கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதில் பெரும் பங்கு தமிழ் தேசிய கட்சிகளுக்கு இருக்கிறது
முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு பின்னால் சமூக தளங்களில் அணி திரண்டு நிற்கும் இளைஞர்களில் எத்தனை சதவீதமான இளையவர்கள் தமிழ் தேசிய அரசியல் , தற்சார்பு பொருளாதாரம் , கல்வி ,விவசாயம் , கடற்தொழில், நிலம் , பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றம் என தமிழ தேச மக்களை சுற்றி நிற்கும் அவசியமான விடயங்கள் குறித்து ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் குறைந்த பட்சம் சமூக தளங்களில் பேச தயாராக இருக்கிறார்கள் ? வெற்று கூச்சல்கள் தான் நிறைந்து இருக்கிறது
ஆனால் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரச்சனைகள் எழும் போது அனைத்து தடைகளையும் மீறி, ஒரு பெரும் திரள் இளைஞர்கள் கூட்டம், சமூக தளங்களில் அணி திரளுகிறது . ஆனால் வெறும் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடுவதோடு கலைந்து போகிறது.இது எதிர் கால தமிழ் தேசிய அரசியலுக்கு ஆபத்தானது
அதே போல அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு பின்னால் அணிதிரளும் இளையவர்களுக்கு தங்கள் பின்தொடரும் அரசியல் தொடர்பான தெளிவு இருக்க வேண்டாமா…? இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கு பின்னாலும் ஒரு மெல்லிய அரசியல் இருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், தமிழ் தேசிய அரசியலின் சிக்கல்களை எப்படி புரிந்துகொள்ள முடியும் …? சிங்கள தேசியவாதத்தை எதிர்கொள்ள முடியும் ?
சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணாமல் போனோர் பெற்றோர்கள் நடத்திய போராட்டம் ஒன்றின் போது பொது பாராளமன்ற உறுப்பினர் ஒருவரால் தூண்டிவிடப்பட்ட ஒரு சில இளைஞர்கள் காணாமல் போனோரின் பெற்றோரின் நிலைபாட்டுக்கு எதிராக OMP வேண்டும் வேண்டும் என கோஷமிட்டார்கள் . அந்த இளைஞர்கள் சிலரிடம் OMP என்றால் என்ன ? எந்த சட்ட அங்கீகாரமும் /அதிகாரமும் இல்லாத OMP எப்படி காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகளை எப்படி தீர்க்கும் என நம்புகிறீர்கள் என கேட்டால் அவர்களால் பதில் செல்ல முடியவில்லை
சில நாட்களுக்கு முன்னர் வடமராட்சியை சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரிடம் சர்வதேச விசாரணை முடிந்து விட்டதா என கேட்ட போது Fact Finding Report இல் Investigation என இருக்கிறது .ஆகவே விசாரணை முடிந்து விட்டது என பதிலளிக்கிறார்
சில மாதங்களுக்கு முன்னர் ஆசிரியராக கடமையாற்றும் ஒரு கட்சி ஆதரவாளரிடம் இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தை வாசித்து எந்த இடத்தில இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என சொல்லி இருக்கிறது என சொல்ல முடியுமா என கேட்டால் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்
இப்போது உலகம் கோவிட் 19 என்கிற கொடூரத்தை எதிர்கொண்டு வருகிறது . கோவிடீ 19 இற்கு பின்னரான உலக பொருளாதாரம், அரசியல், நிதி முகாமைத்துவம் , சுகாதார மருத்துவ நிலைமைகள் என பலவேறு தலைப்புகளின் விவாதங்கள், ஆய்வுகள் நடந்து வருகின்றன . ஊடங்களுக்கும் இதற்க்கு போதிய களம் அமைத்து கொடுத்து இருக்கின்றன
