பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.

49

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இன்று (30) புலம்பெயர் தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தினரால் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட பல லட்சம் தமிழ் உறவுகளிற்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் பல லட்சம் தமிழர்கள் காணமல் ஆக்கப்பட்டு இன்று வரை அவர்கள் பற்றிய எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. இலங்கையில் தொடர்சியாக நீதி கோரி பல போராட்டங்கள் இடம்பெற்று வந்தாலும் ஐக்கிய நாடுகள் சபையோ சர்வதேச சமூகமோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கையில் இன்றுவரை தமிழர்கள் இலங்கை அரசினாலும் இராணுவத்தாலும் அச்சுறுத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம் பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றது. இதற்கான நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இன்றுவரை போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள், இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை.


பிரித்தானியாவின் NORTH TERRACE TRAFALGAR SQUARE LONDON இல் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கம் – பிரித்தானியா( Association of Exiled Relatives of the Enforced Disappeared in Sri Lanka -U.K) பிரித்தானியாவின் புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தன.

இதன்போது, இறுதியுத்தத்தில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளிள் உயர்மட்ட தளபதி ஜெரி அவர்களின் மகன் புகலினியன் விக்டர் விமலசிங்கம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட போராளியிள் சகோதரி செல்வகுமாரி ஆகியோர் உணர்ச்சி பூர்வமாக உரையாற்றினர்.

இப் போராட்டத்தினை இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கம் – பிரித்தானியா( Association of Exiled Relatives of the Enforced Disappeared in Sri Lanka -U.K) என்ற அமைப்பின் சார்பில் அமல்ராஜ் ஜெயக்குமார், செல்வகுமாரி லோகநாதன், விஜயகுமார் ஜயகீசன், நிலக்ஐன் சிவலிங்கம், அனுஷன் பாலசுப்பிரமணியம், சாந்தசீலன் பேரூஷன், அன்ரனீஸ் உதயகுமாரன் றொனிஸ்ரன், அன்ரனீஸ் உதயகுமாரன் றொகான், அன்ரனீஸ் உதயகுமாரன் றொனால்ட், அருமைராசா பிரியங்கன், டினேஸ் ரகுநாதன், துலக்‌ஷன் பாலசுப்பிரமணியம், புகழினியன் விக்டர் விமலசிங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.