ஒரு பேப்பர் – எட்டு ஆண்டுகள்

231

எட்டு வருசத்துக்கு முந்தி ஒரு பெடியன், வேலைய முடிச்சிட்டு, பஸ்சில ஏறுவதுக்கு விழுந்தடிச்சு ஓடிப் போய் பஸ்சைத் தவறு விட்டு, பிறகு மற்ற பஸ்சுக்காகக் காத்துக் கிடந்த போது அவனுக்கு தோன்றினதுதான் இந்த ஒரு பேப்பர் அடிக்கிற ஐடியா. இப்ப அந்தப்பெடியன் வளர்ந்து மனுசனானது போல் ஒரு பேப்பரும் வளர்நதிருக்கிறது. வளர்ந்துட்டுது என்று சொன்ன உடனை ஏதோ ரூபர்ட் மேர்டக் இன் மீடியா சாம்ராச்சியம் என்று தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். ஏதோ மாவரிக்கப் பயன்பட்டுதோ, மீன்பொரியலிலையிருந்து எண்ணை உறிஞ்சப் பாவிக்கப்பட்டதோ, அப்பம் சுட்டுப் போட பாவிக்கப்பட்டதோ (மெய்யாகவே இப்பிடி ஒரு அக்கா சொன்னவ). லண்டனிலை எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பேப்பராக இருக்குது. இதாலை சில வேளை அஙகிள் சாம் போன்ற பெரிய பெரிய இடங்களிலையிருந்தும் போன் கோல்கள் வருது.

சரி எட்டுவருசமாய் பேப்பர் அடிக்கிறது என்ன பெரிய விசயம், மற்றாக்கள் பத்துப் பதினைஞ்சு வருசமாய் மணியாய், பஞ்சாங்கம் போலை பேப்பர் நடத்தேல்லையோ எண்டு கேட்கப்படாது. ஏனெண்டால் அவையள் எல்லாம் என்னாம் பெரிய ஆட்கள். ஊடகத்துறையை கரைச்சு குடிச்சாக்கள். நாங்கள் அப்பிடியே?

விசயம் தெரிஞ்ச ஆட்கள், இவனுகள் தமிழை கொலை செய்யிறாங்கள், இலக்கண சுத்தமாய் எழுதிறாங்கள் இல்லை எண்டு நெடுக குறைபடக் கூடாது, நாங்கள் ஒரு பக்கமாய் இருந்து பேப்பர் அடிச்சிட்டு போறம்.நீங்கள் இலக்கணச் சுத்தமான பேப்பருகளை வாசியுங்கோ.

தொடங்கேக்க 32 பக்கத்தில தொடங்கி பிறகு 42 பக்கத்துக்குப் போய் பிறகு 52 பக்கமாகி பரந்து நின்றவேளையிலைதான் உலகத் தமிழரையெல்லாம் உச்சந்தலையில் அடித்து உறைய வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தது அதிலை நாங்களும் தான் கலங்கிப்போய் வழிதெரியாமல் சிலகாலம் முடங்கிப் போயிட்டம். ஆனால் முடக்கமே முடிவாகிப் போயிடக் கூடாது எண்டதற்காகவும் ஏதோ பம்பலுக்காக தொடங்கிய ஒரு பேப்பர் சனங்களிட்டை ஏற்படுத்தின தாக்கத்தையும் அதனாலை எங்களிட்டையும் சில பொறுப்புக்கள் இருக்கெண்டும் புரிஞ்சு கொண்டம் அதாலை மீண்டும் 20 பக்கத்திலை தொடங்கி இப்ப 32 பக்கத்திலை வந்து நிக்கிறம். ஆரம்பத்திலை லண்டனுக்கு எண்டு மட்டும் தான் தொடங்கினம். பிறகு எங்கட விலாசத்தை எட்டிக் கனடா பிரான்ஸ் சுவிஸ் எண்டும் காட்ட வேணும் எண்ட ஆசைவந்து போய் விலாசமும் காட்டினம். இப்ப திரும்பவும் இலண்டனுக்குள்ளையே வந்திட்டம்.அது முன்னையதை போல 50 அல்லது அதுக்கும் கூடுதலான பக்கங்களோடு பரந்து நிற்பது வாசகர்களின் கைகளிலும் முக்கியமா விளம்பரதார்களின் கைகளிலுமே உள்ளது.

