தம்பியார் தேவன் மூலம்
உங்கள் படைப்பை வாசித்து உயிர்ப்புற்றேன் வாழ்த்துகள் சகோதரி
நான் சில புத்தகங்களை வாசித்து முடிக்க வாரங்களாகும் ஏன் மாதங்களாக கூட நீளும். ஆனால் ‘அணையாத கனவுகள்” புத்தகத்தை
இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன். 235 பக்கங்கள் 20 கதைகளைக் கொண்ட நாவல் இது.
அப்படி இந்த புத்தகத்தில் என்னதானிருக்கு?
போர்குற்ற விசாரணைக்கு சாட்சி இன்னும் போதாது போதாது என்கிறார்களே. இந்தப் புத்தகத்தையும் சாட்சியாய் சேர்க்க கூடிய அளவுக்கு தகவல்கள் புத்தகத்தின் பக்ககங்கள் எல்லாம் நிரவியிருக்கு.
முன்னாள் பெண் போராளியான பிரபா அன்பு அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் இது
ஏதோ கற்பனையில் கம்பன் வரைந்த
கம்ப காவியமல்ல இது. இரத்தமும் கண்ணீரும் தோயந்த ஈழகாவியம்.
தானும் தன் தோழிகளும் வீரர்களும் வன்னி மக்களும் அனுபவித்த கண்ணீரும் கவலைகளும் காயங்களும் இரத்தங்களும் மரண ஓலங்களும் நிறைந்த பக்கங்களான புத்தகம்.
இதய நோய்காரர்களும்,இரக்கம் நிறைந்தவர்களும், கர்ப்பணி தாய்மாரும் இந்தப் புத்தகத்தை படிக்காமல் இருப்பது அவர்கள் ஆரோக்கியத்துக்கு மிகவும் பாதுகாப்பானது.
மாடுகட்டி போரடித்தால் மாழாதென்று யானை கட்டி போரடித்தான் தமிழன் என்று
தொண்ணூறுகளில் புதுவையின் கவியரங்கத்தில் பெண் போராளி ஒருவர் கவிதை பாடிய போது. ஔிநாடாவில் பார்த்த போது நானும் அருகிலிருந்த நண்பரும் சிலிரித்து அந்தப் பேச்சை திரும்ப திரும்ப ரசித்த நாட்கள் நினைவுக்கு வந்தது காரணம். இறுதி யுத்தத்தில் உண்ணக் கஞ்சியில்லாமல் தமிழர்களும் வீரர்களும் அலைந்திருக்கிறார்கள். ஒருவருக்கான கஞ்சி கிடைத்தாலும் மூன்று போராளிகள் பகிர்ந்து உண்டிருக்கிறார்கள்.
நீங்களும் நானும் நினைப்பது போல்
ஆமைக்கறி உண்டு விட்டு அம்மபாரியாக யானையில் சுற்றி வந்தர்களல்ல
மொசட்டை இலையை வறுத்து உண்டு பசியாறியிருக்கும் பரம பிதாக்கள்.
தாய் தனக்கு கொடுத்த ஜெபமாலையையும் மோதிரத்தையும் தன் தோழிக்கு கொடுத்து
விட்டு இறந்த சக தோழி. துட்டிருந்தால் காதலிக்கும் பெண்களுக்கு மத்தியில் இடுப்புக்கு கீழே இயங்காத போராளியை காதலித்து இறுதி வரை வாழ்ந்த பெண் போராளி. தான் விடுமுறையில் ஊருக்கு போகும் போது தன் தோழிக்கும் உடைகளும் பலகாரங்களும் கொண்டு வரும் தோழி. சமர் இல்லாத காலங்களில் பாசறைகளில் பாசப்பறவைகளாக சந்தோசமாக தான் வாழ்ந்திருக்கின்றார்கள்.
போராளிகளை தங்கள் பிள்ளைகளாய் நேசித்த வன்னி மக்கள் தாயொருத்தி தன்னிடம் இருந்த மாவில் சுட்ட மூன்றுரொட்டியை காவலரணில் இருந்த பெண் போராளிகளுக்கு இரண்டை கொடுத்த தாயுள்ளம்.
