நம்பிக்கை

எமது உடல்களின் மீது நிரந்தரமாக யுத்தம் தொடுத்திருப்பதோடு, இவர்கள் எமது கனவுகளின் மீது, எமது மக்களின் மீது, எமது வீடுகளின் மீது, எமது மரங்களின் மீது யுத்தக் கொடுமைகள் புரிகிறார்கள். இன ஒதுக்கல் சமூகத்தைத் தவிரவும் இது எமக்கு எதனையும் உத்தரவாதப்படுத்தவில்லை. இதயங்களை தோல்வியுறச் செய்கிற வாள்களின் சாத்தியம் தவிர வேறெதனையும் எமக்கு இது உத்தரவாதம் செய்யவில்லை. மட்டுப்படுத்தவே முடியாத பாடலின் லயமொன்று எம்மிடம் உண்டு : அது எமது நம்பிக்கை. விடுதலையிலும் சுதந்திரத்திலுமான நம்பிக்கை. நாங்கள் வீரர்களாகவோ பலியாட்களாகவே இல்லாத எளிய வாழ்வு குறித்த நம்பிக்கை. எமது குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்றுவருவது குறித்த நம்பிக்கை. மருத்துவமனையில் கர்ப்பிணப் பெண் தன் உயிருள்ள குழந்தையைப் பிரசிவிப்பாள், ராணுவச் சோதனைச் சாவடி முன்னால் ஒரு இறந்த குழந்தையைப் பிரசவிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை. சிவப்பு வண்ணத்தின் அழகை எமது கவிகள் சிந்திய குருதியிலல்ல, ரோஜாவில் காண்பார்கள் எனும் நம்பிக்கை. அன்பும் சமாதானமும் என அர்த்தம் தரும் ஆதாரமான பெயரை இந்த நிலம் எடுத்துக்கொள்ளும் எனும் நம்பிக்கை.

  • மஹ்மூத் தர்வீஸ்