வரலாற்றுக்கு வழிகாட்டிய தலைவர் பிரபாகரனின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு

146

1963ம்ஆண்டு கார் ஓடிக்கொண்டிருந்தது. எப்பொழுதும் துருதுரு என்று சுழன்றுகொண்டிருக்கும் கூர்மையானபார்வை. ஆனால் எதையும் ஊடுருவிப் பார்கும் அழகான பெரியவிழிகள். ஏகாந்தமாக கோயில் வீதிகளை அளந்து கொண்டிருக்கும் சிறியகால்கள். எதையோ சிந்தித்தவாறு தனிமையில் நடந்து கொண்டிருக்கும் சிறுவன். ஆனால் ஏனைய சிறுவர்களிற்கு இருக்கும் அதீதமான குறும்புகள் அற்று யாரைப்பார்த்தாலும் வெட்கப்பட்டு அல்லது சங்கோசப்பட்டு அமைதியாக ஒதுங்கிப் போகும் சுபாவம். இதுதான் மட்டக்களப்பிலிருந்து சொந்தஊருக்கு திரும்பி வந்திருக்கும் உறவினரான வேலுப்பிள்ளையின் கடைக்குட்டியான #தம்பி என்ற பிரபாகரன். தந்தை வழிச்சொத்தான வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோவில் உற்சவகாலங்களிலும் மற்றும் விசேட தினங்களிலும் சுவாமி கோயில்வீதியை வலம் வரும்போது அர்ச்சகருக்கு முன்பாக தந்தையின் வற்புறுத்தலால் கொடியுடன் அமைதியாக நடந்துவரும் சிறுவன். திருவிழாநாட்களில் ஒன்றான சண்டேஸ்வரர் திருவிழாவின் இறுதியில் மேளதாளம்முழங்க நாதஸ்வரம் இசைக்க ஆலவட்டம் கொடி முட்டுக்கால் என்பவற்றுடன் தொண்டர்கள் சண்டேஸ்வரரை சுற்றிச்சுற்றி ஓடுவர். அப்பொழுதே கொடியுடன் சிரித்தவாறு எல்லோருக்கும் முன்னிலையில் ஆக்ரோசமாக முதலில் ஓடி முடிப்பார் பிரபாகரன். எடுத்ததை முடிக்கும் பிடிவாத குணம் அப்போதே தெரிந்தது. அப்பொழுதும் மற்றவர்கள் முன்னிலையில் மகனை வாஞ்சையுடன் தழுவிக்கொள்ளும் அன்புத்தந்தையான வேலுப்பிள்ளை.

சிறுவனை பார்க்க பார்க்க காரோடும் வெள்ளைச்சாமிக்கு(சோமசுந்தரம் சிவபாதசுந்தரம்) என்னவோ செய்தது. என்ன பிடிவாதம்? ஆனால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு வித்தியாசம் சாதாரண சிறுவர்கள் காரில் செல்லும்போது தம்மையே சாரதியாக எண்ணிக்கொண்டு முண்டி அடித்து முன் சீற்றிலேயே ஏறவிரும்புவார்கள். ஆனால் சிறுவன் பிரபாகரனோ கார் ஓடும்போது ஏற்படும் பெற்றோல் எரியும் மணம் பிடிப்பதில்லை எனக்கூறி எப்போதும் பின்சீட்டில் ஓரமாக அமர்ந்து கொள்வதும் அமைதியாக வெளியில் பார்த்துக்கொண்டு வருவதும் வழமையான நிகழ்சியே. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சாரதியான வெள்ளைச்சாமி திரும்பி சிறுவனான பிரபாகரனுக்கு கூறுவது ‘டேய் உன்மூக்கினை வீட்டிலை கழட்டி வைத்துவிட்டு வா’ அப்படியே திரும்பி தாய்தந்தையரான வேலுப்பிள்ளை பார்வதிஅம்மா தம்பதியினருக்கு கூறுவது இவன் ஒருவித்தியாசமான ஆள் என்ன வென்று புரியவில்லையே!

