பிச்சை புகினும் கற்கை நன்றே…

336

இந்து மதம் என சொல்லக்கூடிய ஸ்மிருதியை முன்னிருத்தும் ஸ்மார்த்தர்களின் தர்ம சாஸ்திர நூல்கள்

பல வர்ணாசிரம தருமத்தையும் சாதி பேதத்தையும் உருவாக்கி ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூக அமைப்பை கட்டமைத்து மிகப்பெரிய சமூக அநீதி ஏற்படக் காரணமாக அமைந்தன. அதனால் தான் சமூகநீதிக்கு நம் அரசமைப்புச் சட்டம் கொடுத்த முக்கியத்துவத்தை போல் உலகத்தில் உள்ள எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பின்தங்கிய சமூகத்தினருக்குச் சமூகநீதி வழங்க வேண்டும் என்கிறது இன்றைய அரசியலமைப்பு சட்டம். சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அந்தஸ்து, சம உரிமை வழங்குவதன் மூலம் சமூகநீதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இத்தகைய சமூகநீதி சங்க கால தமிழ் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதா? அன்றைய நிலைதான் என்ன என்பதை ஆராய்ந்தால் கல்விக்கு தமிழ் சமூகம் அளித்த முக்கியத்துவமும் தமிழ் நாகரிகத்தின் செறிவும் காணக்கிடைக்கிறது.

சங்க காலத்தில் பல குலங்கள், மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்ப தோன்றியிருந்தன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அளவர், இடையர், உமணர், உழவர், கடம்பர், குயவர், குறும்பர், கொல்லர், வணிகர், வேடர், தச்சர், பாணர், வண்ணார், புலையர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. இக்குலங்களுக்குள் திருமணக் கலப்போ, உணவுக்கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு சமூகமும் தமிழ் சமூகத்தின் ஓர் உறுப்பாக செயற்பட்டு வந்தது. சங்க காலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர். கல்வி பயிலும் உரிமை தனிப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமேயான உரிமையாக அன்றில்லை. எக்குலத்தைச் சார்ந்தவரும், செல்வரும், வறியோரும், மன்னரும், எளிய குடிமக்களும், ஆண்கள், பெண்கள் என அனைவரும் கல்வியை தேடிப்பெற்றனர். ஆக, கல்வி கற்கும் வாய்ப்பு சமூதாயத்தில் அனைவருக்கும் கிட்டி இருந்தது. சமூகநீதியின் முக்கியக் கூறான எல்லோருக்கும் கல்வி என்பது அன்றைய தமிழ் சமூகத்தில் இயற்கையாக அமைந்துவிட்டது. இதனை புறநானூற்று பாடல் 195 தெளிவாக உணர்த்துகிறது. அப்பாடல்,

“ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” – புறம் 195 என கூறுகிறது.

அதாவது ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பலருள் மூத்தோனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அழைக்காமல் அவர்களுள் அறிவுடையோனைத் தான் அரசனும் அழைத்து கேட்பான். எனவே குலவேறுபாடு காணாமல் அனைவருக்கும் கல்வி முதன்மைபடுத்தப்பட்டுள்ளது.

இவையெல்லாவற்றையும் விட நாம் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. இந்த பாடலை பாடியவர் வெறும் தமிழ் புலவர் மட்டுமல்ல. பாண்டிய நாட்டை ஆண்ட ‘ஆரிய படைக்கடந்த’ நெடுஞ்செழியன் ஆவார். இன்றைய ஜனநாயக ஆட்சியில் கூட மருத்துவம் படிக்க இட ஒதுக்கீடு கேட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதனை அடிப்படை உரிமை ஆகாது என கூறி பின்வாங்கியது. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வளர்த்த பாண்டிய மன்னன் ஒருவன் அனைவருக்கும் கல்வியை வலியுறுத்தி சென்றிருக்கிறான்.

கல்வியை தமிழ் சமூகம் முதன்மைபடுத்தியது. ஆதலால் தான் அரச குடியில் பிறந்த புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகளுக்கே அவர்கள் வாழ்ந்த காலத்தில் எழுத்தறிவில்லாமல் போனது. ஆனால் தமிழ் சமூகத்தில் ஒரு குயவனும் எழுத்தறிவு பெற்றிருந்தான் என்பதற்கு கீழடி, கொடுமணல் போன்ற அகழ்வாய்வு முடிவுகள் சான்றுகளாக நிற்கின்றன.

“கற்கை நன்றே! கற்கை நன்றே!

பிச்சை புகினும் கற்கை நன்றே!”

நன்றி Vickey Kannan