எதுவும் கடந்து போகும் – பாகிஸ்தான் இரும்பு பெண் மணியின் கதை

136

நான் ஒரு பெண்மணி. என் 18 ஆம் வயதில் எனக்குத் திருமணம் நடந்தது. ஆனால் அது மகிழ்ச்சியான திருமணமாக எனக்கு அமையவில்லை.

திருமணமான இரண்டாம் ஆண்டில் நான் ஒரு கார் விபத்தில் சிக்கிக் கொண்டேன். என் கணவர் வெளியே இருந்த பள்ளத்தில் குதித்து ஒரு சில அடிகளோடு உயிர் பிழைத்துக் கொண்டார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நான் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டேன். உடம்பு முழுவதும் ஏராளமான காயங்களைப் பெற்றிருந்தேன்.

என் காயங்களின் பட்டியல் மிகவும் நீண்டது. கூறுகிறேன், பயந்து விடாதீர்.ஏனென்றால் இப்போது நான் நலமாகவே இருக்கிறேன்.

என் முன் கையில் எலும்புகள் எல்லாம் முறிந்து போயிருந்தன, மணிக்கட்டு எலும்புகளும் முறிந்து விட்டன, தோள்பட்டை எலும்புகளும், விலா எலும்புகளும் நொறுங்கிக் கிடந்தன. நுரையீரல் மற்றும் கல்லீரல் மோசமாக உள்ளே காயமடைந்து இருந்தன, என்னால் மூச்சு விட முடியவில்லை. சிறுநீரக குடல் கட்டுப்பாட்டை இழந்தேன்…

மேலும் முதுகுத் தண்டுவட எலும்புகள் எல்லாம் உடைந்து செயலற்று முடங்கிப் போயிருந்தேன்.

இந்த விபத்து நடந்த இடம் , மருத்துவமனை, ஆம்புலன்ஸ் வசதி என எதுவும் கிடைக்கப் பெறாத தனிமையான பகுதி.ஆனாலும் சில மனிதர்கள் காப்பாற்ற வந்தார்கள். அவர்கள் என்னைக் காரிலிருந்து வெளியே இழுக்கும் போது தான் தண்டுவடம் பாதிக்கப்பட்டதை உணரவே முடிந்தது.

என்னை ஒரு ஜீப்பின் பின்புறம் ஏற்றி அடுத்த 3 மணி நேர தொலைவில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்தனர். என் உடம்பில் ஒரு பாதி நொறுங்கியும் மறு பாதி செயலற்றும் இருந்ததை உறுதி செய்தனர்.

மருத்துவமனையில் இரண்டரை மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந்தேன். உடம்பு முழுவதும் நிறைய அறுவை சிகிச்சைகளை செய்திருந்தனர். என் கைகளிலும், முதுகிலும் நிறைய டைட்டானியம் இரும்புகளை பொருத்தி இருந்தனர்.அந்த இரண்டரை மாதங்கள் மிகவும் கொடூரமானவை.

ஒருநாள் மருத்துவர் வந்து ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார்:” நீங்கள் ஓவியராக விரும்புவதைக் கேள்விப்பட்டோம். ஆனால் மன்னிக்கவும், இனிமேல் உங்களால் வரையவே முடியாது. காரணம் உங்களது கை , மணிக்கட்டு எலும்புகள் எல்லாம் நொறுங்கி விட்டன.”..அமைதியாக இருந்தேன்.

அடுத்த நாள் வந்து கூறினார் :” உங்கள் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருப்பதால் உங்களால் மீண்டும் எழுந்து நடக்க இயலாது”. சரி என்று கூறினேன்.

அடுத்த நாளும் வந்து ஒரு விஷயத்தைக் கூறினார்: “உங்களால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியாது.” அந்த கணம் மிகுந்த வலியை உணர்ந்தேன்.

அம்மாவிடம் அழுதேன். “ஏன் எனக்கு இப்படி எல்லாம் நடக்குது…எல்லாம் இழந்த பின் நான் ஏன் உயிரோடு வாழவேண்டும்??” என்று புலம்பினேன்.

அப்போது தான் அம்மா கூறிய வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்ததை உணர்ந்தேன். அந்த வார்த்தைகள் இதோ: ” இதுவும் கடந்து போகும், கடவுள் உனக்கான மிகப் பெரும் வேறொரு திட்டத்தை வைத்திருப்பார். அமைதியாய் இரு. அழாதே” என்று…

என்னால் இந்த மரணப்படுக்கையில் இருக்க முடியவில்லை. நான் ஏதாவது செய்யவேண்டும். என் வாழ்க்கையில் எனக்கு வண்ணங்கள் வேண்டும்.நான் வரைய விரும்புகிறேன் என்று கூறி கஷ்டப்பட்டு என் முதல் ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தேன். அது என் மரணப்படுக்கையில் தான் ஆரம்பித்தது.