ஆம்! அன்று ஒன்பது வயது சிறுவனான பிரபாகரனை வெள்ளைச்சாமிக்கு மட்டுமே புரியவில்லை. ஆனால் ஐம்பதுஆண்டுகள் கடந்து பிரபாகரனின் பெருமையையும் தேவையையும் முழு உலகமும் இன்று புரிந்துகொண்டுள்ளது. இடையில் அவரது நோக்கம் புரியாமல் அவர்மீது போர்தொடுத்த பிராந்தியவல்லரசான இந்தியாவும் உலகவல்லரசான அமெரிக்காவும் இன்று கையைப்பிசைந்து நிற்கின்றன. விடுலைப்போராட்டத்தையும் பயங்கரவாதத்தையும் பிரித்தறியாத குற்றத்திற்காக சிறிலங்காவின் முன்னால் கூனிக்குறுகி மன்றாட்டமாக நிற்கின்றார்கள். சிறிலங்காவிற்குள் வர முடியாமல் பரிதவித்து நிற்கின்றார்கள பாவம். ஈழத்தமிழரரின் பிறப்புரிமைகளுக்காகவும் அரசியல் விடுதலைக்காகவும் சிறிலங்காவிற்குள் நின்று போராடியவர்தான் பிரபாகரன். சிங்கள இனவெறியரை எதிர்த்து போராடிய எங்கள் உன்னதத்தலைவர் பிரபாகரனை வெல்லவிடாமல் தடுத்தது யார்? விடுதலை வீரனை பயங்கரவாதி என்று சொன்னது ஏன்? இறுதியில் தோற்றது தமிழர்கள் மட்டுமல்ல தாங்களும் என்பதால் தலை குனிந்து கொண்டது ஏன்?

ஏன் இவ்வாறு நடந்தது? யார் இந்த பிரபாகரன்? இவர் வெறுமனே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரா? அல்லது தமிழ்மக்களின் தேசியத்தலைவரா? பலரும் பலவாறாக எழுதுகின்றார்கள் பேசுகின்றார்கள் ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் இவரது பெயர் வரலாற்றில் வெற்றிபெற்ற விடுதலைப்போராட்ட வீரர்களான மாசேதுங், கோசிமின், பிடல்காஸ்ரோ வரிசையில் இணைக்கப்பட்டுவிட்டது. ஆனால் முன்கூறிய மூவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு இவருக்குண்டு. இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஒடுக்கப்பட்ட இனமொன்றின் போராட்டத்தை தலமையேற்று நடத்திய போராட்டத்தலைவர் அல்லது விடுதலை இயக்கத்தலைவர் என்னும் தனிச்சிறப்பாகும். ஏனைய விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிடும்பொழுது தமிழீழ விடுலைப்போராட்டம் என்பது நம்ப முடியாத பல உண்மைகளைக் கண்டு நகர்ந்துவந்தது.

கடலினால் சூழப்பட்ட தரைவழித்தொடர்புகளற்ற தீவொன்றில் சிறுபான்மை இனமொன்று தன்னைவிடப்பலமடங்கு வலிமைகொண்ட அரச இயந்திரம், அதிலும் ஏகாதிபத்திய பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் துணைகொண்டு இனம் மொழி நிலம் என ஆக்கிரமிப்பு மற்றும் அழிப்பு நடவடிக் கைகளில் ஈடுபடும்பொழுது அதனை எதிர்த்து தனியே நின்று போராடுவதாகும். இவ்வாறான தற்துணிவு சிறுபான்மையான ஈழத்தமிழினத்திற்கு எவ்வாறு சாத்தியமானது? இதுதான் உலகளாவிய ரீதியில் இன்று கேட்கப்படும் ஒரே கேள்வியாகும். அதற்கான விடை #பிரபாகரன்.

