படித்ததில் பிடித்தது

55


இதுவொரு மீள் பதிப்பு

வணக்கம்


இது ஒரு குட்டிச் சிறுகதை. தீபாவளி சிறுகதைப் போட்டி ஒன்றுக்காக எழுதியிருந்தேன்.
வரிக்கட்டுப்பாடுகள் இருந்ததால் அதிகமாக எழுதமுடியவில்லை படித்துப் பாருங்கள்.

இந்தச் சிறுகதை ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் அக்கினிக் குஞ்சு இணையத்திலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

வழி பிறக்குமா?


நாளைய தீபாவளிக்காக ஊரே காத்திருந்தது. ராமுவும், பரணிதாவும் அழுது சோர்ந்து களைப்பிலே உறங்கிவிட்டார்கள். தாய் ரஞ்சினியும் தனது பிள்ளைகளை சமாதனப்படுத்தியபடியே படுத்திருந்தாள்.

முருகன் நாளைய பொழுதையெண்ணி, மனதுக்குள் வெதும்பிக் கொண்டிருந்தான்.
ஆந்தையொன்று கூரைமேலேயிருந்து பயங்கரமாகக் கத்தியவாறு, சாமப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தது .

இன்று காலையில் ராமு வந்து,

“அப்பா நாளைக்கு தீபாவளி தானே..!
ஏன்..?
எங்களுக்கு
இன்னும் பட்டாசும் , புதுத் துணியும் வாங்கித் தரவில்லை”

எங்களுக்கு இன்றைக்கு கட்டாயம் வாங்கித் தாங்கோ என்று அடம்பித்தான்.

அப்போது சமையலறையிலிருந்து வந்த
ரஞ்சினி

” பின்னேரம் அப்பா வேலைக்கு போய்ட்டு வரும்பொழுது வாங்கித் தருவார்.”

என்று கூறிச் சமாளித்திருந்தாள்.
முருகனின் நிலையறிந்து அதுக்கேற்றதாப் போல் சிக்கனமாக குடும்பம் நடத்தும் நல்ல ஜீவன் ரஞ்சனி.

முருகனுக்கு இப்போது வேலையில்லை. அவன் ஒரு கூலித் தொழிலாளி. அன்றாடம் உழைத்துக் கொண்டு வந்து கொடுத்தால் தான் முருகன் வீட்டில் மறுவேளை அடுப்பெரியும்.
இந்தக் கொரோனாக் காலத்தில் முருகனை யாரும் வேலைக்கு கூப்பிடுவதில்லை.

ஏதோ ஊரில் கிடைக்கும் சின்னச் சின்ன வீட்டுவேலைகளைச் செய்து அவனது குடும்பத்தைக் காப்பற்றி வருகின்றான்.

எந்த வேலைக்கு யார் கேட்டாலும் போகத் தயங்க மாட்டான் விறகு வெட்டவோ, தேங்காய் உரிக்கவோ யார் கேட்டாலும் போய் வேலை செய்வான்.

முருகன் வேலைக்கு போகும் வீடுகளில் சின்னப் பிள்ளைகள் தொலைபேசியை வைத்து விளையாடும் பொழுது, இவனது பிள்ளைகள் வீட்டுத் தோட்டத்துக்கு தண்ணீர் இறைத்துக் கொண்டும், தாய்க்கு பாய் பின்னுவதற்கும் உதவி செய்து கொண்டிருப்பார்கள்.
அது வேணும் இது வேணுமென்று ஒரு நாளும் அடம்பிடித்ததில்லை.

ஆனால் இன்று மட்டும் பக்கத்து வீட்டு ராணியின் மகன் நிரோஸ் வந்து தீபாவளிக்குத் தங்களுடைய அப்பா புது உடுப்பும், பட்டாசும் வாங்கித் தந்ததாகக் கூறி அதைக் கொண்டு வந்து முருகனுடைய பிள்ளைகள் ராமுவுக்கும், பரணிதாவுக்கும் காட்டியபடியால் தான் இவர்களுக்கும் இந்த ஆசை வந்தது.

இதனால் அப்பா
தங்களுக்கும் புதுத்துணி, பட்டாசு வாங்கித் தரும்படி அடம்பிடித்திருந்தார்கள்.

இன்றைக்கு முருகனுக்கு பெரிதாக வருமானமில்லை.

நேற்றுத் தான் கையில் கிடைத்த முன்னூறு ரூபாவிற்கு அரிசி, பருப்பு என்று வீட்டுக்குத் தேவையானதை மட்டும் வாங்கி வந்திருந்தான்.

இன்று யாரும் முருகனை வேலைக்கு அழைக்கவில்லை. வேலைக்காக வெளியே போய் வெறும் கையுடன் வந்ததைக் கண்ட பிள்ளைகள் அப்பா தங்களுக்கு ஒன்றுமே வாங்கித் தரவில்லையென்ற கவலையால் விம்மி அழுது அழுது களைத்தே தூங்கி விட்டார்கள்.
அதனால் ரஞ்சினியும் கவலையில் சாப்பிடாமல் பிள்ளைகளுடனே படுத்துக் கொண்டாள்.

சர சர… என்று ஏதோ சத்தம் கேட்டுத் திருப்பிய முருகனிடம் ரஞ்சினி ,

“இஞ்சரப்பா நாளைக்கு ஏதாவது வருமானம் வருமா?
யாராவது வேலைக்கு கூப்பிட்டவையளா.. ?
பிள்ளைகள் பாவம் ஏக்கத்துடனே நித்திரையாப் போட்டுதுகள். அதிலையும் ராமு அம்மா பட்டாசு பட்டாசு என்று முனுமுனுத்துக் கொண்டே பிள்ளை நித்திரையாகிட்டான்.”

என்றபடி முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு விம்மினாள் ரஞ்சினி.

முருகன் பேச்சற்றவனாக
மனைவிக்கும் பதில் கூற முடியாமல்,
திண்ணையிலிருந்து இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்

அசுரனை வதம் கொண்டு தீபாவளி பிறந்தது. இந்த வறுமையை வதம் கொள்ள ஏதாவது வழி பிறக்குமா….?

முற்றும்.

ரூபன் சிவா
பிரான்ஸ்