முள்ளிவாய்க்கால்..நினைவுகளை மீட்டும் காலம்

302

தருணம் 19


ஒரு கிலோமீற்றர் நடைக்கு பின்னர் அம்மாவை கண்டுவிட்டேன் அம்மா எமக்கு முன் அந்த இடத்தை கடந்தமையால் நாம் முன்னே சென்றுவிட்டோம் என எண்ணி கடற்கரையின் மறுபக்கமாக நடந்து மீண்டும் நாம் வந்த இடம்நோக்கி நடந்துகொண்டிருந்தார் அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சு வெடித்து எழும் வலி துயரமாக தாக்குகின்றது என்னை .தனுக்கு தேவையான ஒருசில பொருட்களை ஒரு சிறியபையில் போட்டு அம்மா அதை தலையில் சுமந்துகொண்டு நடந்துவந்தார் அது அதிகாலைப்பொழுதாக இருந்தமையால் அங்கிருந்த உடல்கள் எல்லாம் தூக்கத்தில் இருப்பதாக தான் நினைத்ததாக அம்மா என்னிடம் சொன்னார் நூற்றுக்கணக்கான உடல்கள் நாம் கடந்துவந்த இடங்களில் கிடப்பதை மீண்டும் அம்மாவை தேடிப்போன நான் கண்டேன் இன்னும் ஒரு மணி நேரம் பிந்தியிருந்தால் திசை அறியாமல் போன என் தாயின் நிலைமை என்னவாகியிருக்குமோ என்று நினைக்கையில் நெஞ்சு வெடித்து போகிறது கணப்பொழுதில் அங்கிருந்து அம்மாவை கூட்டிக்கொண்டு ஓடி வருகின்றேன் பத்து நிமிடங்களுக்குள் எல்லோரும் இருக்கும் இடத்தை அடைந்துவிட்டேன் எனக்காக காத்துக்கொண்டு எங்கள் குடும்பமும் ,அதுபோல இன்னும் சில குடும்பமுமே அந்த இடத்தில் இருந்தன அதுதாண்டி ஒரு கிலோமீர்றல் தூரத்தில் இப்போது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டுவிட்டன்ர் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி நாமும் வந்துவிட்டோம்.
இது இரட்டைவாய்க்கால் பகுதி – இங்கே மக்கள் நெருக்கமாக தஞ்சம் புகுந்து அந்தரித்துக்கொண்டிருந்தனர். இத்தனை அவலங்களையும் தாண்டி இரட்டை வாய்க்கால் வர எமக்கு மூன்று நாட்கள் எடுத்தன மூன்று நாட்களும் உணவை கண்டிரோம் அவப்போது காணும் குடிகளில் உள்ள கிணறுகள் தாகம் தீர்க்கும் அதைவிட வேறு ஏதும் வயிறு கண்டறியாது .கொதித்துக்கொண்டிருந்தது வயிறும் மனமும் ,
பயஸ் அங்கே தன் நண்பன் ஒருவனை கண்டுவிட்டார் அவரிடம் பேசும்போது அவர் தான் இருக்கும் இடத்தில் வந்து இருங்கள் என எமை அழைத்தார் அந்த இடம் ஒரு நூறு மீற்றர் தூரத்தில் இருந்தது சனக்கூட்டத்தை தாண்டி அந்த வீடிருக்கும் காணிக்குள் கால் வைக்கின்றோம் காணி முழுவதும் மக்கள் நிறைந்து இருக்கின்றனர் உணவோ ,உறையுளோ அப்போது பெரிதாக அவசியமாக தெரியவில்லை மக்கள் அதிகமாக இருக்கும் இடங்கள் ஏதோ ஒருவகையில் மன பயத்தை கொஞ்சம் நீக்கியது காணி முழுவதும் பங்கர் மயமாக இருந்தது நாமும் போய் உள் நுழையும் போது எங்கிருந்தோ வந்த கொத்துக்குண்டுகள் அங்கே விழுகின்றன பனை வடலிகளுக்குள் அமைந்த பக்கருக்குள் அண்ணனும் அண்ணியும் குழந்தைகளும் நுழைந்துவிட்டனர் அதற்க்கு அருகில் விழுந்த பொஸ்பரஸ் குண்டு பங்கருக்கு மேலே இருந்த பனை வடளிகளில் பட்டு பனைவடலிகள் முளாசி எரிகின்றன ,குழந்தைகளோடு உள் நுழைந்தவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர் சிறிய இடைவெளியில் அங்கிருந்து புறப்பட்டு குழந்தைகளோடு ஓடி வந்தனர் ,இப்போது புரிந்துவிட்டது எமக்கு இனி சாவுதான் எம் கடைசி தருணம் என ,என் உறவுகள் யாரும் திசை மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன் .அதிலிருந்தும் ஒரு ஐநூறு மீற்றர் தூரம் நகர்ந்து இன்னொரு காணிக்குள் நுழைகின்றோம் அங்கும் பல பதுங்குகுழிகள் இருக்கின்றன போய் சேருவதற்குள் வரும் பதுங்கு குழிக்குள் எல்லாம் இறங்கி இறங்கி ஏறி ஓடுகின்றோம் ,இறுதிக்கட்டம் இப்போது மாலை ஆகிவிட்டது குண்டுமழை ஓயாமல் இருக்கின்றது பதுங்கு குழிக்குள் இடம் இல்லை அவ்வளவுக்கு நெருக்கடியாக அதற்குள் அடைபட்டு கிடக்கின்றோம் ,அப்பாவும் அம்மாவும் பதுங்கு குழிக்கு வெளியே இருக்கின்றனர் ,சற்றும் எதிர்பாரத நேரம் நாம் இருந்த வீட்டின் வாசலில் கொத்துக்குண்டு ஒன்று வந்து வீழ்கின்றது வெளியில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் அவலக்குரல் எழுப்புகின்றனர் என் பெயரை சொல்லி என் அப்பா அவலக்குரல் எழுப்புகின்றார் நான் காயப்பட்டுவிட்டேன் என்னால் எழும்ப முடியவில்லை என அப்பா என்னை அழைக்கின்றார் .