரப்பவே முடியாத பள்ளத்தினுள்
கற்களைப்போட்டு சமன் செய்ய எத்தனிப்பதைப்போல
நாங்கள் சிலரை மாற்ற முயல்கிறோம்
எங்களை அவர்களிடம் நிரூபிக்க முயல்கிறோம்
ஒரு நேசத்தை ஒப்புவிக்க பிரயத்தனப்படுகிறோம்
ஒரு நாயை
ஒரு கிளியை நேசங்களால் எம்பக்கம்
திருப்பமுடியும்
ஆனால் மனிதர்களை…?
இங்கு பலர் இரண்டு கால்களால் நடப்பதால்
தங்களை மனிதர்கள் என நிரூபிக்க முயல்வதைப்போல வேடிக்கை ஏதுமில்லை
நிலம், காற்று, மற்றும் கணக்கற்று வெட்டப்படும் மரங்களைப்போல அமைதியாய் இருந்துவிட்டு
ஒருநாள் பொங்கி எழுவதால்
நாங்கள் எதையுமே சாதிக்கப்போவதில்லை
ஆக
யாருக்காகவும் எதற்காகவும்
எங்கள் சுயத்தை இழக்காமல் இருப்பது
சிறப்பான செயல் இல்லையா..?