சில மாதங்களுக்கு முன்பு, பத்திரிகை துறை முன்னோடியான அண்ணன் ஒருத்தரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பருவநிலை மாற்றம் குறித்தெல்லாம் விளக்கி, எதிர்காலத்தில் சர்வ நிச்சயழிவை அடிக்கடி சந்திக்கப் போகிறோம் என்றேன். “தம்பி நீ ரெம்ப பயமுறுத்தற மாதிரி பேசப் பழகிட்ட” என்றார் பதிலுக்கு சாதாரணமாக.
அன்றைக்கு அவரிடம் பேசிய இரவில், உண்மையில் அப்படித்தான் மாறிப் போய்விட்டோமா எனக் குற்றவுணர்வுடன் நிறைய பதறினேன். இப்போது இந்தக் கட்டுரைக்கான தலைப்பை இப்படி வைக்கையில்கூட அப்படி யோசித்தேன். அவரிடம் கொஞ்சம் மிகைப்படுத்திப் பேசியிருந்திருக்கலாம்தான். தொடர்ச்சியான பத்திரிகை பணிகூட அப்படியான குணநலனை எனக்குள் விதைத்திருக்கலாம். ஆனால் அப்படிப் பேசி ஒரு பரந்துபட்ட உரையாடலை உருவாக்குவது தவறே இல்லை என்கிற உணர்விற்கு இப்போது உறுதியாக வந்து சேர்ந்திருக்கிறேன்.
கொரானா மற்றும் அதுசார்ந்த இந்த உலகளவிலான ஊரடங்கு என ஒரு காலம் வரும் எனக் கணித்து முன்கூட்டியே சொல்லியிருந்தால் யாராவது நம்பியிருப்பீர்களா? கிறுக்கனைவிட கீழான உளரல் என்றுதான் உறுதியாய் எடுத்துக் கொண்டிருந்திருப்போம். இப்போது படிக்கிற விஷயங்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நானுமேகூட அப்படித்தான் நினைத்திருப்பேன்.
ஒரு குட்டியூண்டு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும், ரோஸ்ட் தோசையைப் புரட்டிப் போடுவதைப் போல திருப்பிப் போட்டதா இல்லையா? நியாபகத்தில் இருந்து இதனையொட்டி நிறைய விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். இப்போதெல்லாம் புள்ளி விபரங்களைவிட்டு, வெகுவாக விலகி வந்து விட்டேன். விரல் நுனியில் கொட்டிக் கிடப்பதை, மேசையில் இருந்து பார்த்து எழுதுவது, இந்தச் சமயத்தில் இரசிக்கவில்லை எனக்கு. அதையெல்லாம் முன்பொரு காலத்தில் நிறையவே செய்துவிட்டேன் என்பதால், உள்ளுணர்விருந்து பேசவே விரும்புகிறேன் இப்போது.
சமீபத்தில் பி.பி.சி பத்திரிகையாளரான தம்பி நியாஸ் அகமது ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கொரானா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியது. அதேசமயம் பூவுலகில் உள்ள பனிப்பாறைகளுக்குள் மனிதர்களின் அறிதலுக்கு அப்பாற்பட்ட ஏராளமான வைரஸ்கள் புதைந்து கிடக்கின்றன. பனிப்பாறைகள் புவி வெப்பமயமாதலால் உருகி, அவை வெளியே வந்தால் என்ன நடக்கும்? சற்றே ஆற அமர யோசித்துப் பாருங்கள். உண்மையில் சர்வ அழிவு நிச்சயம். அதெப்படி என இப்போதும் கேட்டுக் கொண்டிருந்தால் மீட்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
இந்தோனேசிய நாடு தன் தலை நகரை மாற்ற வேண்டுமென தனது மக்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. காரணம்? இப்போதிருக்கிற தலைநகரத்தை இன்னும் சில வருடங்களில் கடல் குடித்து விடும் என்பதனால்.
புவி வெப்பமயமாதலின் உப விளைவு இது. நன்றாக யோசித்துப் பாருங்கள். எளிமையாகவே இந்த விஷயத்தை விளக்க விரும்புகிறேன். முன்பெல்லாம் வானிலை அறிக்கைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? நமக்கு கிழக்கே இருக்கிற வங்கக் கடலிலும் மேற்கே இருக்கிற அரபிக் கடலிலும் தாழ்வு நிலைகள் உருவாகும். அவை தாழ்வு மண்டலங்களாக உருவாகி, ஒருவாரம் வரைக்கும் நின்று நிறுத்தி மழை பொழியும்.
