நீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…

43

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த ‘சமூக இடைவெளி’ கட்டுப்பாட்டை மீறியதற்காக நெதர்லாந்தின் நீதியமைச்சர் Ferd Grapperhaus இற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் விதித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் அவருக்கு 390 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமண நிகழ்வில் சமூக இடைவெளியைப் பேணாமல் விருந்தினருக்கு அருகில் நின்றமை மற்றும் விருந்தினருடன் கைகுலாகு கொடுத்தமை போன்ற புகைப்படங்கள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருந்தாலும் அரசாங்கத்தின் முடிவை மதிப்பதாகவும், அபராத தொகையைச் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் கோடை விடுமுறையை அடுத்து மீளவும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சமூக இடைவெளியைப் பேணாத மேலும் பலருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டின் உச்ச பதவியில் உள்ள அமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டமை பேசுபொருளாக எழுந்துள்ளது.