இந்நிலையில்தான் யார் இந்தப்பிரபாகரன்? என்னும் கேள்வி பூதாகரமாக எழுகின்றது. இதற்கான விடையை பேனாமுனை வீரர்களான பத்திரிகையாளர்கள் நூலாசிரியர்கள் மற்றும் புதிய புதிய செய்தி யாளர்கள் என்போர் பேட்டிகள் மூலமும் தமது ஆய்வுக்கட்டுரைகள் மூலமும் எழுத முற்படுகின்றார்கள். பலரும் கற்பனைகளால் கதை சொல்கின்றார்கள் அல்லது நகலெடுத்து நல்ல பெயர் வாங்க முயல்கின்றார்கள். இதேபோலவே அவரோடு உடனிருந்த தளபதிகள் மற்றும் போராளிகள் என்போரும் அவரைப்பற்றி எழுத முயல்கின்றார்கள். ஏனெனில் அவரொரு சரித்திரபுருசர். அவர் வரலாறு சாகாவரம் பெற்றது. இன்றுமட்டுமல்ல இன்னும் ஆயிரம் வருடங்கள் அல்ல, இரண்டாயிரம் வருடங்கள் கழிந்தாலும் அவர் வரலாறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

இந்நிலையில் இயற்கை எனது நண்பன்,

வாழ்கை எனது தத்துவாசிரியன்

வரலாறு எனது வழிகாட்டி

என வரலாறாய் வாழும் அவரைப்பற்றி கூறமுற்படும் பொழுது முதலாவதாக அவர் பிறந்த பொழுதினில் 26.11.1954 ஆங்கில நாளன்று கார்த்திகைமாதம் வெள்ளிக்கிழமை அந்திசாயும் பொழுதினில் அன்று பிரபல்யமாயிருந்த யாழ் இணுவில் மகப்பேற்று நிலையத்தில் அவதரித்தார். தாய்மாமனான வேலுப்பிள்ளை மனோகரன் எனும் மூத்தவரின் பெயரிற்கு இணையாக பிரபாகரன் என இளையவருக்கு பெயரிட்டார். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் இதன்போதுதான் இதற்கு முன்னும் பின்னுமான இரண்டாயிர வருடவரலாறு மறைந்துகிடந்துது.

வல்வெட்டித்துறையை பிரபாகரனின் தந்தையாரான சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உத்தியோக நிமித்தம் 1953 செப்டம்பரில் மட்டக்களப்பிலிருந்து அனுரதபுரத்திற்கு மாற்றலாகி சென்றார். இலங்கையின் புராதன நகரான அநுராதபுரமே முதலாவது தமிழ்அரசர்களாக குறிப்பிடப்படும் சேனன் குத்திகன் ஆகியோரினால் ஆளப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்கது. அத்துடன் அரசன் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்துகாட்டிய எல்லாளன் என இன்று அழைக்கப்படும் ஈழாளன்(Eelalan)(ஈழநாட்டை ஆண்டதனால் ஈழாளன் என்ற காரணப்பெயரால் அழைக்கப்பட்ட இவரின்பெயர்; காலவோட்டத்தில் எல்லாளன் என மாற்றமடைந்து காணப்படுகின்றது) நாற்பத்துநான்கு ஆண்டுகள் செங்கோலோச்சிய புனிதபூமியாகவும் வரலாற்றில் இப்பிரதேசம் காணப்படுகிறது. இவ்வாறான சிறப்புமிக்க அநுராதபுரத்தில் 2115 ஆண்டுகளுக்கு முன் ஈழாளனின் நினைவாக கட்டப்பட்ட சேதியமான ஈழாளனின் நினைவுத்தூபி அமைந்திருந்த Elala Sona(sona என்பது பாளி மற்றும் சமஸ்கிருத மொழி களில் ‘அருகாமை’ எனப் பொருள்படுகின்றது. இச்சோண என்னும் சொல்லே சோணை என தமிழில் வழங்குகின்றது. காதுச்சோணை என்பது காதுக்குஅருகில் என தமிழில் பொருள்படுவது கவனிக்கத்தக்கது.) எனும் பகுதியிலேயே வேலுப்பிள்ளைக்குரிய அரசாங்க உத்தியோகஸ்தர் தங்கும் விடுதியும் அமைந்திருந்தது.

