கடந்த 11 நாட்களாக முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (29) முடிவுக்கு கொண்டுவருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7.30 மணி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருடன் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
பொது சுகாதார பரிசோதகர்களுக்குரிய அதிகாரங்களுக்கமைய வழக்கொன்றை தொடரும் போது சுகாதார அதிகாரியுடன் ஆலோசிக்க பொது சுகாதார பரிசோதகர்கள் இதன்போது இணங்கியுள்ளதாக இந்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில்பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் பிரதமருடனான சந்திப்பில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த 16 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்களால் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என அறிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.