பூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.

219

சீனாவின் இன்றைய அதிகாரம் குறித்து ஆராய்ந்த புகழ்பெற்ற மூலோபாயவாதியும், பூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வையும்

விடுதலைக்காகப் போராடுகின்ற ஓர் இனம் பூகோள அரசியலில் துல்லியமான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குலக மாமேதைகள் கூறிய அறிவியற் சித்தாந்தங்களே இன்றைய உலக ஒழுங்கின் அச்சாணியாகத் திகழ்கின்றன.

அமெரிக்க மூலோபாயவாதி ‘அல்பிறெட் தேயர் மாகன்” அவர்களது மதிநுட்பமான எதிர்வுகூறல்கள், அவர் மறைந்து 100 ஆண்டுகள் கடந்தும், இன்றளவும் சர்வதேச அரசியலில் தொடர்ந்து மெய்ப்பட்டுவருகிறது.

புகழ்பெற்ற கடற்படை வரலாற்றாசிரியரும் மூலோபாயவாதியும் பூகோள அரசியற் தத்துவாசிரியருமான அல்பிறெட் தேயர் மாகன் அவர்கள் மறைந்து கடந்த டிசெம்பர் 01, 2014 அன்று 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. சர்வதேச உறவுகள் குறித்த ஆய்வுக்கும் நடைமுறைக்குமாக, வரலாறு மற்றும் புவியியலின் முக்கியத்துவம் பற்றி அமெரிக்க மக்களுக்கும் தமது தலைவர்களுக்கும் கற்பிப்பதற்காக மாகன் 20 நூல்களையும் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினார். அவற்றை அவர் 1890 இல் ஆரம்பித்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, றோட் ஐலான்ட் என்னும் தீவில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படைப் போர்க் கல்லூரியில் உள்ள தனது இருப்பிடத்திலிருந்தே எழுதினார். சமகால உலக அரசியலுக்கு வெளிச்சம் தரக்கூடிய வரலாற்றின் திறன், உலகளாவிய அதிகார வலுச் சமநிலைக்கான புவியியலின் முக்கியத்துவம், தேசியப் பாதுகாப்புக் கொள்கையில் கடல் ஆதிக்க வலுவின் பங்கு, சர்வதேச அரசியலின் விதிமுறையற்ற இயல்பு என்பவற்றில் அவரது புரிதல் 21ஆம் நூற்றாண்டு உலகிற்கு இன்றளவும் தொடர்புபட்டதாக இருந்துவருகிறது.

அமெரிக்கப் படைத்துறைக் கல்விக்கூடத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய புகழ்பெற்ற டென்னிஸ் ஹார்ட் மாகன் என்பவருக்கு 1840 இல் மகனாகப் பிறந்த மாகன், 1859 இல் அமெரிக்க கடற்படைக் கல்விக்கூடத்தில் பட்டம் பெற்று, உள்நாட்டுப் போரின்போது “யூனியன் நேவி” இல் சேவையாற்றினார். அதையடுத்து, கடற்படைப் போர்க்கல்லூரியில் தனக்கான நிரந்தர வீட்டை கண்டுபிடிக்கும் வரை எண்ணுக்கணக்கான கப்பல்களிலும் பல கடற்படை நிலையங்களிலும் சேவையாற்றினார். 1883 இல் “வளைகுடாவும் உள்நாட்டுக் கடற்பகுதிகளும்” என்ற தனது முதலாவது நூலை எழுதினார். அதில் உள்நாட்டுப் போரில் கடற்படையை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பது குறித்த ஆய்வை எழுதினார். 1890 இல் “1660 – 1783 இற்கு இடைப்பட்ட வரலாற்றில் கடல் ஆதிக்க வலுவின் செல்வாக்கு” என்ற தனது இரண்டாவது நூலை எழுதினார். அது அவருக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புகழைப் பெற்றுத்தந்தது. அநேகமாகக் கடற்படைப் போர்க் கல்லூரியில் மாகன் வழங்கிய விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நூல், உலகெங்குமுள்ள பல கடற்படைகளுக்கு “பைபிள்” ஆக மாறியது. பேரரசர் 2ஆம் கைசெர் வில்ஹெல்ம், ஒவ்வொரு யேர்மன் போர்க்கப்பலிலுலம் இந்தப் புத்தகத்தில் ஒரு படியை வைத்திருக்குமாறு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது.

