ஒலித்துக்கொண்டிருந்த சப்தங்கள் நிறுத்தப்பட்டால்
பூமி சுழல்வதை நிறுத்திவிட்டதாய்
அச்சம் எழுமல்லவா
காற்று மரித்துவிட்டால்
வானுக்கும் பூமிக்கும் இடையே
வசந்தகாலங்கள் செயலிழக்குமே
கீதங்கள் மரித்துப்போனால்
காதல்கள் தோற்குமல்லவா
கீதங்கள் சேதப்பட்டால்
நூற்றாண்டுகளுக்கும்
பூக்கள் மலர்வதை நிறுத்துமே
மூச்சை நிறுத்தி இசையை உயிர்ப்பித்தவனே
நீ மரணித்துவிட்டாய் என்னுகிற
பெரும் பொய்யை
நான் எப்படி நம்புவேன்
நாள நரம்புகளில் நாதத்தை ஊற்றி நிரப்பியவனே
பூமி இயல்பாகவே இருக்கிறது
இன்றும் உனது குரலில்த்தான்
எம் காலை விடிகிறது
மாகலைஞனே….!
சப்தங்களில் அருவிகள் செய்தவனே
சப்தங்களில் பூக்களை
மலர்வித்தவனே
சப்தங்களில் சுகப்பிரசவம் தந்தவனே
சப்தங்களில் தற்கொலைகளை
தடுத்தவனே
நீ இறந்துவிட்டதாய்
சொல்லப்படும் பெரும் பொய்யை
நான் எங்கனம் சகிப்பேன்
துயரங்களை களைந்துபோட்ட உன் இசையோடு நீ இருக்கும் வரை
உனக்கு மரணமே இல்லை
மகா கலைஞனே…!