உன்னுடைய கொள்கை சரியாதனது என்று நீ கருதினால் மக்களைத் திரட்டு, மக்கள் ஆணையை பெறு – நிலாந்தன்!

மாற்று என்பது ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போதாது, ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போகின்ற வழி பிழை என்பதனால் உருவாக்கப்படும் மாற்றீடு.

தமிழ் யதார்த்தத்தைப் பொறுத்தவரைக்கும் மாற்று என்பது தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல.

கூட்டமைப்பின் செயல் வழி பிழை என்றால் நீங்கள் ஒரு செயல்வழியைக் காட்ட வேண்டும். இறுதியில் தமிழ் மக்களுக்கான தீர்வை பெறுவதற்கு உங்களிடம் உள்ள புதிய வழி வரைபடம் என்ன? அது தான் மாற்று.

மாற்று என்பது கோட்பாட்டு ரீதியாக கதைப்பதனை விடவும், நடைமுறைச் சாத்தியமான தேர்தல் கூட்டைப் பற்றியே எல்லோரும் சிந்திப்பதாக தெரிகிறது. கொள்கை பற்றிக் கதைப்பதாக இருந்தால் எல்லாரும் கிட்ட கிட்ட ஒரே கொள்கையைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று நாங்கள் வார்த்தைகளில் தொங்கிக் கொண்டு இருக்கிறோம். நீ தேசம் என்பதனை நிராகரித்தாய். ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டாய். நீ அங்க அப்படி சொன்னாய். இங்கே இப்படி சொன்னாய் என்று அடிபடுகிறோம். இப்ப தேவை இந்த சண்டை அல்ல. நீ உன்னுடைய கொள்கை சரியென்று கருதுவாயாக இருந்தால் நீ மக்களைத் திரட்டு, மக்களின் ஆணையைப் பெறு.

இப்போது ஆயுதப் போராட்டம் இல்லை. இரண்டு தெரிவுகள் தான் உள்ளன. ஒன்றில் நீங்கள் மக்கள் மைய அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும். இல்லையெனில் தேர்தல் மைய அரசியலுக்குப் போக வேண்டும்.

மக்கள் மைய அரசியல் என்று சொன்னால் அன்னா ஹஸாரேயில் தொடங்கி ஆம் ஆத்மி வரை கெஜ்ரிவால் ஒரு உதாரணம். கெஜ்ரிவால் அன்னா ஹஸாரேயிடம் இருந்து பிரிந்து தேர்தல் மைய அரசியலுக்கு வருகிறார். தேர்தல் மைய அரசியலில் ஒப்பீட்டளவில் ஒரு முன்னுதாரணத்தைக் காட்ட அவர் முயற்சிக்கிறார். தொடர்ந்து வெற்றி பெறுகின்றார். மக்கள் அவருக்கு ஆணையை வழங்குகின்றனர்.

மக்கள் மைய அரசியல் என்று சொல்லி மக்கள் பேரியக்கத்தைக் கட்டியெழுப்புங்கோ. இல்லையென்று சொன்னால் தேர்தல் மைய அரசியலுக்கு போங்கோ. எங்களிடம் மக்கள் இயக்கம் இல்லை. பேரவையும் விக்கினேஸ்வரன் மைய அமைப்பு. மக்கள் மைய அமைப்பல்ல. இப்பொழுது மக்கள் மைய அமைப்பை கட்ட ஒருவராலும் ஏலாது.

கடந்த பத்தாண்டுகளில் எந்தவொரு கட்சியும் எந்தவொரு அரசியல் செயற்பாட்டு இயக்கமும் மக்கள் மைய அமைப்பைக் கட்டியெழுப்ப முடியவில்லை. அதற்கான பொருத்தமான தரிசனங்களும் இல்லை.

தேர்தல் வழி தான் ஒரே வழி. அது சாக்கடை தான். நீ சாக்கடையில் இறங்கி விட்டு நீ பூசியிருக்கிறது சேறு. என்னில் பூசியிருக்கிறது பொன் என்று சொல்ல முடியாது.
தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள் என்றால் உங்களுடைய தூய்மை வாதத்துக்கு வரையறை உண்டு.

இன்று பிராந்திய மற்றும் பூகோள அரசியல் தமிழ்மக்களுக்கு சாதகமான திருப்பங்களை அடைந்துள்ளது. துரதிஷ்டம் என்னவென்றால் அதனைக் கையாள்வதற்கு எங்களிடம் ஒரு அமைப்பும் இல்லை. தலைவரும் இல்லை என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் தனது கருத்துக் களத்தில் குறிப்பிட்டுள்ளார்.