“நினைவுகளில் நிலைத்துநிற்கும் லெப். கேணல் மங்களேஸ்…

90

கடற்புலிகளின் துணைத்தளபதி லெப். கேணல் மங்களேஸ் அவர்களின்
13 ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்…!

தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ் அண்ணா அவர்கள். 1990ம் ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவது வயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ‘மங்களேஸ்’ என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழிமூடும் நாள்வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிக நீண்டது. தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ள வேண்டிய படையப் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையா அவர்களின் தாக்குதலணியில் தனது களப்பணிகளை முன்னெடுத்திருந்தார். 1991ம் ஆண்டு யூலை மாதத்தில் ஆனையிறவுப் படைத்தளம் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆகாயக் கடல் வெளி’ நடவடிக்கையில் ஒரு போராளியாகப் பங்கெடுத்திருந்தவர். அதனைத் தொடர்ந்து மணலாற்றில் சிறிலங்காப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல் நடவடிக்கையிலும் தனது போராற்றலை வெளிப்படுத்தியிருந்தார் மங்களேசண்ணா.

1992ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகள் அணிக்கு பிரிவுமாற்றம் பெற்றுவந்த மங்களேசண்ணா வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைத்தொடர்ந்து கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின் பிரதானதளமான சாலைத்தளத்தில் நின்று விடுதலைப் போராட்டத்திற்கு வளம் சேர்க்கின்ற பலம் சேர்க்கின்ற நடவடிக்கையான ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு சிறப்புத்தளபதி சூசை அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கினார். அவரது ஆளுமையை இனம் கண்டுகொண்ட சூசை அவர்கள் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப்பகுதியில் மங்களேசண்ணா கடற்புலிகளின் வன்னி மாவட்டத் தளபதியாகவும் குறிப்பிட்டகாலம் செயற்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ் குடாநாடு முழுமையாக அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து விடுதலைப்புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப் பகுதியிலும் ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த மங்களேசண்ணா 1996ம் ஆண்டு யூலை மாதத்தில் விடுதலைப்புலிகளால் ‘ஓயாதஅலைகள்-01’ எனப்பெயரிடப்பட்டு முல்லைத்தீவுப் படைத்தளத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெற்றிச்சமரின் போதும் படையினருக்கு உதவுவதற்காக கடல்வழியாக கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து குறித்த முல்லைப் படைத்தளம் வெற்றி கொள்ளப்படுவதற்கு மங்களேசண்ணாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் காத்திரமானது. இதன் பின்னரான காலப்பகுதியில் மணலாறு, செம்மலையைத் தளமாகக்கொண்டு செயற்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி விநியோக அணிக்குப் பொறுப்பாளராகச் செயற்பட்ட மங்களேசண்ணா அந்த விநியோக நடவடிக்கைகளிலும் பங்கெடுத்திருந்தார். குறித்த இந்த கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி நடவடிக்கையின்போது ஒரு சந்தர்ப்பத்தில் திருகோணமலை புடவைக்கட்டுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட கடற்சமரில் மங்களேசண்ணா வயிற்றுப்பகுதியில் விழுப்புண்பட்டிருந்தார். தீவிர மருத்துவச் சிகீச்சைகளின் மூலம் தேறிய மங்களேசண்ணா மீண்டும் களப்பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதனைவிட வேறுபல தாக்குதல்களிலும் மங்களேசண்ணா விழுப்புண்பட்டிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது. கிழக்குமாகாண விநியோக நடவடிக்கையைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தைத் தளமாகக்கொண்டு இந்தியா, தமிழ்நாட்டிலிருந்து எமது போராட்டடத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்கள் உபகரணங்கள் மற்றும் ஏனைய மூலவளங்களையும் கடல்வழியாகத் தாயகத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கின்ற உயரிய பணிகளையும் செவ்வனே செய்திருந்தார் மங்களேசண்ணா. ஆழ்கடல் நடவடிக்கை கிழக்கு மாகாணத்திற்கான கடல் நடவடிக்கை மன்னார் – தமிழ்நாடு கடல்நடவடிக்கை என அனைத்து சவால்கள் நிறைந்த கடல் நடவடிக்கைகளிலும் பங்குகொண்டிருந்த மங்களேசண்ணா அந்த நடவடிக்கைகளில் பல கடற்சமர்களையும் கண்டிருந்தார்.

