இத்தனை வருடங்களுக்கு பின்னும் ஈழவிவகாரம் பற்றி பேச வேண்டுமா என்கிறார்கள் சிலர், அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்கிறார்கள் சிலர். கொரோனா எனும் நோய்த்தொற்று உலகில் உயிர்களை கொல்ல துவங்கியதும் இந்தியா மருந்துகளை அனுப்புகிறது, கியூபா மருத்துவர்களை அனுப்புகிறது.
இப்படி உலகம் உயிருக்கு பதறும் கால கட்டத்தில், ஒன்னரை லட்சம் உயிர்களை எளிதாய் கொல்ல முடிந்ததென்றால் அது வெறும் ஈழத்தமிழர் விவகாரமல்ல, ஒட்டுமொத்த உலகத்தமிழருக்கான பாடம். அங்கு நடந்தது நாளை இங்கும் நடக்கும். அது நமக்கான படிப்பினை. இதை மறக்க சொல்பவன் துரோகி. மறந்து விடுபவன் பாவி.
புலிகளை தீவிரவாதிகளாக காட்ட முயலுகிறார்கள். திலீபன் உண்ணாமலிருந்து உயிர்விட்ட போது மௌனித்திருந்த வாய்களெல்லாம் பிரபாகரன் ஆயுதமேந்தியது தவறு என அறிவுரை கூறுகிறது. இதை மறைக்க ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதே அது நமக்கு எவ்வளவு அவசியமான வரலாறு என்பதை சொல்கிறது.
2020ஆம் ஆண்டில் இருக்கிறோம். இது அடுத்த தலைமுறை இணைய உலகிற்குள் காலகட்டம். ஈழப்படுகொலையின் போது அன்னை மடியிலிருந்த ஒரு தலைமுறை இப்போது அரசியல் பழக துவங்கியுள்ளது. அந்த உணர்வு போராட்டத்தை அவர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்த போகிறோம்?
முடிந்தவரை தலைவர் பிரபாகரன் துப்பாக்கியுடன் இருக்கும் படங்களை தவிர்த்து குடும்பத்துடன், குழந்தைகளுடன் இருக்கும் படங்களை பதிவேற்றுங்கள். விடுதலை புலிகள் தீவிரவாத அமைப்பல்ல உங்களை போல, என்னை போல ரத்தமும் சதையுமாக குடும்பமாக வாழ்ந்தவர்கள் என சொல்லுங்கள்.
ஒரே நாட்டில் வாழ்ந்த இரண்டு மொழி பேசும் மக்களில் பெரும்பான்மை மொழி பேசுபவர்கள் ஒடுக்க முற்பட்டு அதற்கு எதிரான சிறுபான்மை மொழியினரின் போராட்டமே ஈழப்போராட்டம் என்பதை அறியச்செய்யுங்கள். அஹிம்சை வழியில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிரெல்லாம் விட்டு இறுதியில் எடுத்த ஆயுதமே துப்பாக்கி என்பதை தெரிய படுத்துங்கள்.
இராஜராஜனின் கோவிலை பார், ஐம்பெருங்காப்பிய பாடலை கேள் என்பதெல்லாம் ஒரு தமிழனை பெருமையுடைவனாக காட்டும். இழந்த வரலாறையும் சொல்லுங்கள். அழித்த பகைவர்களை காட்டுங்கள். அது அவனை வலிமையுடையவனாக மாற்றும். மாவீரர் நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மாற்றம் வரும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம். தலைவன் புகழ் ஓங்குக ! தமிழ் வெல்க !
- பூபதி முருகேஷ்
07/05/2020