மகாவிகாரை என அழைக்கப்படும் ருவான் வெலிசாயாவிற்கு அண்மையில் A28 வீதி என அழைக்கப்படும் அநுராதபுரம் குருநாகல்வீதி ஆரம்பிக்கின்றது. இப் பிரதான சாலையான குருநாகல் வீதியில் தெற்குநோக்கிச் செல்லும்போது கால் மைல் தூரத்திற்குள் அமைந்திருந்த சிற்றம்பலம் தியேட்டரை அடுத்து இவ்வீதியின் வலதுபுறமாக அமைந்திருந்ததே Elala tomb என்ற ழைக்கப்படும் ஈழாளனின் நினைவுத்தூபியாகும். இதனால் இப்பிரதேசம் Elala Sona என அழைக்கப்பட்டு வந்தது. மகாவம்சத்தின் உரைநூலாக 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படும் ‘வம்சத்தபகாசினி’ ஆசிரியர் இவ்விடத்தை ‘ஏலார பட்டிமாகர’ என குறிப்பிடு கின்றார். இப்பாளிமொழியின் தமிழாக்கம் ‘ஏலார விக்கிரகஅகம்’ ஆகும். இதன் கருத்தாக ஏலாலனின் நினைவுச்சின்னம் அமைந்துள்ளஇடம் என இதனைநாம் பொருள் கொள்ளலாம். இதன்மூலம் இப்பொழுது காணப்படும் சேதியத்தைவிட எல்லாளனின் உருவத்துடன் கூடிய நினைவுச்சின்னமும் அங்கு துட்டகைமுனுவால் நிறுவப்பட்டிருக்கலாம். காலவோட்டத்தில் இது சிதைந்துபோக அது அமைந்திருந்த இடத்திலதான் மருத்துவர்கள் மற்றும் அரசாங்கஊழியர்களிற்கான விடுதிகள் கட்டப்பட்டன என பரணவிதான கருதினார். 1946 ,47 ,48, 49 என பலஆண்டுகள் ஈழாளனின் கல்லறையை தேடிய பரணவிதான The Triumph of Dutthagamani என 1959இல் தான் எழுதிய கட்டுரையொன்றில் முன் கூறியபடி மருத்துவ அதிகாரி ஒருவர் ஈழாழனின் கல்லறைமேல் உறங்குவதாக குறிப்பிட்டிருந்தார். இன்று பரணவிதான இருந்திருந்தால் பிரபாகரன் கருவாகி உருவாகி குழந்தையாகி உறங்கிய விடுதி ஈழாளன் கல்லறைமேல் இருந்தது என கண்டுபிடித்திருப்பார்.

ElalaSonaவிலிருந்து isurumuniyaலைய விற்கு செல்லும் வீதியொன்று Elala Road என அழைக்கப்பட்டி ருந்தது. இத்தூபிக்கு அண்மையில் ஆரம்பமாகும் சிறிய வீதியொன்று வடமேற்காகசென்று B234 வீதி யான பழைய புத்தளம்வீதியுடன் இணைகின்றது. இவ்வீதியில் ElalaTombஇற்கு எதிராக அமைந்திருந்த அரசாங்க ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிற்கான விடுதிகளிலொன்றிலேயே வேலுப்பிள்ளை அப்பா விற்கான விடுதியும் அமைந்திருந்தது. இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்பவருக்கு சொந்தமானவிடுதி அமைந்தி ருந்தது.