இன்னொரு தாய் மூன்று நாள் உணவு இல்லாததை அறிந்த பெண் போராளி ஆண் போராளிகளிடம் போய் கழுவப் போட்ட கஞ்சிக்கிடாரத்தை வழித்து சிரட்டையில் கஞ்சி வளித்து கொண்டு வந்தால். ஆமிக்காரனின் ஷெல்லடியில் தாயும் மகளும் வீடும் இருந்த இடம் தெரியாமல் சிதறிக் கிடக்கும் கோலம் கண்டு அழுகின்ற பெண் போராளியின் அன்புளளம்.
தான் நேசித்த தலைவனை குடும்ப தகராறில் வார்த்தையில் இழுத்தத்திற்காக விவாகரத்து செய்யும் பெண்.
இறுதி யுத்தத்தில் ஷெல்லடியில் தன் குடும்பத்தை இழந்து தனியனாக நிற்கும் சிறுவன். பக்கத்தில் நின்ற பெண்ணை அம்மாவென்று அழைக்க. அதே சம்பவத்தில் தன் மகனை பறிகொடுத்த தாய் தன் மகனின் பெயரை சூட்டி வளர்க்கும் தாய்மை
புனர்வாழ்வு முகாங்களில் வேடன் வலையில் சிக்கிய புறாக்களாய் தவிக்கும் புலிகள் படுக்க இடுமில்லை பசிக்கு உணவுமில்லை குளிக்க நீருமில்லை குடிக்க நீருமில்லை யாரென்று கேட்க நாதியற்ற வாழ்வின் துன்பத்தின் உச்சமது
கணவனை களத்தில் பறி கொடுத்து விட்டு
இரண்டு மகன்களோடு வாழ்க்கையில் போராடும் தாய்க்கு. புலம்பெயர்ந்து விடுமுறையில் போன ஒருவன் நான் உங்களின் கணவனின் நண்பென்று அறிமுகமாகி வருவாய்க்கு பால் மாடு வாங்கிக் தந்து விட்டு பரிகாரமாய் அந்தப் பெண்ணை தன் இச்சைக்கு பலாத்காரம் செய்யும் காமுகன் என்ற கண்ணன்.
கண்ணன் கடவுளானாலும் கண்ணன் மனிதனாலும் லீலைகாரர்கள் தான் போல.
உதவி உத்தமர்களின் பாரிய கொடைகளால்
அழுது வடியும் மாணவி காரணம் தந்தையை இழந்த போராளி குடும்பத்துக்கு துவிச்சக்கரவண்டியை கொடுத்து விட்டு அதை படம் பிடித்து பத்திரிக்கைகளில் முகநூல்களில் விளம்பரம் தேடும் விளம்பரப் பிரியர்களின் செயலால் சக மாணவிகள் உன் படம் பத்திரிக்கையில் வந்துள்ளதாக பரிகாசம் செய்யும் செயலுக்கு அழுது புலம்பும் ஏழை மாணவியின் ஏக்கம்.
நாங்கள் செல்வந்த நாடுகளில் சிறப்புடன் வாழ. நம்மினத்தில் ஒரு பகுதியினர் ஷெல்களில் அங்கங்கள் இழந்து குடும்பங்கள் இழந்து குருடர்களாய் முடவர்களாய் விடுதலை வேள்வியில் பலியாடுகளாய் மடிந்திருக்கின்றார்கள்.சிலர் இன்னும் நடை பிணங்களாய் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்
யாழ்ப்பாணத்திலுள்ள பெரும் பாலானவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்ந்திட. வன்னியில் உள்ள வீடுகளில் உள்ள பிள்ளைகள் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் போராளிகளாய் மடிந்திருக்கின்றார்கள்.
மதியரசன், இசையரசன், கவிமாறன், கனியரசி, மாதவி ,கங்கை, வளர்நிலா,கங்கை என்று எம் வாழ்வில் விடியலுக்கு வழி பிறக்குமென்று வலி தாங்கிய மாவீரச்செல்வங்களின் உயிர் கொடையின் சாட்சியாக இந்த புத்தகப் படைப்பு
உறவுகளே வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்
கல்லை உருவைக்கும்
முள்ளை மலராக்கும்
பாலையை பனியாக்கும்
காயைக் கனியாக்கும்
கதையல்ல இது தமிழர்களின் சதையில் வடியும் குருதியிது.
-கவிஞர் காந்தன்-
சுவிஸ்