புலிகளின் வீரத்தை பறைசாற்றும் எல்லாளன் திரை காவியம்

113

விடுதலைப்புலிகளைக் காட்டுவாசிகளாகச் சித்தரித்ததில் தமிழக திரைத்துறைக்குப் பெரும்பங்குண்டு. ஆனால் அதற்குள்ளும் கப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் வேறுகதைக்களமாக இருந்தாலும் பெயருக்காகவே பேசப்பட்டதும் உண்டு.

சோசலிசத் தமிழீழம் என்ற சொல்லடக்கத்திற்கு ஏற்றவாறு விடுதலைப்புலிகள் தமது இலட்சியத்தையும் குறிக்கோளையும் மாற்றிக்கொள்ளாது, காலத்திற்கேற்றவகையில் தமது ஓட்டத்தை மாற்றிக் கொண்டதை எந்தத் தென்னிந்தியத் திரைப்படங்களும் இதுவரை பதிவுசெய்ததில்லை. இனிமேல் செய்யப்போவதும் இல்லை. அவ்வாறு பதிவுசெய்தாலும், எங்காவது பொய்யான செவிவழித் தகிடுதத்தங்களையும் இடையில் நுழைத்து ஓட்டிவிடும் பாங்குதான் இன்றுவரை நீடிக்கிறது. “விடைகொடு எங்கள் நாடே” பாடலையெல்லாம் மேடைகளில் பாடித்தீர்த்துக் கொண்டாடுவதில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை. ஓரிடத்திலாவது சிங்களக்கொடுமையைச் சாடும் அறம்சார்நிலை அப்பாடலிலிருந்தால் அதன்நிலையே வேறு. அதைவிடவும் அந்தத்திரைப்படத்தின் உள்ளார்ந்த பொருள் வேறுவிதமானது, அதிலிருந்து வெளிவந்த பாடலை எந்த மனநிலையில் நான் கொண்டாடமுடியும்..?

இந்தத் தகிடுதத்தங்களையெல்லாம் நொருக்கியெறியும் விதமாகவும், பலமைல் கற்களை ஒரே நொடியில் தாண்டும் விதமாகவுமே தலைவர் அவர்கள் “எல்லாளன்” திரைப்படத்தை மிகவும் இறுக்கமான போர்ச்சூழலுக்குள்ளும் வேகமாகத் தயாரித்து நேர்த்தியாக வெளியிட்டு வைத்தார். ஆனால் சோரம் போன கொடுமை; பல நாடுகளில் நம்மவர்களே அந்தத்திரைப்படத்தை மூலையில் போட்டுவிட்டார்கள். மரபுவழிப்படையணி ஒன்றின் உச்சத்தியாகத்தை மயிர்கூச்செறியும் விதமாகவும், தமிழீழமண்கொண்டிருக்கும் குடும்ப அழகு சிதையாமலும், காதலின் நாணத்தை அசலாகக் காட்டியும், எதிரிகளை நேசிக்கும் நேர்மையிலும், கொண்டகொள்கைக்காகப் போராடி உயிரைமாய்க்கும் மெய்சிலிர்க்கும் காட்சிகளுக்கும் ஈடாக எங்கேயாயினும் திரைப்படங்கள் இல்லையென்றே சொல்லவேண்டும். (சமூகக்கதையாக இருப்பினும் சற்றே ஆறுதலாக “சினம்கொள்” இருக்கிறது)

புலத்தில் பிறந்த தனது இருதம்பிகளுக்கு எல்லாளன் திரைப்படத்தைக் காண்பித்த தமக்கையிடம்; “எங்கே இந்தத் திரைப்படத்தைக் கண்டுபிடித்தாய்..” என்று அவர்கள் வியந்து கேட்கும் நிலையில் இருக்கிறது நமது மண்ணின் கதை.

நமக்குள்ளே கொண்டாட ஆயிரம் இருக்கிறது. முதலில் அவற்றைக்கொண்டாடுங்கள், எல்லாளன் திரைப்படத்தை Youtube குழுமம் அகற்றியபிறகு தேடியலைவதை விட்டுவிட்டு, இப்போதே உங்கள் குழந்தைகளுக்குக் காண்பியுங்கள். நிச்சயம் அவர்கள் அதைக் கொண்டாடுவார்கள்.

இன்றென்ன; நூறு வருடம் கழித்தும் “எல்லாளன்” எம் மண்ணின் பெருமையைப் பேசும்.

தேவன்

எல்லாளன் திரைப்படம்