புனிதப்பிரதேசமான ஏலாலசோணவுடன் இணைந்திருந்த இன்னொருபிரதேசம் மாவடி ஆகும். இங்கும் தமிழர்களே முழமையாக வாழ்ந்திருந்தனர். இப்பிரதே சத்தில் விவேகானந்த வித்தியாசாலை சென்ஜேசப்கல்லுரி Cole famile பெண்கள் கல்லூரி மற்றும் அவர்களிற்கான விடுதி என்பன அமைந்திருந்தன. இங்கு முத்துமாரிஅம்மன் கோவிலுடன் கதிரேசன்கோவிலும் ஆறுகாலப் பூசையுடன் அருள் பாலித்திருந்தன. சிற்றம்பலம்தியேட்டர் விஜயேந்திராதியேட்டர் கடைகள் உணவுச் சாலைகள் மரக்காலைகள் அரிசிஆலைகள் என தமிழர்கள் பூர்வீகமாக இப்பிரதேசத்தில் செழித்து வாழ்ந்துவந்தனர். தமிழர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த இப்பிரதேசத்திலேயே 1950களில் அநுராதபுரத்தின் நகரமுதல்வராக இருந்த தமிழரான சிற்றம்பலமும் வாழ்ந்திருந்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளரான இவர் 1951இல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்த பண்டாரநாயக்காவின் அனுரதபுர வரவேற்பினை புறக்கணித்தார். இதன்தொடராக 1956இல் இலங்கையின் பிரதமரான பண்டாரநாயக்காவின் அரசாட்சிக்காலத்தில் அனுரதபுரம் புனிதநகராக்கப்பட்டது. இதன்மூலம் ElalaSona ElalaTomb Elala Road மாவடி மற்றும் இவைகளோடு இணைந்திருந்த பலதமிழர் பிரதேசங்கள் புனிதநகரக்குள் உள்வாங்கப்பட்டன.

புனிதநகராக்கப்பட்ட அனுரதபுரம் புதியநகரம் பழையநகரம் என இருவேறாக பிரிக்கப்பட்டது. இதன்மூலம் பழையநகரத்தில் இருந்த மக்கள்குடியிருப்புகள் கோயில்கள் பாடசாலைகள் விடுதிகள் என்பன கிழக்குத்திசையில் உருவாக்கப்பட்ட புதியநகருக்கு இடமாற்றப்பட்டன. இதனால் 1956இற்கு முன் பரபரப்புடனும் சனசந்தடியுடனும் ஈழாளனின் நினைவையும பெயரையும் கொண்டுவிளங்கிய இத்தமிழர் பிரதேசங்கள் இன்று அமைதியாக காணப்படுகின்றது. 1958கலவரத்துடன் தமிழர் களினால் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட இப்பிரதேசம் இன்று காடுமண்டி அடையாளம் தெரியாத பூமியாகிவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அன்றைய நகரத்தின் தெற்குப்பகுதியில் ElalaTomb அமைந்திருந்ததனால் இந்நினைவாலயம் இன்று தெற்கத்திசையை குறிக்கும் Dakkuna Dagoba ன பெயர் மாற்றப்பட்டுள்ளது. எனினும் அனுரதபுரத்தின் பழைய வரைபடங்களில் மேற்படி ElalaTomb என்ற பெயரை நாம் காணமுடியும்.

கிறிஸ்துவிற்கு முன் 101ம்ஆண்டில் ஈழாழன் வீரமரணமடைந்ததும் அன்றைய லங்காவின் மன்னனான துட்டகாமினியால் இப்பிரதேசம் புனிதப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1954இல் பிரபாகரன் அவதாரம் எடுத்தபின் இலங்கையரசால் புனிதநகராக மீளவும் இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருபிரதேசம் இருதடவைகள் சிறப்பிக்கப்படுவது உலகவரலாற்றில் இங்கு மட்டும்தான்.