“பாய்க்கப்பலில் இருந்து நீராவிக் கப்பல்வரை” என்னும் தனது வாழ்க்கை நினைவுக்குறிப்பில், உலக மேலாதிக்கத்துக்கான முக்கிய திறவுகோலாக விளங்கியது கடல் ஆதிக்க வலுவே என்ற புரிதலை, தியோடர் மொம்சென்னுடைய ஆறு பகுதிகளைக் கொண்ட “றோமின் வரலாறு” என்ற நூலைப் படித்ததில் இருந்து கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். “வரலாற்றில் கடல் ஆதிக்க வலுவின் செல்வாக்கு” என்ற தனது நூலில் பிருத்தானியப் பேரரசின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் கடல் ஆதிக்க வலுவின் பங்கு குறித்து ஆய்வுசெய்துள்ளார். அந்த நூலின் முதலாவது அத்தியாயத்தில், கடல் என்பது மனிதர்கள் எல்லாத் திசைகளிலும் அதில் பயணிக்கின்ற “நன்கு தேய்ந்து கந்தலான வணிகப் பாதைகள்” கொண்ட “அகண்டு விரிந்த பொதுப்பரப்பு” என்றும் “மிகப்பெரிய பிரதான நெடுஞ்சாலைகள்” என்றும் விவரித்துள்ளார். பல ஒடுங்கிய பாதைகளை அல்லது “நெருக்கு முனைகளை” அவர் இனங்கண்டார். அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிய பிருத்தானியாவின் கடற் கட்டளைப் பீடத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கின. கடல் ஆதிக்க வலுவுக்கு இருக்கவேண்டிய ஆறு அடிப்படை மூலங்களை அவர் புகழ்மிக்கவகையில் இவ்வாறு பட்டியலிட்டார் : புவியியல் அமைவிடம், உடல் அமைப்பு, நிலத்தின் பரப்பளவு, சனத்தொகையின் அளவு, மக்களின் பண்பு மற்றும் அரசாங்கத்தின் பண்பு என்பன ஆகும். அநேகமாக இந்தக் கூறுகளை அடிப்படையாக வைத்தே, பிருத்தானியப் பேரரசுக்கான பூகோள அரசியல் வெற்றியாளராக அமெரிக்கா இருப்பதை மாகன் நுண்ணறிந்தார்.

