திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர் தாயகத்தில் இன்று பூரண ஹர்த்தால்!

168

தமிழர்கள் மீதான ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர் தாயகத்தில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்புக்கிணங்க அனுஷ்டிக்கப்படவுள்ள இன்றைய ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது மிகவும் அவசியமாகும். இது அவர்களின் பிரதான கடமையாகும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்றைய ஹர்த்தால் போராட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களுடைய சுதந்திரமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகளை ராஜபக்ச அரசு மேற்கொண்டு வருகின்றது. அரசின் இந்தச் செயல் ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம் இல்லை. இது தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை அவமதிக்கின்ற செயற்பாடாகும்.

இதனால் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழர்களை அவமதிக்கும் ராஜபக்ச அரசின் செயற்பாட்டுக்கு எதிராகவும், தமிழர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைந்து வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்த அழைப்பையேற்று – அந்தக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டத்துக்குத் தமிழ் மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். இது அவர்களது பிரதான கடமையாகும் என்று நான் கருதுகின்றேன்” – என்றார்.