ஆயுதங்கள் மௌனித்துக் கிடக்கின்றன..
சிங்களவன் சத்தமில்லாமல் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்துக் கொண்டிருக்கிறான்.. தலைவர்பிரபாகரன் வீட்டை இடித்துக்கொட்டி, அவர் வீட்டுக்கு அருகில் இருந்த ஆலமரத்தைத் தறித்து புத்தவிகாரையும், புனித வெள்ளரசு மரமும் வைக்க துடித்துக் கொண்டிருக்கிறான்.
ஆயுதங்களை போடுங்கள் என்று சொன்ன அயலில் உள்ள அறிவிலிகள் எல்லாம் அவனோடு சேர்ந்து கும்மாளமடிக்கின்றன…
மாவீரனோ துயிலிடமும் இல்லாமல் தூபியும் இல்லாமல் துன்மார்க்கர் கூட்டத்திடையே துறவியாகி நிற்கிறான்.
அடடா அன்று..
கங்கை கொண்டான் சோழன், இமயத்தில் புலிக்கொடி பதித்தான் நம் இராஜேந்திரன், கனகவிசயர் தலையில் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை வைத்தான் சேரன்
செங்குட்டுவன் என்று திரைக்கதை எழுதிய தமிழக வீரர்கள் வன்னியில் நடப்பதைப் பார்த்துவிட்டு திரை மூடி இருந்தார்கள்.
இவர்கள் எமக்கு தொப்புள் கொடி உறவுகள் என்றார்கள்
சில வெத்து வேட்டு தமிழர்கள்…
மாவீரன் மௌனமாகவே அந்தத் திரைப்படத்தையும் வீர வசனங்களையும் பார்த்துச் சிரித்தான்.
பயங்கரவாத பட்டியலிட்ட உலகம் புதுமாத்தளனையும், முள்ளிவாய்க்காலையும் பார்த்துக் கொண்டிருந்தது.
ஒரு வாரத்தில் 140.000 பேர் கொன்று குவிக்கப்பட்டபோது..
பெண்கள் நிர்வாணமாக்கி கடித்துக் குதறி ஓநாய்கள் தின்பது போல தின்னப்பட்டபோது
தன் பட்டியலை அது சரி பார்த்துக் கொண்டிருந்தது..
தண்டனை வழங்கப்படாத இந்தக் குற்றங்களுக்கு நீதிகேட்க.. அதைத் தடுக்க வக்கற்ற.. உலக சமுதாயம் பயங்கரவாத பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்ட அவலத்தையும் மாவீரன் பார்த்துக் கொண்டிருந்தான் மௌனமாக..
நச்சுப் புகை அடித்து நம் வீரர்கள் கொல்லப்பட்டபோது..
போர் விதிகள் மீறப்பட்டபோது..
உலகத்தின் அதி நவீன சற்லைற்றுக்களால் அவதானிக்கப்பட்டு எதிரிக்கு தகவல் கொடுக்கப்பட்டபோது..
புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஒவ்வொன்றாக மூழ்கடிக்கப்பட்டபோது..
வெள்ளைக் கொடியுடன் வந்தவன் வெட்டி வீழ்த்தப்பட்டபோது..
சற்லைற்றுக்களால் பார்த்து உலக நாகரிகம் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த வெட்கங்கெட்டவர்களின் நாடுகளின் பட்டியலிலா தமிழீழ தேசமும் இடம் பெறப்போகிறது..
மாவீரன் முதல் தடவையாக வெட்கப்பட்டான்.
பின்பொருநாள்..
சனல் 4 தணலாக வெளிவந்தது,
ஐ.நாவின் அறிக்கை வந்தது,
நோர்வேயின் குற்ற ஒப்புதல் வந்தது..
அநீதியில் இருந்து தப்பிக்கொள்ள துடிக்கும் அந்த உலக அவலங்களை எல்லாம்.
மாவீரன் பார்த்து காறித் துப்பினான்.
“வந்த பின் அறிக்கை விடும் பேடிகள் அல்லடா நாம் வருமுன் காப்பதற்காக அவன் போராடிய வீரர்..! ” என்று சொல்லாமல் சொன்னான்.
உலகை எதிர்த்து தன்னந்தனியனாகப் போராடினான்,
தன்மானத்துடன் தூய தமிழ்க் காற்று வெளியில் கலந்தான்.
அவன் மாவீரன்.
அவன் வாழ்விலும் அர்த்தமுண்டு..
அவன் இறப்பிலும் அர்த்தமுண்டு.
மாவீரன் என்பவன் ஒருவனல்ல..
இலட்சக்கணக்கான தமிழர்கள் உயிர் கொடுத்த தமிழ் மான ஈகம்..!
வீரம்..!
ஆதித் தமிழன் போற்றிய அகில உலக நாகரிகம் !
அதற்கு வடிவம் கிடையாது.. அதற்கு தூபியும் கிடையாது, தூண்களும் கிடையாது..
பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் வடித்த தன்மான வீர இலட்சிய வடிவம் அது..
புறநானூற்றில் வரும் புகழ் வீரனெல்லாம் தூபிக்குள்ளா இருக்கிறான்..?
மாவீரனுக்கு துயிலிடம் கிடையாது..
ஏனென்றால் அவன் துயில்வதில்லை