நினைவுச்சாக்கடை

101

செய்வதெல்லாம் செய்துவிட்டு
எதுவுமே நடக்காதது போல்
நடிக்கும் மகாநடிகன் நீ….

கூட இருந்தே குழி பறித்துவிட்டு
என்னில் பழி போட்டு முந்திக் கொண்ட
வித்தைக்காரன் நீ…

உன்னில் உயிராயிருந்த
ஒரே சொந்தத்தை
உறவாடி கருவறுத்துவிட்டு…

ஒன்றுமே செய்யத் தெரியாத
நல்ல பிள்ளையாய்
உன்னால் எப்படி பாவனை
செய்ய முடிகிறது என்பதைத்தான்
இன்னமும் என்னால் விளங்கிக் கொள்ள
முடியவில்லை ….

நல்லவேளையாய் உன்னைப் போல்
அறிவாளியாய் நானில்லை என்பதே
என் குறைந்தபட்ச சந்தோசம்…

இல்லையெனில் ஒவ்வொரு உறவுகளின்
பிரதிபலன்களையும் கணக்குப் போட்டு
வாழ்ந்தே என் காலங்களும்
கரைந்து போயிருக்கும்…

இறுதியில் உண்மையாய் உயிராய்
ஓர் சொந்தத்தை தொலைத்த
துர்பாக்கியசாலியாய் நானும்
இருந்திருப்பேன்….

ஆனால் இன்றெனது இழப்பு
தேவைக்காக என்னை தேடிய
ஒருவனின் பிரிவு…
நீ தொலைத்தது தேவதையாய்
உன்னை பூஜித்த ஒருத்தியின் பரிவை…

உன் திறமையான பாத்திரக் கையாளுகையில்
வெற்றியீட்டிய சந்தோசத்தில் நீ மகுடம்
தரித்துக் கொள்ள தயாராகிறாய்…

கர்மாவின் முட்கிரீடத்தையும்
அணிந்து கொள்ள நீ ஆயத்தமாய் இருப்பதே
உனக்கு சாலச்சிறந்ததாகும்
என்பதை அறியாமல்…

தோழி கவிதாயினி