பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு உத்தியோகப்பூர்வ அட்டை.

36

பிரித்தானியாவில் ஒவ்வொருவருக்கும்
கோவிட் -19 தடுப்பூசி போட்டபின் தடுப்பூசி அட்டை வழங்கப்படும்.கோவிட் -19 தடுப்பூசி இரண்டு தடவை போட வேண்டும்.இந்த தடுப்பூசி அட்டையை உங்கள் பணப்பையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு உத்தியோகப்பூர்வ அட்டை ஒன்றை வழங்க இருப்பதாக புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.உலக நாடுகளில் சில தங்கள் நாட்டு குடிமக்களுக்கு கொரோனா கடவுச்சீட்டு ஒன்றை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது.

அதன் பயன்பாடு தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளிவராத நிலையில்,தற்போது பிரித்தானியாவில் கொரோனா அட்டை ஒன்றை உத்தியோகப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளனர்.பிரித்தானியாவில் செவ்வாய்க்கிழமை முதல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் தெரிவு செய்யப்பட்ட 50 மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

முதல் டோஸ் பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் கட்டாய இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட உள்ளனர். அத்துடன் அவர்களுக்கு கொரோனா அட்டை ஒன்றையும் வழங்க உள்ளனர்.

அந்த அட்டையில், கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள தவற வேண்டாம். இந்த அட்டையை கண்டிப்பாக பத்திரப்படுத்துங்கள். வாழ்க்கையை அனுபவியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கண்டிப்பாக இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்ள தவற வேண்டாம், அதன் பின்னரே நீங்கள் முழு பாதுகாப்புடன் இருப்பீர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, டிசம்பர் இறுதிக்குள் பிரித்தானியா மொத்தம் 4 மில்லியன் டோஸ்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

தெரிவு செய்யப்பட்டுள்ள 50 மருத்துவமனைகளில் பெரும்பாலான மருத்துவமனைகளுக்கு முதற்கட்டமாக 800,000 டோஸ்களை வினியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பல்கலைக்கழக மருத்துவமனையே பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ்களை முதன் முதலாக பெற்றுக்கொண்ட மருத்துவமனைகளில் ஒன்று என தெரிய வந்துள்ளது.

இதனிடையே, மருத்துவமனைகளில் வழங்கப்படும் கொரோனா அட்டை தவறாக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தரப்பு தங்கள் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

-ஈழம் ரஞ்சன்-