ஒரு வெள்ளைக்காரத் தமிழச்சியின் காதல்.

124

“1978 இல் இலங்கைத் தீவைச் சேர்ந்த அன்ரன் பாலசிங்கம் என்ற தமிழர் ஒருவரை நான் திருமணம் செய்தபோதுதான் எல்லாமே ஆரம்பமாகியது.

அந்த இணைப்பின்போது ஒரு
இனத்தின் கூட்டுப் பிரக்ஞையையும் அதன் வரலாற்றையும் மணந்துகொண்டேன்.

தனது இனத்தின் பலங்களையும், பலவீனங்களையும்,பெருமைகளையும் ,
குறைபாடுகளையும் தன்னுள் அடக்கிய அந்தத்தமிழனின் ஆன்மாவைப் புணர்ந்துகொண்டேன்.உலகின் மிகப் பழமைவாய்ந்த கீழைத்தேய நாகரீகங்களில் ஒன்றினது சமூகத்திலும் கலாச்சாரத்திலும் வாழ்வதற்கு அந்த வரலாறு என்னை ஈர்த்தது.

தமிழீழம் எனப்படும் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழ் மக்களின் கலாச்சாரத் தலைநகரமான யாழ்ப்பாணம் என்ற எனது கணவரின் பிறந்த மண்ணில் பல ஆண்டுகள் வாழ்ந்தேன்.

கூர்மதியோடு நடத்தப்பட்ட இனப்படுகொலை முயற்சியை எதிர்த்து உயிர்த்துவப் போராட்டத்தை நடத்தும் ஒரு மக்கள் இனத்தின் துன்ப துயரங்களில்,மகிழ்ச்சியில், கொண்டாட்டங்களில் நானும் மூழ்கி எழுந்தேன்.

அரச ஒடுக்குமுறையினதும் அரசின் கருவறுப்பு முயற்சியினதும் தாக்குதலின் பயங்கரத்தை நேரடியாக அனுபவித்துக்கொண்டிருந்த மக்களோடு கூடிவாழ்ந்து அவற்றில் பங்கெடுத்த ஒரே வெளிநாட்டவர் நானேதான்.

மன ஓர்மத்தை உடைக்கவல்ல அடக்குமுறைகளை வியத்தகு முறையில் தனித்துவ வழிகளால் எதிர்கொண்டு அவற்றைத் தாங்கி முறியடித்த இம் மக்களது வீரத்தின் பல சிறப்பு வெளிப்பாடுகளையும் நேர்நேராகத் தரிசித்த ஒரே வெளிநாட்டவரும் நானேதான்.

இருபது ஆண்டுகளுக்கு முன் நான் பாலசிங்கத்தை சந்தித்து நேசிக்கத்தொடங்கியபோது எனது வாழ்க்கை இத்தகைய திருப்பங்களைச் சந்திக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.”

அடேல் அன்ரி
திருமதி அடேல் பாலசிங்கம் எழுதிய ‘சுதந்திரவேட்கை’ நூலிலிருந்து.