பாரிஸ் உயர் தொற்று வலயம்,இறுக்கமான புதிய கட்டுபாடுகள்!

415

புதிய இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள்தொடர்ந்து திறந்திருக்கும் சகல அருந்தகங்களும் மூடப்படுகின்றன!

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பாரிஸ் நகரம் இன்று திங்கட்கிழமை முதல் உயர் தொற்று வலயமாகின்றது.(“maximum alert zone”). இதன்படி நடைமுறைக்கு வரவிருக்கும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக உணவகங்கள் மூடப்படமாட்டாது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது ஆயினும் அருந்தகங்கள் (Bars) அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படுகின்றன.

உணவகங்கள் தமது வாடிக்கையாளர்களது பெயர், விவரங்கள், தொடர்பு இலக்கங்கள் என்பவற்றைத் தவறாமல் தினசரி பதிவு செய்வதற்கு ஒரு பதிவேட்டைப் பேணுதல் அவசியம். எவருக்கும் தொற்று ஏற்பட்டமை தெரியவந்தால் ஏனையோரை அது குறித்து எச்சரிப்பதற்கும் வாடிக்கையாளர்களுடன் எந்நேரமும் தொடர்புகளைப் பேணுவதற்காகவும் இந்தப் பதிவேடு அவசியமாக்கப்படுகிறது. மேசைகளுக்கு இடையே பேணப்படவேண்டிய இடைவெளி ஒரு மீற்றராக வரையறை செய்யப்பட்டுள்ளது. உள்ளேயும் வெளிப் புறங்களிலும் நின்றுகொண்டு உண்பது, குடிப்பது முற்றாகத் தடைசெய்யப்படுகிறது என்று குறிப்பிடபட்டுள்ளது.

எல்லா மேசைகளிலும் கைகளை சுத்திகரிக்கும் ‘ஜெல்’ (hydroalcoholic gel) வைக்கப்பட வேண்டும்.

உணவு உண்ணுகின்ற சமயங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இரவில் 10 மணிக்கு அன்றி உணவகங்களுக்கான வழமையான நேரத்தில் அவற்றை மூடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது

உணவக நிர்வாகங்கள் முன்மொழிந்தது போன்று வாடிக்கையாளரது உடல் வெப்பநிலையைப் பரிசீலிப்பது போன்ற சோதனைகளைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

உயர் தொற்று வலயங்களில் நடைமுறைக்கு வருகின்ற இக் கட்டுப்பாடுகள் அடுத்த 15 தினங்களுக்கு அமுலில் இருக்கும். அதன் பிறகு தொற்று நிலைமையை மதிப்பீடு செய்து இதில் மாற்றங்கள் செய்யப்படும்.