பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் ஈழத்தமிழரை நிறுத்த திட்டம்

106

பிரித்தானிய தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பில் இணைய முன்வந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் இளையோர்!

  • பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் ஈழத்தமிழரை நிறுத்த திட்டம் –

பிரித்தானியாவில் இயங்கும் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் (Tamils for Labour) முக்கிய ஒன்றுகூடல் நிகழ்வானது நேற்றைய தினம் பிற்பகல் 8.00 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் நூற்றுக்கு மேற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டதுடன், தாமும் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பானது, பிரித்தானியாவில் பல வருடங்களாக இயங்கிவருவதுடன் பி்ரித்தானிய தொழில்கட்சி் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலை பற்றி விளக்கமளித்து வருவதுடன், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர்கள் உரத்துக்குரல் கொடுக்க அழுத்தம் குடுத்துவரும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய நிகழ்வில் மூத்த சட்டத்தரணியான திரு அருண் கணநாதன் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

தனது தலைமையுரையில் பிரித்தானிய தொழிற்கட்சி (Labour Party) பற்றியும், ஈழத்தமிழர் விடயத்தில் அவர்களின் நிலைப்பாடு பற்றியும் எடுத்துரைத்த திரு சென் கந்தையா அவர்கள் ஈழத்தமிழ் இளையோர் தொழிற்கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பிரித்தானியாவில் தறபோதுள்ள பழமைமைவாவாதக்கட்சி (British Conservative Party) இலங்கை இனப்படுகொலை விடயத்தில் எந்தவொரு திடமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் தற்போதுள்ள தொழிற்கட்சியானது தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கரையுடன் செயற்படுவது மட்டுமன்றி, இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை என்று பிரித்தானிய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுவதாகவும், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனை செய்ய ஒத்துழைப்பு வழங்குவதற்கு வாக்குறுதி தந்துள்ளதையும் தெரிவித்தார்.

சிறப்புரையாற்றிய அருண் கணநாதன் அவர்கள், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு நியாயம் தேடுவதற்கான வழிமுறைகளையும் இந்த போராட்டத்தில் தொழில்கட்சியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் தற்போது பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் பணிகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. குறிப்பாக, சவேந்திர சில்வா உட்பட்ட இலங்கை யுத்த குற்றவாளிகளை பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என்ற போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய திட்டமிடலும் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் அனுஷன் பாலசுப்பிரமணியம், பபிஷன் போல்ராஜ், நிலக்ஐன் சிவலிங்கம்,திருஞானசம்பந்தர் லக்ஸ்மன்,கனிஸ்டன் விமல்நாதன், லம்போதரன் நாகராசன், தோமஸ் பீரிஸ், கஜானன் செல்வராசா,வாகீசன் விசாகரட்ணம், விஐய் விவேகானந்தன், சிந்துஜா ஜெயன், அரவிந்தன் வசந்தி,புவனேந்திரன் சிவராம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அத்துடன் அவர்கள் தொழிற்கட்சியில் இணைவதற்கான தமது விருப்பத்தினையும் வெளிப்படுத்தினர்.

ஈழத்தமிழர்களின் ஏகோபித்த அபிலாசையான தமிழீழம் என்ற கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்து, அதற்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மட்டத்தில் பலம் சேர்க்கும் முக்கிய பணியை பல ஆண்டு காலமாக, திரு சென் கந்தையா தலைமையில் தொடர்ந்தும் தளராது முன்னெடுத்து வரும் இந்த அமைப்பின் செயற்பாட்டை உடைக்கும் நோக்குடனும், சுயநல காரணங்களுக்காகவும், பிரித்தானிய தமிழர் பேரவையினர் இதே பெயரில் இன்னொரு அமைப்பை உருவாக்கி, மக்களையும் பிரிந்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் குழப்பிவருவது தொடர்பாக இளையோர் தமது வருத்தத்து பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் நூற்றுக்கணக்கான தமிழ் இளையோர் சரியான அமைப்பை தெரிவுசெய்து, இணைந்து செயற்பட முடிவுசெய்திருப்பதானது அவர்களின் அரசியல் தெளிவை எடுத்துக்காட்டுவதுடன், மிகவும் நம்பிக்கையளிப்பதாக இருந்தது.