அமெரிக்கா, கடல்கடந்த நாடுகளைத் தன்வசப்படுத்தி ஓர் உலக வல்லரசாக உருவாகுவதற்கு வழிசமைத்த இஸ்பானிய – அமெரிக்கப் போருக்கு எட்டு ஆண்டுகள் முன்னரே, 1890 இல் “வெளிநோக்கிப் பார்க்கும் அமெரிக்கா” என்ற தலைப்பில் “அட்லான்டிக் மந்த்லி” என்ற சஞ்சிகையில் ஒரு கட்டுரையை எழுதினார். அதில் அவர், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் காணப்படும் அதிகார வலுச் சமநிலை காரணமாகத் தமது பாதுகாப்பும் நலன்களும் பாதிக்கப்பட்டதை அமெரிக்கத் தலைவர்களுக்கு உணரவைத்தார். பிருத்தானியாவைப் போன்றே அமெரிக்காவும் பூகோள அரசியல் ரீதியாக ஐரோப்பிய-ஆசியக் கண்ட நிலப்பரப்புக்களுக்கு வெளியே கடல்கடந்து அமையப்பெற்ற ஒரு தீவு என்பதை புரிந்துகொண்ட மாகன், ஐரோப்பிய-ஆசியாவின் முக்கிய அதிகார மையங்களின் வலுவான அரசியல் கட்டுப்பாட்டைப் பெற்ற ஒரு பகைமையுள்ள அரசாலோ அல்லது கூட்டணி அரசுகளாலோ தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கமுடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், ஐரோப்பிய-ஆசியாவின் பூகோள அரசியற் பன்முகத்தன்மையை உறுதிசெய்வதற்கு மிக முக்கிய மூலோபாயமாக இருந்தது ஆங்கிலேய (பிருத்தானிய) – அமெரிக்க மேலாதிக்கக் கடல் வலுவின் மிகப்பரந்த பலம்வாய்ந்த அடிப்படையே என்பதை அவர் புரிந்துகொண்டார். உலக வல்லாதிக்கத்துக்கும் நெப்போலியனுக்கும் இடையே நின்றுபிடித்த ஒரு கடற்படை என்றால் அது பெரிய பிருத்தானியாவின் கடற்படையே என (“அவை ஆழ் தொலைவில் புயல் வேகத்தில் தாக்கும் கப்பல்கள்”) “பிரெஞ்சுப் புரட்சிக்கும் பேரரசுக்குமான கடல் ஆதிக்க வலுவின் செல்வாக்கு” என்னும் தனது புகழ்பெற்ற நூலில் எழுதியுள்ளார்.

அடுத்தடுத்து வெளியான அவரது கட்டுரைகளிலும் நூல்களிலும், 20ஆம், 21ஆம் நூற்றாண்டுகளின் பூகோள அரசியற் போராட்டங்களை முற்கூட்டியே மாகன் துல்லயமாக நுண்ணறிந்து வெளியிட்டிருந்தார். 1910 இல் எழுதப்பட்ட “சர்வதேச நிபந்தனைகளில் அமெரிக்காவின் நலன்” என்ற தனது நூலில் அப்போதே தோற்றம்பெற்றுக்கொண்டிருந்த முதலாம் உலகப் போரையும், இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுக்கக்கூடிய அடித்தளமாக மறைந்திருந்த பூகோள அரசியல் நிபந்தனைகளையும் மாகன் தொலைநோக்கோடு முற்கூட்டியே கணித்திருந்தார்;. அதாவது, ஐரோப்பாவின் மைய அமைவிடத்தில் யேர்மன் இருப்பதையும், அந்தக் கண்டத்திலே அந்நாட்டின் ஒப்பற்ற தொழில்துறை, படைத்துறை ஆகியவற்றின் வலிமை இருப்பதையும், அத்துடன் பெரிய பிருத்தானியாவையும் இறுதியாக அமெரிக்காவையும் அச்சுறுத்தும் வகையில் தோன்றும் கடல் ஆதிக்க வலுவுக்கான அந்நாட்டின் தேடல் ஆகியவற்றை உணர்ந்து அவை இரண்டாம் உலகப் போரைத் தோற்றுவிக்கக்கூடிய அடிப்படையான பூகோள அரசியல் நிபந்தனைகளாக எதிர்வுகூறியிருந்தார். “பெரிய பிருத்தானியாவின் வீழ்ச்சியால் உயர்வான யேர்மன் கடற்படை, யேர்மன் இராணுவத்தோடு கடல்கடந்த இராணுவ நடவடிக்கைகளுக்காக மிகப்பெரிய அதிரடிப்படையை மேலதிகமாக அனுப்புவதற்குக் கூடத் தயாராக இருப்பது எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய சாத்தியப்பாடுகளுள் ஒன்று,” என அவர் எச்சரித்திருந்தார். “யேர்மனுக்கும் பெரிய பிருத்தானியாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பகைமை இன்றுவரை ஐரோப்பிய அரசியலுக்கு மட்டுமன்றி உலக அரசியலுக்கும் மிகவும் ஆபத்தான விடயம்,” எனச் சுட்டிக்காட்டினார். அந்த நூலில் அவர் குறிப்பிட்டதிலிருந்து இரண்டாம் உலகப் போர் முடியும் வரை 35 ஆண்டுகள் அந்தப் பகைமை நீடித்திருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

இதுவானது, வரலாற்றில் புவியியலின் தாக்கம் பற்றி அவருக்கிருந்த ஒரு புரிதலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆழமான பூகோள அரசியல் நுண்ணறிவு ஆகும்.

