
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்- மறைபொருள் யாது?
“I care not what puppet is placed upon the throne of England to rule the Empire on which the sun never sets. The man who controls the British money supply controls the British Empire, and I control the British money supply.”
-Rothschild
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அதனால் நீங்கள் என்னைப் பைத்திக்காரன் என்றும் சொல்லக்கூடும். ஆனால், அதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. ஒவ்வொரு அறிவிப்புகள் வரும்போதும், நான் என் நண்பர்களோடு விவாதித்தவையெல்லாம், உண்மையாகிக் கொண்டே வருகின்றன என்பதை உணர்வதாலேயே இவற்றைப் பதிவு செய்கிறேன்.
நான் பொருளாதார மேதை இல்லை. பொருளாதார மேதைகள் இதற்கு வேறொரு விளக்கம் வைத்திருப்பர். அதனால் நான் சொல்பவை எல்லாம் பொய்யென நிரூபிக்க அவர்களின் தர்க்கங்களால் முடியும். ஒன்று இருக்கு என்பதற்கும், இல்லை என்பதற்கும் நிறுவுவதற்கு தர்க்கங்கள் போதுமானவை என்பதால், தர்க்கங்களுக்கு அப்பால் உணர்வதை பதிவு செய்ய வேண்டியதே அவசியம் என்ற வகையில் இப்பதிவை எழுதுகிறேன்.
‘கொரோனா நோய்த் தொற்று தடைக்காலம்’ என்பது உலக மனிதர்களின் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்ட தடைக்காலம்தான். உலகை கட்டுப்படுத்தும் சில மேதைகள்(?), புதிய பொருளாதார கொள்கைகளை வடிவமைக்க விரும்புகின்றனர். குறிப்பாக, பணமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். அதற்காகவே முதலில் உங்களை வீட்டில் முடக்கினர். மெல்ல, மெல்ல சில சித்துவேலைகளை செய்து வருகின்றனர். அதில் முக்கியமான அறிவிப்பாக, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் வருவதை பார்க்கிறேன். அதனால், நமக்கென்ன நட்டம் என்று நீங்கள் கேட்கலாம்?
அரிசிப் பானைக்குள் பணத்தை சேகரித்து வைத்து, நிம்மதியாக வாழ்ந்தவர்களின் வழிதோன்றல்களுக்கு, ‘வங்கிகளில்தான் நீ பணத்தை சேமிக்க வேண்டுமென கற்பித்த அதே கூட்டம்தான், இப்பொழுது பணம் என்ற தாளையும் மறந்துவிடு, மொத்தமாக ஏதேனும் எண்களை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்’ என்று கற்பிக்கத் தொடங்கி இருக்கிறது.
அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கதையை சொல்கிறார்கள். அதற்கு தலையாட்டினால் நம்மை அறிவாளி என்கின்றனர். ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்பினால், பயங்கரவாதியாக சித்தரித்துவிடுகின்றனர். அப்படி கேள்வியே எழுப்பாமல், ‘ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால் பயனாளிகளுக்கு பாதுகாப்புதானே..’ என்று சொல்லி அறிவாளி என்ற பட்டத்தை அடைவதைவிட, ஏன் இந்த திடீர் அறிவிப்பு? என்ற கேள்வியை எழுப்பி பயங்கரவாதியாக மாறுவது மேல் என்று கருதுகிறேன்.
எத்தனையோ தில்லுமுல்லுகளை திட்டமிட்டு அரங்கேற்றி வரும் மத்திய அரசு, தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இந்தியாவின் தற்சார்பு தன்மையை உடைக்க முடியாமல் திணறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. “தற்சார்பு பொருளாதாரம் என்ற ஒன்றே கிடையாது. உன் கையில் இருக்கும் அலைபேசியை தற்சார்பாக உருவாக்க முடியுமா?” என்ற நவீன பொருளாதார மேதைகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதைவிட மேலான வேலைகள் இருப்பதால், இவ்விடத்தில் அவற்றை கடந்துபோக விரும்புகிறேன்.
