தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது காலாவதியாகி வருகின்றது – ஐங்கரநேசன்!

106

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னர் ஜனநாயக முறையில் முன்னெடுப்பதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தவறிவிட்டது.

இனிமேலும் தமிழர் அரசியலுக்கு தலைமை தாங்க முடியாதவாறு அது காலாவதியாகி வருகின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிடத்துக்கு தாங்கள்தான் மாற்று என்று கூறிக்கொள்ளும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அய்யாவின் அணியும் ஏமாற்றம் தருவதாக உள்ளது.
அவர் உருவாக்கியுள்ள அணி இந்த தேர்தலுக்கான கூட்டணியாகும்.

இந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க நல்ல கொள்கைப் பிடிப்புள்ள பலமான கூட்டு முன்னணி ஒன்று உருவாகுவதற்கான வழியைக் காட்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் பாராளுமன்ற வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பசுமை இயக்கம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை அணியாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றது இதன் பரப்புரைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உடுப்பிட்டியில் நடைபெற்றபோது ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்..

௮விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டதன் பிற்பாடு தமிழ் மக்களை வழிநடத்தவல்ல சரியான தலைமை இல்லாமல் போய்விட்டது தமிழ் மக்கள் தங்கள் அரசியல் தலைமையாக நம்பியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகார முடிவுகளால் தானாகவே அழிந்து வருகிறது. ஆனால் தங்களை அளிப்பதற்காகவே பல கட்சிகளும் சுயேச்சைகளும் இத் தேர்தலில் போட்டியிடுவதாக அவர்கள் மேடைக்கு மேடை பேசி வருகின்றார்கள் .

கூட்டமைப்பின் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டிருப்பதால் அவர்களுக்கு கடந்த காலங்களில் கிடைத்த வாக்குகள் இம்முறை கிடைக்காது என்பது திண்ணம்.
ஆனால் சிதறுகின்ற இந்த வாக்குகள் எவரை பலப் படுத்த கூடாது எவரை பலப்படுத்த வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருத்தல் வேண்டும் .

சிங்களப் பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிப்பது கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் இலங்கை இனப்படுகொலையை சரி என்று நாங்கள் ஏற்றுக்கொண்டதாகிவிடும். எனவே தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கொள்கையை முன்னிறுத்தி கட்சிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் கட்சி வேறுபாடுகள் கடந்து ஒன்றாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் இதுவே பலமான ஒரு கூட்டு முன்னணி உருவாகுவதற்கான தொடக்கமாக அமையும். தமிழ் தேசிய பசுமை இயக்கம் இதற்கான பரி பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்திருந்தார்.