தொடாராக எறிகணை வருகின்றது நான் பதுங்கு குழிக்குள் இருந்து எழுந்து ஓடி அப்பாவை தூக்கி வருகின்றேன் பதுங்கு குழிக்குள் இருந்த இளைஞன் ஒருவன் ஒரு சரம் தந்தான் அப்பாவிற்கு உடல்முழுவதும் காயம் பத்து இடங்களில் குண்டுகள் துளைத்து உள்ளேயே இறுகி நிற்கின்றது கால்களிலும் ,முழங்கைகளிலும் ஒரே மாதிரியாக பலத்த காயங்கள் எல்லா காயத்தில் இருந்தும் குருதி கொப்பளிக்கின்றது முடிந்தவரை கட்டு போட்டுக்கொண்டு அப்பாவை கைத்தாங்கலாக தாங்கிக்கொண்டு அந்த இடத்தில் இருந்தும் நகர்கின்றோம் ,இப்போது முள்ளிவாய்க்கால் வந்துவிட்டோம் இன்று அப்பா காயப்பட்டு இரண்டாவது நாள் எந்தவித மருந்துகளையும் அந்த காயத்துக்கு போடவில்லை டெட்டால் போத்தல் ஒன்று கையில் கிடைத்தது அதனால் காயத்தை சுற்றி சுத்தம்செய்து விட்டுக்கொண்டேன் இரண்டாவது நாள் முள்ளிவாய்க்காலின் நெடும் மணல்வெளிக்கு வந்துவிட்டோம் விடத்தல் பற்றைகள் எங்கும் மக்களின் அவல வாழ்வின் சுவடுகளும் ,பிணங்களுமாக இருந்தன காயம் அதிக வலியை ஏற்ப்படுத்தியது அப்பாவிற்கு ,இதற்குமேல் என்னால் நடக்கமுடியாது என அப்பா ஓரிடத்தில் இருந்துவிட்டார் ஒரு கைத்தடி இருந்தால் ஊன்றிக்கொண்டு வரமுடியும் இல்லை எனில் நகரமுடியாமல் தத்தளித்தார் மக்கள் இராணுவத்தை நோக்கி சரணடைய நகர்கின்றனர் நாமும் அவ்வாறன நிலைக்கு வந்துவிட்டோம் ஆனால் அப்பாவால் நகர முடியவில்லை ,தனக்கு ஒரு கைத்தடி வேண்டும் என்கின்றார் ,கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரு சிறு தடியைகூட காணவில்லை ,நான் ஒரு பனை மரத்தடியில் அப்பாவையும் மற்றோரையும் காத்திருக்க சொல்லிவிட்டு ஒரு தடியை எடுப்போம் என மீண்டும் ஓடுகின்றேன் சுடுமணலில் கால்கள் புதைந்து ரணமாக் வேதனையை தருகின்றது என்கண்களில் மக்கள் யாரோ விட்டுப்போன ஒரு மண்வெட்டி பிடியோடு தென்படுகின்றது அதை நோக்கி ஓடுகின்றேன் அதை பிடியில் இருந்து பிரித்தெடுக்க முடியாமல் போடுவிட்டு சுற்றி சுற்றி தேடுகின்றேன்
ஏராளமான மக்களின் உடைமைகள் சிதறிப்போய் கிடக்கின்றன ஆனால் ஒரு தடியை மட்டும் என்னால் எடுக்கமுடியவில்லை ,இன்னும் கொஞ்சம் தொலைவில் நீளமாக ஒரு பொருள் தெரிகின்றது நிச்சயமாக அது தடியாகவோ ,அல்லது இரும்பு சட்டமாகவோ ,அல்லது பிளாஸ்டிக் குளாயகவோ இருக்கவேண்டும் அது ஒன்றே போதும் என்ற எண்ணத்தோடு ஓடுகின்றேன் அதை நோக்கி நூறு மீற்றர் ஓடுவதற்குள் எண்ணற்ற உயிரற்ற உடல்களை கடந்திருப்பேன் ,அதற்க்கு கிட்டவாக சென்றுவிட்டேன் சற்று தொலைவில் ஒரு பெண்ணின் உடல் ,அந்த கைத்தடியை எடுக்க குனிகின்றேன் எதிரில் ஒரு ஆணின் கால் அடர்ந்த கால்முடிகளோடு வெண்மையான அந்த கால் ஒற்றையாக தொடைவரை துண்டித்த நிலையில் கிடந்தது அங்கே அருகில் எந்த ஆண் உடல்களையும் காணவில்லை கண்டிப்பாக அது ஒரு போராளியின் கைத்தடியாகத்தன் இருக்கவேண்டும் அப்படியாயின் அந்த கால்களும் ஒரு போராளியினுடையதாகத்தான் இருக்கவேண்டும் ,மல்லாக்க கிடந்த அந்த கால்கள் பயப்படாமல் எடுத்துக்கொண்டு ஓடு தாமதிக்காதே என்பதைப்போல கிடந்தது மின்னல் வேகத்தில் கைதடியை கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்து அவரையும் அழைத்துக்கொண்டு இராணுவத்திடம் சரணடைய செல்கின்றோம் …

ப்ரியமதா பயஸ் (தொடரும் )