இப்போது அப்படியா? எடுத்த எடுப்பிலேயே எல்லா தாழ்வு நிலைகளும் புயலாக உருவெடுக்கின்றன. இன்னும் பத்து நாட்களில் அரபிக் கடலில் இரண்டு புதிய புயல்கள் உருவாகப் போகின்றன. கடைசியாய் வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்காள தேசத்தை எப்படிச் சிதைத்தது என்பதைத் தேடிப் போய்ப் படித்துப் பாருங்கள்.
எதோ இன்னொரு மாநிலம் அதுவென எத்தனை நாள் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறோம்? இங்கே ஒக்கி, வர்தா, கஜா எனப் புயல்கள் வரவில்லையா? இனியும் தொடர்ச்சியாக இதுபோல் நம்மை வந்து தாக்கத்தான் செய்யும். தலைக்கு மேலே இருக்கிற கடைசிக் கூரையும் பிய்த்தெறியப்படத்தான் வாய்ப்பதிகம். அதிலிருந்து தப்பவே முடியாது.
இதே உம்பன் இங்கே உள்ள நிலப் பரப்பில் கேறியிருந்தால், நாம் எல்லோரும் சேர்ந்து எழவுக் கஞ்சி குடித்துக் கொண்டிருந்திருப்போம். எப்போதும் இல்லாதளவிற்கு கடல் வெப்பநிலையே முப்பத்து இரண்டு டிகிரி செல்சியஸில் இருக்கிறது. அப்புறம் புயல் வராமல், பூவா வரும்?
இப்படியே இந்நிலை தொடர்ந்தால், உங்களுக்குச் சுவையான பில்டர் காபி தரும் சென்னையே ஒருநாள் காணாமல் போகக் கூடும். என் வீட்டில் சூடு அதிகரித்து விட்டது எனக் கதறுகிற நாம் என்றேனும் இந்தப் புவி வெப்பமாவது குறித்து யோசித்திருக்கிறோமா? அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்கிற அறிவீலிகளாகவே இந்த உலகத்தில் இன்னமும் நம் இருப்பை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறோம்.
புவி வெப்ப மயமாதலை தடுக்கா விட்டால், எதிர்காலத் தலைமுறைக்கு வெறும் பாலை வனத்தையே விட்டுச் செல்வோம். இப்போது கூடவே பாலைவன வெட்டுக் கிளிகள் என்கிற இன்னொரு அச்சமும் நம்மை நெருங்கி வருகிறது. பாலைவனத்தில் வருகிறவைகள் அல்ல. கிடைக்கிற பசுமையைப் பாலைவனம் ஆக்குகிற வல்லமை படைத்தவை அவை.
அதென்ன வெட்டுக்கிளி? அப்படிச் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. ஈரான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த பரந்த வயல் வெளிகளின் சோலியை முடித்து விட்டு கோடிக்கணக்காக இந்தியாவிற்குள் ஜெய்ப்பூர் வரை வந்து விட்டன. அது ஒருவேளை சீனாவிற்குள்ளோ மலேசியாவிற்குள்ளோ திசை மாறி, எதிர் வரும் மாதங்களில் நுழையலாம். அதேசமயம் அது ஆந்திரா வழியாக, இப்போது நானிருக்கும் இடத்திற்கே வந்து சேர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
குறைந்தது ஐந்து மாத வாழ்விருக்கிற இந்த வெட்டுக் கிளிகள் ஒவ்வொன்றும் நூற்றுக் கணக்கான முட்டைகளை நிலத்தில் விட்டு விட்டுப் போகிற இயல்புடையவை. மரம் மட்டி என்றில்லாமல் எதிரே பச்சை என்று தெரிகிற எல்லாவற்றையும் கடித்து பஸ்மமாக்குகிற வித்தை தெரிந்தவை. பச்சை சட்டை போட்டிருந்தால்கூட அவை விடாது. எங்களை மாதிரித் தோட்டம் வைத்திருப்பவர்களை மட்டுமல்ல, மாடித் தோட்டமென பகுமானம் காட்டுகிறவர்களைக்கூட அது விடாது. வேண்டுமெனில் அதுசம்பந்தமான வீடியோவை கூட பாருங்கள்.