இராஜரட்டையின் பழையஇராசதானியான தலைநகரான அனுரதபுரத்திற்கும் மன்னனான ஈழாளனின் நினைவுத்தூபிக்கும் தனது அதிசயப்பிறப்பிற்கான காரணத்தையும் 2000ம்ஆண்டில் தலைவர்பிரபாகரன் சந்தேகமற தெரிந்துகொண்டார். இப் பிரதேசத்தின் தென்கிழக்கில் அமைந்திருந்த விமானப்படை முகாமே ‘எல்லாளன்’ நடவடிக்கை மூலம் தலைவர் பிரபாகரனால் தாக்கிஅழிக்கப்பட்டது. புலிகளால் நடத்தப்பட்ட பலநூறு தாக்குதல்களில் தனிஒருவரது பெயரால் நடத்தப்பட்ட தாக்குதல் இது ஒன்றேயாகும்.

எல்லாளன் ஏலாளன் ஏலாரா எனும் பெயர்கள்யாவும் குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். ஈழம் என்பது தூயதமிழ் சொல்லாகும். கிறிஸ்து விற்குமுன் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஈழம் எனும் இடத்தைச்சுட்டும் பல தொல்லியல்சான்றுகளை INSCRIPTIONS OF CEYLON -VOLUME1 மற்றும் ANNUAL REPORT ON SOUTH INDIAN EPIGRPHY-1(1908)மற்றும் வேறுபல நூல்களிலும் இவைகளை நாம்காணலாம். ஆரம்பம் முதல் இலங்கையானது ஈழம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கடலில் மூழ்கிப்போன குமரிக்கண்டத்தின் ஒருபகுதியாகிய ஏழ் பனைநாட்டின் எஞ்சிய பகுதியே ஈழமாகும். கடலுக்குள் மூழ்கிவிடாமல் இலங்க(இலங்குதல்-தெரிதல்) நின்ற தீவாகையால் இது இலங்கைத்தீவு என்றும் இலங்கை எனவும் வழங்கப்படலாயிற்று. எனினும் ஏழ்பனை நாட்டின் தொடர்ச்சியே ஈழமாகும்.(இக்கட்டுரையின் நோக்கம்கருதி இதுபற்றிய மேலதிக விளக்கம் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது) ஆரம்பத்தில் முழுஇலங்கையையும் குறிக்கப் பயன்பட்ட இச்சொல்லானது இன்று வடகிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது சோகவரலாறாகும். ஈழம் என்பதனை அடியொற்றிப் பிறந்த இலங்கா என்பது முழுநாட்டினையும் குறிக்க அதன் மூலச்சொல்லான ஈழம் என்பது இலங்கையின் வடகிழக்குப்பகுதிகளையே இன்றுகுறித்து நிற்கின்றது.

இன்றையஉலகில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகராக மெக்ஸிக்கோசிற்றி இருப்பதைப்போல் அன்றைய ஈழத்திலும் ஈழஊர் என்னும் ஓரிடத்தை நாம் காண முடியும். இதுஇன்றைய பூநகரிப் பகுதியின் வேரவில் எனப்படும் பிரதேசமாகும். இதற்கு அண்மையில் அமைந்நிருந்த குடா ஈழவன்குடா என அழைக்கப்பட்டது. இப்பகுதியின் இன்னொரு பிரதேசத்தின் பெயர் ஈழநல்லூர் ஆகும். ‘வரலாறுகள் மௌனமாகும்போது இடப்பெயர்கள் வாய்திறந்து பேசக் கூடும்’. என்பதற்கிணங்க மேற்படி பெயர்கள் ஈழம்என்னும் இடப்பெயரிற்கு சான்றாக இன்றும் விளங்குகின்றன. போத்துக்கேயர் காலத்திலும் இப்பகுதி ஈழஊர் என அழைக்கப்பட்ட வரலாற்று குறிப்புகள் எம்மிடம் உண்டு.(The tempral and Spiritul Conquest Of Ceylon – Fernao De Queyroz