1999ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த “ஓயாதஅலைகள் – 03” நடவடிக்கையில் வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்கள் விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது சமநேரத்தில் கட்டைக்காட்டிற்கும் ஆனையிறவிற்கும் இடைப்பட்டபகுதியிலுள்ள புல்லாவெளி என்னும் இடத்தில் அமைந்திருந்த படையினரின் முகாமை கைப்பற்றுகின்ற பொறுப்பு மங்களேசண்ணாவிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. புல்லாவெளிக்கு தாக்குதலணிகளை நகர்த்துவதானால் சுண்டிக்குளம் நீரேரியூடாக படகுகளில்த்தான் அணிகளை நகர்த்தவேண்டியிருந்தது. அதற்கமைவாக மங்களேசண்ணா தலைமையிலான தாக்குதலணி இயந்திரங்கள் பொருத்தப்பட்ட சிறியவகைப் படகுகளில் சுண்டிக்குளம நீரேரியூடாகச் சென்று முகாமை அண்மித்ததும் இயந்திரத்தின் சத்தங்கள் படையினருக்கு கேட்கும் என்பதால் குறிப்பிட்ட தூரம்வரைக்கும் தண்ணீருக்குள்ளால் படகுகளை தள்ளிச்சென்று புல்லாவெளியில் தரையிறங்கி புல்லாவெளி படைமுகாம்மீது தாக்குதல்களைத் தொடுத்து அந்த முகாமை வெற்றிகொண்டனர். வெற்றிலைக்கேணி கட்டைக்காடு புல்லாவெளி படைத்தளங்களின் வெற்றியே தொடர்ந்துவந்த ஆனையிறவுப்படைத்தளத்தின் வெற்றிக்கு திறவுகோல்களாக அமைந்திருந்தன.

ஆனையிறவுப் படைத்தளத்தை வெற்றிகொள்வதற்காக 26.03.2000 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின் போது வெற்றிலைக்கேணியைத் தளமாகக்கொண்டு தரையிறங்க வேண்டிய அணிகளை படகுகளில் ஏற்றி அனுப்புகின்ற பிரதான பொறுப்பாளராக மங்களேசண்ணா தேர்வு செய்யப்பட்டிருந்தார். லெப் கேணல் பாக்கியண்ணாவின் உதவியோடு தரையிறங்கவேண்டிய ஆயிரத்துஇருநூறு போராளிகளையும் குறித்தநேரத்திற்குள் படகுகளில் ஏற்றி அனுப்பிவைத்து குடாரப்பு தரையிறக்கநடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு மங்களேசண்ணாவின் அர்ப்பணிப்பும் உழைப்பும் மிகவும் முக்கியமானது.

2001ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் மங்களேசண்ணா கடற்புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். (அதாவது சிறப்புத் தளபதிக்கு அடுத்தநிலையான பொறுப்பு) கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம், கடற்புலிகளின் அரசியல்த்துறை, கடற்புலிகளின் புலனாய்வுத்துறை, கடற்புலிகளின் மருத்துவப்பகுதி முதலான கடற்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்தையும் நேர்த்தியுடன் நிர்வகித்தமை. மக்கள் சந்திப்புக்கள். மக்கள் அபிவிருத்திக் கட்டமைப்புக்கள். மீள்குடியேற்றம். சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில் சுனாமி மீள்கட்டுமானப்பணிகள். 2005, 2006ம் ஆண்டு காலப்பகுதிகளில் மணலாறு – நாயாற்றுப் பகுதியைத் தளமாகக்கொண்டு திருவடி மக்கள் படைக் கட்டுமானப் பயிற்சிப் பாசறையை நிறுவி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மக்கள் படைப் பயிற்சிகளை வழங்கி ஒருவலுவான மக்கள் படைக் கட்டுமானத்தை உருவாக்கியது என அவர் கடற்புலிகளின் தளபதியாகப் பொறுப்புவகித்த சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் நீண்டு கொண்டே செல்கின்றது. இந்தக் காலப்பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கடற்புலிகளில் முதன்மையாகச் செயற்பட்ட பதினொரு இளநிலைத் தளபதிகளை அழைத்து அவர்களை கௌரவித்து கைத்துப்பாக்கிகள் (பிஸ்ரல்) வழங்கியபோது அந்த அணியில் மங்களேசண்ணாவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பணி நிமிர்த்தமாக போர்க்கருவித் தொழிலகத்திற்கு பிரிவுமாற்றம் பெற்றுச்சென்று அங்கு குறுகியகாலம் கடமையாற்றிவிட்டு பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக படையப் புலனாய்வுப் பிரிவில் மங்களேசண்ணா உள்வாங்கப்பட்டு மன்னார் மாவட்டத்தில் குறித்த ஒரு பகுதிக் களமுனைக்கு கட்டளைத் தளபதியாக மங்களேசண்ணா நியமிக்கப்பட்டு அங்கு களநடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

08.03.2008 அன்று அரச படையினர் ஆக்கிரமித்திருந்த ஒருபகுதியை மங்களேசண்ணா தலைமையிலான அணி அரசபடையினர்மீது தாக்குதலைத்தொடுத்து படையினரை அங்கிருந்து விரட்டியடித்ததையடுத்து அந்தப் பகுதியை கிளியர்பண்ணிக் கொண்டிருக்கையில் படையினர் புதைத்துவிட்டுச்சென்ற மிதிவெடிகள் அடுத்தடுத்து வெடித்ததில் போராளிகளாலும், பொதுமக்களாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட எங்கள் மங்களேசண்ணா தாய்மண்ணை முத்தமிட்டு வீரச்சாவைத்தழுவிக்கொண்டார். சுமார் பதினெட்டு ஆண்டுகளாக தமிழீழமண் விடுதலையே உயிர்மூச்சாக வாழ்ந்து அந்த மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக விழிமூடிக்கொண்ட மங்களேசண்ணாவினதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் நினைவுகளுடன் எமது விடுதலைப்பயணத்தைத்தொடர்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நினைவுப்பகிர்வு:- கொற்றவன்.