மேலும், முதல் இரண்டு உலகப்போர்களின் சாம்பலில் இருந்து உதித்த “பனிப் போரின்” அடிப்படையான பூகோள அரசியல் எதார்த்தங்களை 1901 இன் ஆரம்பத்திலே தனது கட்டுரைகளில் புரியவைத்தார். “ஆசியாவின் பிரச்சினை” என்ற தனது நூலில், “மேற்கு ஆசியாவின் மத்திய தரைக்கடலில் இருந்து, கிழக்கு நோக்கி யப்பான் வரை மிகப் பரந்து விரிந்து… ஒரு சறுக்கலும் இன்றி, எந்தத் தடங்கலும் இன்றி அகலக் கால்பதித்துக் கொண்டிருந்த மிகப் பிரமாண்டமான ர~;யப் பேரரசின் எழுச்சியை” சுட்டிக்காட்டி, அமெரிக்க அரசியல்வாதிகளை ஆசியாவின் வரைபடத்தை ஏறெடுத்துப் பார்க்க வைத்தார். அவ்வாறு மிகப் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து அகலக்கால்பதித்திருந்த ர~;யாவை அமெரிக்கா, பெரிய பிருத்தானியா, பிரான்சு, யேர்மனி மற்றும் யப்பான் ஆகிய நாடுகளடங்கிய ஒரு கூட்டணி மூலம் தாங்கிவைத்திருக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் தொலைநோக்காக நுண்ணறிந்து கூறியிருந்தார். அதுவே, 1945 இற்கும் 1991 இற்கும் இடையே மிகத் துல்லியமாக மெய்ப்பட்டிருந்தது.

பூகோள அரசியலில் மாகனுடைய முன்னுணர்தல் அத்துடன் நின்றுவிடவில்லை. அவர், சீனாவினுடைய ஆதிக்க வலுத் திறனை உணர்ந்துகொண்டு, சீனாவினுடைய எழுச்சியில் அமெரிக்கா கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படும் ஒரு காலம் வரும் எனவும் அவர் முற்கூட்டியே கணித்திருந்தார். 1893 இல் மாகன் “நியூ யோர்க் ரைம்ஸ்” இன் ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “ஹவாய்த் தீவை அமெரிக்கா தன்னுடன் இணைத்துக் கொண்டமையானது, வட பசுபிக் கடலை கட்டுப்பாட்டில் வைத்திருந்து செயற்படுவதற்கான மிகவும் அவசிய முதற் படி,” எனப் பரிந்துரைத்தார். அமெரிக்கா சரியாகச் செயற்படத் தவறும் பட்சத்தில், “சீனாவினுடைய மிகப்பெரும் எழுச்சியானது… கடந்த யுகங்களில் நடந்தேறிய ஒரு காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பு அலைக்குள் நாகரீகம் புதைந்துபோன அந்தத் தூண்டுதல்களுள் (impulses) ஒன்றுக்கு வித்திடும்,” என அவர் எச்சரித்துள்ளார். மேலும், “சீனா தனது கிழக்கு நோக்கிய தடைகளை உடைக்கும் பட்சத்தில், ஒரு மிகப்பெரிய நவீன வளர்ச்சியடைந்த கடல்வழி ஆதிக்கப் பலத்தைக் கொண்டு (Maritime power ) ஹவாய்த் தீவுகளை உறுதியாகத் தக்கவைத்திருப்பதில்தான் மிக முக்கிய பிரச்சினைகள் தங்கியுள்ளன என்று கூறுவது மிகையாகாது,” என எழுதியிருந்தார்.

