பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசியை செவ்வாய் முதல் பயன்படுத்த பிரித்தானியா திட்டம்!

7

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை செவ்வாய்க்கிழமை முதல் பயன்படுத்துவதற்கு தயாராகியுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார சேவை அறிவித்துள்ளது.

80 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு குறித்த கோவிட் -19 தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இங்கிலாந்தில் ஐம்பது மருத்துவமனைகள் ஆரம்பத்தில் தடுப்பூசி வழங்குவதற்கான மையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு கடந்த வாரம் பிரித்தானியா அரசாங்கம் அங்கீகாரம் அளித்தது.

இதன் மூலம் பைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடு என்ற பெயரையும் பிரித்தானியா பெற்றது.

சுமார் 67 மில்லியன் மக்கள் சனத் தொகை கொண்ட நாட்டு மக்களில் 20 மில்லின் பேருக்கு போடப் போதுமான அளவிலான 40 மில்லியன் டோஸ்களை பிரித்தானியா பெற்றுக்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் முதல் வாரத்திற்குள் சுமார் 800,000 அளவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு கிடைக்கப் பெறும் தடுப்பூசிகளை சேமித்து வைக்க நாடு முழுவதும் பாதுகாப்பான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு அவரை சரிபார்க்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

News by -eelamranjan-