பயிர்களைத் தாக்குகிற அது மனிதர்கள் மீதும் கொத்துக் கொத்தாய் ஒட்டிக் கொள்ளும். ஏற்கனவே இருக்கிற கெமிக்கல் மருந்தை வானில் இருந்து தூவினால்தான் உண்டு. சிலநூறு பூச்சிகள் என்றால், விவசாயிகள் பொறுப்பெடுத்துக் கொள்ளலாம்.
தினமும் நூற்றைம்பது கிலோமீட்டர் நகரும் பண்புடைய கோடிக்கணக்கான பூச்சிகள் என்றால், விவசாயிகள் என்ன செய்வார்கள்? பலத்த சப்தம் எழுப்பி ஒரு சிலவற்றை விரட்டலாம். ஈக்களைப் போலக் கொத்துக் கொத்தாய் பரவும் அவைகளை என்ன சப்தமிட்டு விரட்ட? ஒருவேளை இங்கே அவை அப்படி வந்தால், அதற்கான கெமிக்கல் பூச்சி விரட்டி மருந்துகள் நம்கைவசம் இருக்கின்றனவா? கெமிக்கல் மருந்துக்காரர்களோடு எனக்கு எந்த வாய்க்கால் வரப்புத் தகராறு எதுவுமில்லை என்பதையும் இந்தயிடத்தில் பதிவு செய்யவும் விரும்புகிறேன். அவை செயல்படும் நுண்பயன்பாடுகள் குறித்துப் படித்து விட்டே சொல்கிறேன்.
அவைகளைத் தடுத்து நிறுத்த இயற்கை வழி விவசாயப் பரிந்துரைகள் குறித்துக் கேட்டேன். இஞ்சி, பூண்டு, மிளகாய், பெருங்காயம் கலந்த கரைசலைப் பரிந்துரைக்கிறார்கள். எட்டு ஏக்கருக்கு எவ்வளவு அளவு எனக் கணக்கிட்டு மலைத்துப் போய் விட்டேன்.
இந்தப் பராசுர வெட்டுக் கிளிகள் ஆண்டுதோறும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு வந்து போகத்தான் செய்கின்றன. தமிழகத்திற்கே பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து சேதம் ஏற்படுத்திய தரவுகளும் இருக்கின்றன. இப்போது கொரானா கவனத்தில் ஈரான் மற்றும் பாகிஸ்தான் அரசுகள் அசட்டையாக இருந்ததன் பொருட்டு, இந்தியா தன் பசுமை விஷயத்தில் இன்னொரு பேரழிவைச் சந்திக்கவிருக்கிறது.
பல்லுயிர்ப் பெருக்கச் சங்கிலியை நம்மால் எவ்வளவு வேகமாகக் கத்தரிகக முடியும் எனப் போட்டியிட்டுச் செய்து கொண்டிருக்கிறோம். பறவைகளையெல்லாம் அழித்து விட்டால், இப்படிக் கோடிக் கணக்காகப் புறப்பட்டு வரும் வெட்டுக் கிளிகளை நம்மால் என்ன செய்துவிட முடியும்?
இப்படி வெட்டுக் கிளிகள் படையெடுத்து வருவதைப் போல, ஒருநாள் பாம்புகள்கூடப் படையெடுத்து வரலாம் யார் கண்டது? மேற்குத் தொடர்ச்சி மலையியில் மட்டுமே இருந்த ராஜநாகங்கள் இப்போது கோவை அடிவாரத்திலேயே தட்டுப் படுகின்றன என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.
மொத்தத்தில் முடிந்தளவிற்கு இந்தப் பூமியின் சோலியை முடித்து விட்டோம். இனியாவது பசுமையை நோக்கி நகர வேண்டிய தேவைக்கு நகர்ந்திருக்கிறோம். அச்சமூட்டுவதற்காக இதைச் சொல்லவில்லை. எதிர்காலத்திற்கு எதை விட்டு விட்டுப் போகிறோம் என்கிற பொறுப்புணர்வை சுமக்கச் சொல்கிறேன். இல்லாவிட்டால் பூமி என்கிற ராஜநாகத்திடம் கடிபடுகிற நாள் வெகு தூரத்தில் இல்லை.