பாட்டியுடன் ஒரு உரையாடல் !

72

கேள்வி- பாட்டி! ஆயுதம் தூக்கி போராடுவது பயங்கரவாதம் என்கிறார்களே?

பாட்டி- சரி, தூக்குவது தவறு என்றால் தூக்க வைத்தது அதைவிட தவறு அல்லவா? முதல்ல போய் தூக்க வைத்தவனிடம் கேள். அப்பறம் என்னிடம் வா.

கேள்வி- என்ன பாட்டி சொல்லுகிறீர்கள்?

பாட்டி- கிழவி என்றும் பாராமல் கற்பழிக்கிறான். சிறு குழந்தைகளைக்கூட சுட்டுக் கொல்கிறான். விமானத்தில் வந்து குண்டு போடுகிறான். நான் என்ன செய்ய சொல்லுறாய்?

கேள்வி- நீங்க அகிம்சை வழியில் போராடலாம் அல்லவா?

பாட்டி- அகிம்சை வழியில்தானே தந்தை செல்வா போராடினார். அவருக்கு என்னத்தைக் கொடுத்தாங்க?

கேள்வி – அகிம்சை வழியில்தானே இந்தியா சுதந்திரம் அடைந்தது?

பாட்டி- இந்தியா எந்த வழியில் சுதந்திரம் அடைந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் அதே இந்திய அரசு அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது அந்த அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லையே?

கேள்வி- அப்ப, மகாத்மா காந்தி சொன்னது தவறா?

பாட்டி- காந்தி வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராக சொன்னது இப்ப உள்ள கொள்ளைக்கார அரசுகளுக்கு பொருந்துதில்லையே? காந்தி இப்போது இருந்தால் அவர் கையில் ஊன்று தடி இருக்காது அவர் கையிலும் துப்பாக்கி இருந்திருக்கும்.

கேள்வி- என்னது, காந்தியும் ஆயுதம் ஏந்தியிருப்பாரா?

பாட்டி- ஆம். முட்ட வரும் மாட்டை கட்டியணைக்க முடியாது. எட்டி உதைக்க வேண்டும். அதுபோல் கற்றபழிக்க வரும் காமுகனை கை நகத்தினாலாவது தாக்குங்கள் என்றுதானே அவர் சொல்லியிருக்கிறார்
.
கேள்வி- ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே நம்மட சம்பந்தர் அய்யாவும் கூறுகிறார்.

பாட்டி- அவர் மகள் கற்பழிக்கப்பட்டிருந்தால், அவர் வீட்டின் மீது கொத்துக் குண்டு வீசப்பட்டிருந்தால் ஒருநாளாவது பதுங்கு குழியில் வாழ்ந்திருந்தால் யார் பயங்கரவாதி என்று அவருக்கு தெரிந்திருக்கும்.

கேள்வி- இருந்தாலும் இந்த போராட்டம் தேவைதானா?

பாட்டி- எனது மூதாதையர் போராடியிருந்தால் இன்று நான் போராட வேண்டி வந்திருக்காது. அதேபோல் நான் என் அடிமைத்தனத்தை என் பரம்பரைக்கு விட்டுச்செல்ல விரும்பவில்லை.

கேள்வி- அடுத்த பரம்பரையும் இந்த போராட்டத்தை தொடரும் என நம்புகிறீர்களா?

பாட்டி- தம்பி- நான் எந்த இயக்கத்தையும் நம்பவில்லை. தலைவர்களையும்கூட நம்பவில்லை. நான் நம்புவதெல்லாம் இந்த போராட்டத்தை மட்டுமே. எனவே இயக்கமோ அல்லது தலைவரோ இல்லாவிட்டாலும்கூட இந்த போராட்டம் தொடரும்.
கேள்வி- எப்படி ? புரியவில்லையே!

பாட்டி- என்ன காரணங்களுக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே போராட்டத்திற்கான தேவை இருக்கும்வரை அதற்கான போராட்டமும் இருக்கும்.

குறிப்பு- தமிழ் இனம் மீண்டும் எழுந்து போராடும் என்ற நம்பிக்கையை இத்தகைய பாட்டிகளின் தியாகங்களே உருவாக்குகின்றன