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். வீட்டிலும் படுக்கை மட்டுமே…இந்தப் படுக்கை நீடித்த நாட்கள் 6 மாதமோ ஒரு வருடமோ இல்லை. இரண்டு ஆண்டுகள் படுக்கையில் மட்டுமே நேரத்தை கழிக்க வேண்டியிருந்தது. அப்போது ஜன்னலின் வாயிலாக குருவிகளின் சத்தத்தையும் மனிதர்கள் நடமாட்டத்தையும் உணர்ந்துள்ளேன். அப்போது தான் புரிந்தது அந்த மனிதர்கள் எல்லாம் எவ்வளவு கொடுப்பினையோடு வாழ்கிறார்கள் என்று..

ஆனால் அந்தக் கொடுப்பினையைப் புரிந்துகொள்ள தான் மக்களால் முடியவில்லை என்று உணர்ந்தேன்.

இரண்டு ஆண்டுகள், இரண்டரை மாத படுக்கைக்கு ஒரு விடிவுகாலம் கிடைத்தது. ஆம் படுக்கையில் இருந்து சக்கர நற்காலிக்கு மாற்றல் ஆனேன். என்னைக் கண்ணாடியில் பார்த்தேன். எனக்குள்ளேயே பேசிக் கொண்டேன். என் வாழ்வில் தானாகவே அதிசயம் நிகழுமென்று காத்திருக்க முடியாது, அறையின் மூலையில் அமர்ந்து அழுதோ, பரிதாபத்துக்கு ஏங்கியோ வாழமுடியாது. அதனால் என்னை நானே முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

கண்ணாடியில் என்னைப் பார்த்து முதன் முதலில் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டேன். ஆனால் உடனே அழித்து விட்டு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள ஒரு பெண் இப்படி எல்லாம் செய்தால் மக்கள் என்ன நினைப்பார்களோ என்று..ஆனால், அந்த கணம் எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன்.. நான் ஏன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்க வேண்டும்.எனக்குள் நான் மகிழ்ச்சியை உணரவேண்டும் என்று மீண்டும் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டேன். அப்போது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அந்த நாள் முடிவெடுத்தேன் நான் எனக்காக வாழ வேண்டுமென்று.

நம் எல்லாருக்குமே இழப்புகளை குறித்த பயம் இருக்கிறது. அதை நினைத்து எப்போதும் பயந்துகொண்டே இருக்கிறோம். அதனால் நான் என் பயங்களை எல்லாம் விட்டுவிட முடிவு செய்தேன். எனக்குள் இருந்த பயங்களை எல்லாம் பட்டியல் இட்டேன்.

என் மிகப் பெரிய பயம்- என் விவாக ரத்து. இதை என்னால் முதலில் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.ஆனாலும் ஏற்றுக்கொண்டேன். அவருடைய இரண்டாம் திருமணம் நடக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு அவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். “உன் திருமணம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள்” என்று. அப்போதே அந்த பயமெல்லாம் என்னை விட்டுப் போய்விட்டது.

என் 2வது பயம்-என்னால் அம்மாவாக முடியாத நிலை. இந்த பயத்தைப் போக்க , அன்புக்காக ஏங்கும் ஆதரவற்ற குழந்தை யாரையாவது தத்தெடுக்க விரும்பினேன். சில இடங்களில் விண்ணப்பித்து இருந்தேன். இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் குழந்தை இருப்பதாக எனக்கு அழைப்பு விடுத்தனர். நேரில் சென்று குழந்தையைப் பெற்றுக்கொண்டேன். அன்று அக்குழந்தைக்கு இரண்டு வயது. இன்று அவன் பெரியவனாக வளர்ந்துவிட்டான். மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

என் 3வது பயம்- மக்களை சந்திப்பது.

ஆம், என் இயலாமையாலும் தாழ்வு மனப்பான்மையாலும் மக்கள் யாரையும் சந்திக்கவில்லை. ஆனால் அந்த பயத்தை நீக்கி இன்று பேச்சாளராக உங்கள் முன்பு மேடையில் பேசிக்கொண்டிருக்கிறேன்.

தற்போது, பாகிஸ்தானின் முதல் சக்கர நாற்காலி ஓவியர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளேன், மாடலிங் துறையிலும் பணியாற்றுகிறேன், பாகிஸ்தானின் தேசிய தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராகவும் இருக்கிறேன்,சமூக நலத் தூதரகவும் தேர்வாகி பாகிஸ்தானின் இரும்புப் பெண்மணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளேன்.

அதனால், எப்போது நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ள பழகுகிறீர்களோ அப்போது இந்த உலகமும் உங்களை ஏற்றுக்கொள்ளும். இது நம் மனதை திண்மையோடு வைத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம் ஆகும்.

நம் வெற்றிக்குப் பின் எப்போதும் யாராவது இருப்பார்கள். எனக்கு என் அம்மா ஆறுதலாக இருந்தது போல் கண்டிப்பாக உங்களுக்கும் யாராவது துணையாக இருப்பார்கள். அவர்களை மட்டும் நிராகரித்து விடாதீர்.

‘இதுவும் கடந்து போகும்’ என்ற என் அம்மாவின் சொற்களே என் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியது. நீங்களும் உங்களுக்கு பிரச்சனை வரும்போது ‘இதுவும் கடந்து போகும்’ என்று நினைத்துக்கொண்டு பயங்களை நீக்கி வாழ்க்கையை நன்றியுணர்வோடு வாழுங்கள்.