ஆனால் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் என்ன நடக்குகிறது ? குறைந்த பட்சம் தமிழ் தேசிய பொருளாதாரத்தை கோவிட 19 இற்கு பின்னரான காலத்தில் எப்படி கட்டி எழுப்ப போகிறோம் என்கிற எந்தவொரு ஆய்வும் இல்லை / விவாதமும் இல்லை
கட்சி அரசியலுக்கு அப்பால் இது எதிர்கால தமிழ் தேசிய அரசியலுக்கு ஆபத்தானது. இதுமட்டுமல்லாது அரசியல் வாதிகளுக்கு பின்னால் திரிந்தால் தான் பதவி கிடைக்கும் , அரச வேலைக்கு சிபாரிசு கிடைக்கும் , தேர்தலில் சீட்டு கிடைக்கும், சமாதான நீதிவான் பதவி கிடைக்கும் என்கிற நிலை தான் உண்மையில் இருக்கிறது. கடந்த 4 ஆண்டு காலத்தில் இது மிக மோசமாக அதிகரித்து இருக்கிறது . பெரும்பாலான தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு, இளைஞர்கள் ஒரு வாக்கு வங்கி மட்டுமே. வாக்கை தாண்டி அவர்கள் அரசியல் தெளிவை பெற அனுமதிப்பதில்லை. இது நேர்மை இல்லாதது
இப்போது சொந்த கட்சிக்குள்ளேயே இளையவர்களை அணி சேர்க்கிறார்கள் . ஒரு தரப்பில் இருந்து இன்னுமொரு தரப்பை ஒரே காட்சிக்குள் இருந்தவாறு மோசமாக திட்டுகிறார்கள். நேற்று சமூக தளத்தில் ஒரே கட்சியின் குறிப்பிட்ட அணியில் இருந்து இன்னுமொரு அணிக்கு போய் விட்டார் என குறிப்பிட்டு குறித்த அணி மாறியவரின் பாடசாலையும் சேர்ந்து அவதூறு பரப்புகிறார்கள்
உண்மையில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் வீரியமிக்க இளைஞர் அமைப்புகளை கட்டி எழுப்ப வேண்டும் . பிரதேச ரீதியாக /மாவட்ட ரீதியாக கருத்தரங்க்குள் /பயிலரங்குகள் நடத்தப்பட்டு அரசியல் தெளிவுள்ளவர்களாக தமிழ் தேசிய அரசியலை அறிவுப்பூர்வமான முறையில் முன்னெடுத்து செல்ல கூடியவர்களாக உருவாக்க முன்வேற வேண்டும். குறிப்பாக தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாசைகள் , பொருளாதார தேவைகள் , நீர் முகாமைத்துவம் , வடிகாலமைப்பு முறைகள் , நிலைத்திருக்கும் அபிவிருத்தி , அரசியல் கைதிகள் மறுவாழ்வு , காணாமல் போனோர் குடும்பங்கள் மறுவாழ்வு, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தமிழ் தேசிய அரசியல் செய்ய வேண்டிய பணிகள், விவசாயம் , கல்வி , விளையாட்டு என எண்ணற்ற ஆக்கபூர்வமான விடயங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டு அரசியலில் ஈடுபாடு காட்டும் இளையவர்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இளையவர்களின் கருத்துக்களும் உள்ளடக்கி எதிர் கால தமிழ் தேசிய அரசியல் தொடர்பான செயலதிட்டம் வரையப்பட வேண்டும்
தமிழீழ விடுதலை போராட்டத்தில் மிக சாதாரண போராளிகளாக இணைந்த இளையவர்கள் அரசியல் துறையில் விற்பனர்களாக , விமான ஓட்டிகளாக, கடற் போக்குவரத்து சார்ந்த பொறியிலாளர்களாக மிக சொற்ப காலத்தில் உருவாக்கப்பட்டார்கள் . இந்த வரலாறுகள் எங்களுக்கு வழிகாட்டும் . தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் குறைந்த பட்சம் தங்களை நம்பி பின் தொடரும் இளையவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் .ஆளுமை மிக்க அரசியல்வாதிகளாக தங்களை பின் தொடரும் இளையவர்களை உருவாக்க முன் வர வேண்டும்
தமிழ் தேசிய அரசியல் என்பது வாக்கரசியல் என்பது அல்ல. அது தத்துவங்களை பயில்வது, அதன் ஊடாக சமூகத்தை பார்ப்பது, பிரச்னைகளை புரிந்து கொள்வது, தீர்வை தேடுவது.
நன்றி இனமொன்றின் குரல்