இந்திய சமூக சூழலில், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தங்க நகையும், ஆடு, மாடும்தான் தற்சார்பு பொருளாதாரத்தின் மூலங்கள். எத்தகையப் பொருளாதார இடர்பாடு வந்தாலும் வீட்டில் இருக்கும் நகையும், வீட்டு விலங்கும் நம்மை காக்கும். அதைத்தான் தற்சார்பு என்கிறோம். இன்றும் கூட, தமிழக கிராமங்களில் கொரோனா பாதிப்பின் சுவடைகூட அறியாத பெரும்கூட்டம் வாழ்வதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
அந்தக் கூட்டத்தின் கடைசி நம்பிக்கை கூட்டுறவு வங்கிகள்தான். அந்தந்த பகுதியில் இருக்கும் பெரிய மனிதர்களே தலைவர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் கொண்டு இயங்கும் அவ்வங்கிகள் விவசாயிகள், விவசாயக் கூலிகளின் ஆபத்துபாந்தவனாக இருந்து வருகின்றன. இன்றளவும் விவசாயம் அழியாமல் இருப்பதில் இவ்வங்கிகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.
இன்று இரவு மழை பொழிந்தால், நாளைக் காலை பத்து மணிக்கு கூட்டுறவு வங்கிக்குச் சென்று ஒரு நகையை அடமானமாக வைத்துவிட்டு, 12 மணிக்கு மக்காச்சோள விதைகளை வாங்கி, மாலை விதைத்துவிட்டு படுத்துக் கொள்ளும் விவசாயிகளுக்குத் தெரியும் கூட்டுறவு வங்கிகளின் பயன்.
ஏன் இதை மத்திய பொதுத்துறை வங்கிகள் தராதா? என்பது உங்களது கேள்வி.
ஆம்.. அவையும் வங்கி கடன் தரும். ஆனால், எல்லா அதிகாரமும் ஏன் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மாநில அரசுகளின் எல்லா அதிகாரங்களையும் சுரண்ட, மத்திய அரசுத் துடிப்பதன் நோக்கம் என்ன?
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வது என்பது விவசாயிகளின் அடிமடியில் கை வைப்பதற்கு சமம். விவசாயக் கடன்களை அவ்வப்போது மாநில அரசுகள் ரத்து செய்வதால் விவசாயம் கொஞ்சம் உயிர்ப்போடு இருக்கிறது. அதற்கும் உலைவைக்க தொடங்கிவிட்டனர். மேலும், அதனூடாகவே தனித்து, தற்சார்புடைய வலிமையோடு ஒவ்வொரு தனிமனிதனும் இயங்குவதை தடுக்கவே இவர்கள் துடிக்கின்றனர்.
ஒரே அடையாள அட்டை, ஒரே வங்கி கணக்கு, ஒரே மொழி, ஒரே அதிகாரம், ஒரே ஆட்சியென ஒவ்வொரு முறையும் இயற்கைக்கு முரணாக பன்மைத்தன்மைக்கு முரணாக இவர்கள் இருப்பதன் காரணம் என்ன?
130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், எல்லாவற்றையும் ஒரேவொரு அரசு நிர்வகிக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய அபத்தம்?
குறிப்பாக மோடியின் வருகைக்குப் பிறகு இவர்கள் ஏன் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகின்றனர்?
இப்பொழுது நான் முதலில் எழுதிய ஆங்கில வரிகளுக்கு செல்லுங்கள். விடை கிடைக்கும்.
நாதன்மேயர் ரோத்சைல்ட் என்ன சொல்கிறார்…
‘எவன் பணத்தைக் கட்டுப்படுத்துகிறானோ, அவனே உலகை கட்டுப்படுத்துகிறான்’
இவர்கள் துடிக்கிறார்கள்… பன்னெடுங்காலமாக இதையேதான் வேலையாக செய்து வருகிறார்கள்… அவர்களின் நோக்கம் உங்களைத் தனித்து இயங்கவிடுவதல்ல…
எப்பொழுதும் உங்கள் வாழ்வின் மீது அவர்களுக்கு ஓர் அதீத அக்கறை உண்டு… அது நீங்கள் தனித்து தற்சார்போடு இயங்கிவிடக் கூடாது என்பதாகவே இருக்கும்…
ஏனெனில், அவர்கள் உங்களை ஆளத் துடிக்கின்றனர்…
அதற்கு முதலில் உங்களின் வரவு-செலவு கணக்குகள் அவர்களுக்கு தெரிய வேண்டும்…
உங்கள் குடும்பத்தின் வரவு-செலவு கணக்கை யார் நிர்வகிக்கிறார்களோ அவர்களே உங்களின் குடும்பத் தலைவர்…
உங்களது வரவு-செலவை இப்பொழுது யார் பார்க்கிறார்கள் என்பதை யோசியுங்கள்…
அவர்தான் உங்களின் ‘தலைவன்’
நன்றி – அருள்ராம்