இந்த எட்டு வருசத்தைத் திரும்பிப் பாக்கிறபோது எத்தனபேர் வந்தவையள். எத்தனை பேர் போனவையள். எத்தனை பேர் இண்டை வரைக்கும் நிண்டு பிடிக்கினம். இப்பிடி ஒரு ஆயிரம் கதையள் சொல்லாம். ஒரு பேப்பர் தப்பாமல் இரண்டு கிழமைக்கு ஒருக்கால் உங்கடை கைக்கு வருகிறது எண்டால் அந்தக் கைங்கரியத்தை செய்து முடிக்கிற ஆக்களைப்பற்றி கொஞ்சம் சொல்லவேணும்

முந்தி எழுதிய ஆட்;களிலை சிலர் இப்ப எழுதிறதை நிறுத்தியிட்டாலும், வேல் தர்மா, ச.ச.முத்து, மௌலி, சுபேஸ் எண்டு புது ஆட்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்….

மட்டைக்கிளப்பான், உமா மகாலிங்கம், மாசிலாமணி, பா.வை. ஜெயபாலன் ஆகியோர் தொடர்நதும் சளைக்கமால் எழுதி வருகிறார்கள்….

சாத்திரியின் எழுத்துக்கு உங்கிளிடத்திலை தனியான ஆர்வம் இருக்கிறது. (கூடவே வேண்டாத வில்லங்கங்களையும் இணைப்பாக எங்களுக்கு தந்திருக்கிறார்)….

ஒரு பேப்பரின் வளர்த்தெடுக்கிறதுக்கு இரவியண்ணை செய்த பணிகள் பல. அவர் எங்களிடமிருந்து சற்று விலகியிருந்தாலும் நாங்கள் அவரை விடுறதாய் இல்லை…..

இத்தோடு நின்று விடவில்லை பணியகத்தில் குவிந்துகிடக்கும் வேலைகளையும், விளம்பரதாரங்களுடனான தொடர்பாடல்களை கச்சிதமாக செய்து முடிக்கிற சோபனா, அஜந்தா..

பேப்பர் விநியோகத்தில் உதவுகிற பிரகாஸ், உதயகுமார், சிவகுமார்…கணக்கு வழக்கிலை நாங்கள் கவனக்குறைவாயிருந்தாலும் அதை சீர்திருத்தி கொம்பனி கவுஸ் ஐ திருப்திப்படுத்திற மீரா அக்கா …

எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவிதமான உதவிகளையும் செய்கிற பாலா அண்ணா, குருநாதன் அண்ணா ..

ஐயோ, வேறை யாரையும் விட்டுட்டமோ தெரியாது .. ஆனால், இவர்கள் இல்லாமல் ஒரு பேப்பர் இல்லை.அடிச்சம். அடிச்சுக் கொண்டும் இருக்கிறம். இது நாங்க எங்கெங்க ஒரு பேப்பர் அடிக்கிறம் எண்ட விபரம். யார் எங்களோட வேலை செய்யினம் எங்களுக்காக வேலை செய்யினம் எண்டெல்லாம் விபரம் இருக்கு.

ஆனால் இப்பிடி ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு கதையா சொல்ல வெளிக்கிட்டா விடியும். சும்மா பாருங்கோ முகப்புப் பக்கத்துப் படத்தில இருந்து முடிவுப் பக்கம் வரைக்கும் ஒவ்வொருத்தரின்ர பங்களிப்பையும் சொல்ல வெளிக்கிட்டா இந்தப் பேப்பர் காணுமே?

“தம்பிமார் பேப்பர் அடிக்கிறயள் ஆனால் எங்கை வைக்கிறியள் ஒரு இடமும் காணேல்லை” எண்ட குற்றச்சாட்டுகள் இன்றைக்கு வரைக்கு வந்து கொண்டிருக்கும். எல்லாருக்கும் கிடைக்கிறமாதிரி எப்பிடி விநியோகிக்கிறது எண்ட ரெக்னிக் எங்களுக்கு பிடிபடுதில்லை. ஒரு வேளை நாங்கள் இந்த விசயத்திலை வீக்காய் இருக்கிறமோ தெரியாது.உண்மையச் சொல்லப் போனால் எட்டு வருசம் உருண்டு ஓடிப் போட்டுது. ஆனால் நாங்கள் உந்தப் பத்திரிகை விசயம் அதின்ர இலக்கணம் வரைவிலக்கணம் எண்டு ஒரு மண்ணும் தெரியாமத்தான் ஓடிக் கொண்டு இருக்கிறம்.

அதைவிட சத்தியமா அந்த விசயங்களில அக்கறையும் இல்லை எமக்கு! ஒரு பேப்பர் உங்களை மகிழ்வித்துதோ, அறிவூட்டியதோ, அல்லது இரத்த அழுத்தத்தை கூட்டியதோ நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை எண்டது மட்டும் உண்மை.

அறுக்கத் தொடங்கினோம்
ஆண்டு எட்டாயிற்று
பொறுத்துக் கொண்டீர்கள்
போங்கள் மகா பெரிய வாள் நீங்கள்.