உலகை இன்று ஆக்கிரமிக்கும் அந்த வாசகம் தமிழினத்தில் என்னவானது?

சமூகநீதிக்கான போராட்டங்கள் இன்று உலகை ஆக்கிரமித்து நிற்கின்றன. அங்கெல்லாம் எழுப்பப்படும் ஒரு முக்கிய வாசகம் “#NO #JUSTICE #NO #PEACE” என்பதாகும். இது பலரால் பல காலங்களில் வலியுறுத்தப்பட்டுமுள்ளது. என்று நீதி பொய்த்துப் போகிறதோ அப்போது சமாதானமும் தோற்றுப்போகிறது என்பதே உண்மையாகும். இது பாதிக்கப்பட்ட மக்கள் குழுமம் ஒன்றை அதன் வலிகளில் இருந்து என்றும் மீட்டுவராது என்பதே யதார்த்தமாகும்.

21ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலை ஒன்றை எதிர்கொண்ட ஈழத்தமிழினம் அதற்கான பரிகாரநீதி எதனையும் இதுவரை பெற்றுக்கொள்;ளவில்லை. ஈழத்தமிழினம் விடயத்திலும் போப்பாண்டவர் முதல் பலரும் நீதி இல்லையேல் சமாதானம் இல்லை என்றனர். படுகொலையாளர்கள் தற்போது மீண்டும் அனைத்து அதிகார மையங்களையும் நிறைத்து நிற்கின்றனர். அது தொடரப்போகும் நெருக்குவாரங்களையே ஆபத்தாக சுட்டிநிற்கின்றது.

ஆனால் எம் தலைமைகள் எனத் தம்மை அழைக்க முயலும் வெற்று அரசியல்வாதிகளும் சரி, மக்களின நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்கின்ற அமைப்புகளும் சரி, தமக்குள் மோதுவதில் செலவிடும் நேரத்தில் மக்கள் சமூகநீதியில் என்ன செய்தனர்? செய்கின்றனர்? சரி மக்களாகிய நாமும் இன்றைய உலகளாவிய சமூகநீதிக்குரலில் எம் சமூகம் சார்ந்து என்ன செய்ப்போகிறோம்? எல்லாம் முடிந்தவிடயம் எனக்கூறி அடுத்த படுகொலைக்கான கதவை அகலத்திறந்து அமைதி காக்கப் போகிறோமா? இல்லை எமது குரலையும் இன்றைய களத்தில் சமூகநீதிக்காக உரத்து ஒலிக்கப்போக்றோமா?