பிறப்பெடுத்த புலிகளின் முதல் மரபுப் படையணி…

236

2ஆம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப கட்டங்களிற் கெரில்லாப் போர் அணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் பின்னர் மரபுவழி இராணுவ அம்சங்களை பிரதிபலிப்பவர்களாகப் போரரங்கில் நுழைந்தனர். அது விடுதலைப் புலிகளின் போரியல் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவிட்டது.

ஒரு மரபுவழி இராணுவத்தின் தேவையை அன்றை சூழல் எமக்குத் தந்தது. எதிரி தனது முகாம்களைப் பலப்படுத்தியதுடன் ஒரு கெரில்லா அமைப்பாற் சாதாரணமாகத் தாக்கியழிக்கப்பட முடியாதவாறு தன் முகாம்களை அமைத்திருந்தான். ஏற்கனவே மரபுவழிப் படைக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்த தன் படைகளைப் பலப்படுத்தி, நவீன ஆயுதங்களையும் புதிய போர் நுணுக்கங்களையும் பெருமளவிலான ஆளணிகளையும் ஒன்று சேர்த்து, ஒரு பலம் வாய்ந்த மரபுப்போர் இராணுவமாகத் தன் படைகளை எதிரி ஒழுங்கமைத்திருந்தான்.

இப்புதிய ஒழுங்கமைப்பின்மூலம், தான் ஏற்கனவே எம் தாயகப் பிரதேசத்தில் அமைந்திருந்த முகாம்களை எமது தாக்குதல்களிலிருந்து காப்பாற்றியதுடன், எமது பாரம்பரிய பிரதேசங்களின் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டும் புலிகளின் தளப்பிரதேசத்தைக் கைப்பற்றியும் மக்களின் வாழ்வை அவலப்படுத்தியும் ஆக்கிரமித்தும் எம் மக்களை ஏதிலிகளாக்கும் ஒரு நீண்ட திட்டத்தை எதிரி தயாரித்திருந்தான்.

எதிரியின் இப்புதிய போர் மூலோபாயமானது எம் போராட்ட வளர்ச்சிக் கட்டத்திற் பேராபத்தை விளைவிக்கக்கூடிய தடைக்கல்லாக இருந்தது. இந்நிலையில் எதிரியின் மரபுவழி இராணுவத்தை எதிர்கொண்டு அந்த இராணுவத்தைத் தாக்கி அழிக்கத்தக்கவாறான பயிற்சி, தந்திரம், நவீன ஆயுதங்;களைக் கையாளக்கூடிய திறமை, அணிகளைப் போரில் வழிநடத்தும் புலமை என்பன நிரம்பப்பெற்ற படையணிகளாக எம்மை மாற்றிக்கொண்டு விடுலைப்போரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எமது விடுதலைப் படையைத் தயார்படுத்தத் தலைவர் முயன்றார்.

அன்றைய காலப்பகுதியில் எமது அமைப்பினால் வெற்றிகொள்ளப்பட்டிருந்த யாழ் கோட்டை மற்றும் தாக்கியழிக்கப்பட்ட கொண்டச்சி, கொக்காவில், மாங்குளம், தென்தமிழீழத்தின் பல முகாம்கள் என எல்லாமே பிராந்திய மட்டத்திற்கு உட்பட்ட எமது தாக்குதல் அணிகளாலேயே பெரும்பாலும் வெற்றிகொள்ளப்பட்டிருந்தன. ஆனாலும், சில முகாம்களின் தாக்குதல் வெற்றிகள் பல பிராந்தியப் படைகளின் ஒன்றிணைந்த தாக்குதல்களின் மூலம் கிடைத்தன. அவ்வாறான வெற்றிகள் எதிர்காலத்தில் ஒரு மரபுவழிப் படையின் தோற்றத்தையும் அது தரப் போகும் வெற்றிகளையும் கட்டியங் கூறி நின்றன.

2ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய சொற்ப காலத்தில் ஒரு மரபுவழிப் படையணியின் தேவைக்கான சூழல் தலைவரால் உணரப்பட்டு, அவரின் எண்ணப்படி அது உருவாக்கம் பெற்றது. விடுதலைப் புலிகளின் இராணுவ அமைப்பானது தன்னை ஒரு மரபுவழிப் போரிற்குத் தயாரான படைப்பிரிவாக உருமாற்றியவாறு, மரபு இராணுவத்துக்குரிய தன் வளர்ச்சிப் படியில் விரைவாகவும் நிதானமாகவும் முன்னேறத் தொடங்கியது.