அதேபோல், “ஆசியாவின் பிரச்சினை” என்ற நூலில் “விவாதிக்கத்தக்க மற்றும் விவாதிக்கப்பட்ட காரணிகள்” என்ற தலைப்பில் ஆசியாவின் மையப் பகுதியில் ஆதிக்க வலுவுக்கான ஒரு எதிர்காலச் சண்டையை மாகன் தெளிவாக விளக்கியுள்ளார். அத்துடன், முக்கிய பூகோள அரசியற் போட்டியாளராக சீனாவின் “மிகப்பெரிய (வெளிப்படாத) உள்ளுறைப் படை” இருப்பதை இனங்காண்டார். “சீனாவின் அளவைப் போன்ற மனிதகுலத்தின் மிகப்பெரிய விகிதாசாராமானது, ஒற்றை ஆன்மாவாக, ஒரு மனிதனாக நகர்த்தப்படுவது விரும்பத்தக்கதல்ல,” என்று குறிப்பிட்டுள்ளார். மேற்குலக விஞ்ஞானமும் தொழினுட்பமும் சிலகாலத்தில் உலகமயப்படும் என்பதை அறிந்திருந்த மாகன், அதனை விளக்கி பின்வருமாறு விபரிக்கிறார், “சீனாவின் நாநூறு மில்லியனைக் கொண்ட மிகப்பெரிய சனத்தொகை எழுச்சியானது வலுமிக்க ஒற்றை அரசியல் அமைப்பாக ஒருங்குவிந்து, நவீன தொழினுட்பங்களைக் கொண்டு, ஏற்கெனவே அதன் ஒடுங்கிய நிலப்பரப்புக்குள் அடைபட்டிருக்கையில் தொடர்ந்து அமைதியாக இருக்குமெனக் கருதுவது கடினமாது.”

முதலாம் உலகப் போருக்கு முன்பிருந்த யேர்மனைப் போன்று, 21ஆம் நூற்றாண்டில் சீனா இருப்பது மாகனைத் தழுவிக்கொண்டது. கடற்படைப் போர்க் கல்லூரி விரிவுரையாளர்களான தோசி யொ~pஹர மற்றும் ஜேம்ஸ் கோம்ஸ் ஆகியோர் சமகால சீனப் படைத்துறைச் சிந்தனையாளர்களதும் மூலோபாயவாதிகளதும் எழுத்துக்களை “21ஆம் நூற்றாண்டில் சீனக் கடற்படை மூலோபாயம்” என்ற நூலில் ஆய்வுசெய்து எழுதியுள்ளார்கள். கடல் ஆதிக்க வலுவுக்கு இருக்கவேண்டிய மாகனின் அந்த ஆறு அடிப்படை மூலங்களோடு பார்க்கையில் சீனா, கிழக்கு-மைய ஆசியாவின் இதயத்தில் நிலைகொண்டு, மிக அகன்ற கடற்கரைத் தளத்தைக் கொண்டுள்ளது, அதேவேளை ஒரு மிகப்பெரிய சனத்தொகை, வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரம், வளர்ந்துவரும் படைத்துறை மற்றும் கடற்படை ஆதிக்க வலு, அத்துடன் குறைந்தபட்சம் தற்போதாவது ஒரு திடமான அரசாங்கம் என்பவற்றைக் கொண்டுள்ளது. சீனாவின் அரசியல் மற்றும் படைத்துறைத் தலைவர்கள், ஆசியப்-பசுபிக் பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாக உள்ள அமெரிக்காவை மாற்றியமைக்க வேண்டுமென்ற அவர்களது ஆசையை மறைக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், மாகனைப் பின்பற்றும் சீனாவின் போக்குப் புலப்பட்டு நிற்கிறது.

சமராய்வுப் பிரிவுப்போராளி கலைவண்ணன்