1991ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி மாவட்டரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகள் ஒன்றிணைக்கப்பட்டு 1500 பேர்கொண்ட ஓர் அணியாகச் “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி” எமது இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக உத்தியோகபூர்வமாக எமது தலைவர் அவர்களாற் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதுவரை காலமும் நடைமுறையிலிருந்த இராணுவக் கட்டமைப்புக்களும் போர்ப் பயிற்சித் திட்டங்களும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் உருவாக்கத்துடன் புதிய வடிவம் பெறத்தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்,தென்மராட்சியின் எழுதுமட்டுவாட் பகுதியில் ஒன்றிணைக்கப்பட்ட இப்புதிய படையணியானது 1200 பேர்கொண்ட தாக்குதல் அணியாகவும் 300 பேர் கொண்ட கனரக ஆயுத அணியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டது.

“சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி” என்னும் பெயர் தலைவர் அவர்களாலேயே சூட்டப்பெற்றது. லெப். சாள்ஸ் அன்ரனி (சீலன்) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர். தமிழீழ விடுதலைப் போரிற் சிங்கள இராணுவத்தின்மீதான புலிகளின் முதலாவது தாக்குதலைத் தலைமையேற்று நடாத்திய, முதலாவது தாக்குதற் பிரிவுத் தளபதி விடுதலைப்போரில் எமக்கெல்லாம் சிறந்த உன்னத வழிகாட்டியின், புலிகளின் தாக்குதற் படைப்பிரிவின் முதலாவது தளபதியின் ஞாபகமாகவே விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுப்போர்ப் படையணிக்கு “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி” எனப் பெயர் சூட்டப்பெற்றது.

“சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி”யின் தொடக்க நாள் அன்று படையணிப் போராளிகள் மத்தியில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உரையாற்றும்போது “நீண்டதும் கடினமானதுமான எமது விடுதலைப் போரில் இறுதிவரை உறுதியுடன் போராட உடல், உளப்பயிற்சிகள் அவசியம். எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து அதனை வெற்றி கொள்ளத் தேவையான தந்திரங்களையும் வகுத்துக்கொள்ள வேண்டும். இவை இருந்தால் மட்டும் ஒரு படையணி வெற்றியடைய முடியாது. இவற்றைச் செயற்படுத்தும் துணிவும் வேண்டும். பயிற்சி, தந்திரம்,துணிவு இவையே ஒரு படையணியின் வெற்றியைத் தீர்மானிக்கும்” எனத் தெரிவித்தார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி இதையே தனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது. மேலும், அவர் கூறுகையில் “விடுதலைப் போரிற் பெரிய இலக்குகளைத் தாக்கியழிப்பதுடன், தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் செயற்படும் அணியாகவும் நீங்கள் விளங்க வேண்டும்” எனத் தெரிவித்தபோது முதன்முதலில் ஒரு சிறப்புப் படையணியாகக் கூடி நின்ற போராளிகளின் மனதில் அது புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது.

இப்படைபிரிவின் உருவாக்கத்திற்காகப் பல்வேறுபட்ட பிராந்தியப் படைகளில் இருந்து வந்திருந்த போராளிகளின் மனதில் மகிழ்வும் ஆர்வமும் ஒத்துழைப்பும் வேகமும் மேலோங்கியிருந்தன. அன்றைய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த போராளிகள் ஒவ்வொருவரதும் அயராத முயற்சியாலும் அர்ப்பணிப்பாலுமே விடுதலைப் புலிகளின் மரபுப் போர் அணிகளின் முதற்படியான “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி” புலிகளின் புதிய போரியலுக்கான ஒரு திறவுகோலாகத் தன்னை அமைத்துக்கொண்டது.

ஆரம்பத்தில் இப்படைப் பிரிவின் சிறப்புத் தளபதியாகத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் (மாவீரர்) அவர்களும் தளபதியாக லெப். கேணல் ராஜன் (மாவீரர்) அவர்களும் துணைத் தளபதியாக லெப். கேணல் ஜஸ்ரின் (மாவீரர்) அவர்களும் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டனர்.

2ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப நாட்களிற் சிங்களப் படைகளின் உடனடி இலக்காக வன்னிப் பகுதியே இருந்தது. மணலாறு உட்பட வன்னியின் பகுதிகளைக் கைப்பற்றி, வடக்கு – கிழக்கைப் பிரித்தெடுக்கவேண்டிய அவசர இராணுவத் தேவை எதிரிக்கு இருந்தது. இந்தியஇராணுவத்துடனான எமது போரை நடாத்திய தலைவர் தங்கியிருந்த மணலாற்றுப் பகுதியின் இராணுவ முக்கியத்துவம் எதிரிக்கு நன்கு தெரிந்தது. இதனால் வன்னியையே முதலிற் கைப்பற்ற எதிரி எண்ணினான். எனவே, எதிரியின் மரபுவழி இராணுவ நடவடிக்கையை எதிர்நோக்கி விடுதலைப் புலிகளின் “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி” வன்னியிலேயே தன் ஆரம்பச் செயற்பாடுகளைத் தொடங்கியது. “வன்னியைப் பதுகாப்பதே எமது உடனடித் தேவையாக அப்போதிருந்தது. அதற்குரிய நடவடிக்கையிலேயே நாம் உடனடியாக ஈடுபட்டோம்” என அன்றைய சூழலை நினைவுகூர்ந்தார் தளபதி பால்ராஜ்.

2ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கிய ஆரம்பகாலப்பகுதி. சிங்களப் பேரினவாத அரச இராணுவம் விடுதலைப் புலிகளை எளிதாகத் தோற்கடித்துவிடலாமென நம்பியிருந்த காலமது. எனவேதான், விடுதலைப் புலிகளைத் தொடர்ச்சியான முற்றுகைக்குள்ளாக்கி எம் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்க எதிரி முயன்றான். எமது கட்டுப்பாட்டுப் தளப்பிரதேசத்தை ஆக்;கிரமிப்பதன் மூலம் எம்மைத் தோற்கடிக்க எதிரி திட்டமிட்டான். அதற்காகவே அன்றைய பெரும்பாலான படையெடுப்புக்கள் எதிரியால் மேற்கொள்ளப்பட்டன. எதிரியின் இந்த முற்றுகைச் சமரை உடைப்பதில், அவனது இராணுவ நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்குவதில் அன்று சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பங்கு பிரதான இடத்தைப் பெற்றிருந்தது. அன்று தொடக்கம் இன்று வரை எதிரியின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான முறியடிப்புச் சமர்களானாலும் எம்மால் திட்டமிடப்பட்ட வலிந்த தாக்குதல்களானாலும் அவற்றிலெல்லாம் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைத் தலைவர் அவர்கள் ஒப்படைத்து வருகின்றார்.

இவ்வாறு எமது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் உருவாக்கமானது எம் போராட்ட வடிவத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்துவிட்டது. கெரில்லாப் போராட்ட வடிவத்திலிருந்து நாம் மரபுவழி இராணுவ அம்சங்களைக்கொண்ட படையணிகளாக மாறிய போரியல் வளர்ச்சியின் ஆணிவேராக நின்று, எதிரியின் எத்தனையோ இறுக்கமான சவால்களையும் நெருக்கடிகளையும் தனக்கே உரித்தான நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு, வீரத்தாலும் தியாகத்தாலும் எமது விடுதலைப்போர் வரலாற்றை நிறைத்தபடி, எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலிற் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உறுதியுடன் நிமிர்ந்து நிற்கின்றது.

உலகம் அதிசயிக்கும் இன்றைய விடுதலைப் புலிகளின் போர் நுட்பங்களும் படைநகர்த்தும் திறனும் புலிப்போராளிகளினது வீரத்தாலும் தியாகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட ஒரு கோபுரமாயின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் செயற்பாடுகள் அதன் அத்திவாரக் கற்களில் ஒன்றாகும்.

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் “வென்று வந்த வரலாற்றின் ஒரு சகாப்த வரிகள்” எனும் கள வரலாற்று தொகுப்பிலிருந்து…

எழுத்துருவாக்கம்: அ.பார்த்திபன்.