அநுரதபுரத்திற்கு வடக்கே இருந்து வருபவர்களைக் குறிக்க சோழ ஈழ எனும் சொற்கள் பௌத்தமத இதிகாசங்களில் காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த இலக்கியமான மகாவம்சத்திலும் மேற்க்கூறிய ஈழாளனை சோழநாட்டில் இருந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் மூலநூலான தீபவம்சத்தில் இப்பெயர் ஈழரா(Elara)என்றே குறிக்கப்பட்டுள்ளது.(இது ஈழராசாவின் சுருக்கமாகலாம்) இவர் சோழநாட்டில் இருந்து வந்ததாக குறிப்பேதுமில்லை. இவ்வரசன் 44வருடங்கள் அனுரதபுரத் திலிருந்து ஆட்சிசெய்தபின் துட்டகைமுனு என்ற பௌத்தமத அரசனால் கொல்லப்பட்டார். ஈழாளனின் இறுதிக்கணத்தினை கூறவரும் மகாநாம

‘நகரத்தின் தெற்குவாசலில் இருமன்னர்களும் மோதிக்கொண்டனர். ஈழாளன் தனதுகுறியை நோக்கி ஈட்டியை எறிந்தான். துட்டகாமினி அக்குறியிலிருந்து தப்பிக்கொண்டதுடன் தனதுயானையின் தந்தங்களினால் ஈழாளனின் யானையை குறிவைத்து ஏவினான். அதேநேரம் ஈழாளனை நோக்கி தனது ஈட்டியை எறிந்தான். ஈழாளன் யானையுடன் சரிந்து வீழ்ந்தான்’ எனக் கூறுகின்றார்.

தொடர்ந்துகூறும் மகாநாம ‘ஈழாளன் வீழ்ந்ததும் இலங்கையை ஒரேஆட்சிக்குள் கொண்டுவந்த துட்டகாமினி தனதுபடைகளுடன் நகரத்திற்குள் அணிவகுத்து சென்றான். மக்கள் எல்லோரையும் முரசறைந்து ஒன்று கூடும்படி ஆணையிட்டான். அவர்களின் முன்னிலையில் தானே ஈழாளனின் உடலை தகனம்செய்தான். அவ்வாறு தகனம்செய்த இடத்திலேயே ஒரு நினைவுத்தூபியைக் கட்டி அதற்கு அஞ்சலிசெலுத்துமாறு அனைவருக்கும் ஆணையிட்டான்.

வீரர்களுக்கு நடுகல் அமைப்பது பண்டைக்கால தமிழ்மரபு ஆனால் பௌத்தனான துட்டகாமினி தனது மரபுப்படி சேதிமம் அமைத்தான்.இவ்வாறு சேதிமம் அமைக்கப்பட வேண்டியவர்களை தீகநிகாயம் என்னும்நூலின் 12வது அத்தியாயமான மகாபரிநிப்பாண குத்தந்தம் எனும்பிரிவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

‘பிக்குகளே சேதியம் அமைக்க தகுதியுள்ளவர்கள் நால்வர். அந்த நால்வர் யாவர்? ததாதகர் என்று சொல்லப்படும் நான்கு உண்மைகளை தாமாகவே அறிந்த வராகிய புத்தபகவான். பிரத்தியேக புத்தர். புத்தருடைய சீடராகிய அர்ஹந்தர். மற்றும் அரசர்களின் சக்கரவர்த்தி ஆகிய இந்தநால்வரும் சேதியம் அமைக்கத் தகுதியுள்ளவர்கள்.’

இதனையே அங்குந்தர நிகாயம் எனும்நூலும் சதுக்கநிபாதம் ஆபத்திவக்கம் என்ற தனது அதிகாரத்தில் கூறுவது குறிப்பிடத்தக்கது.

சக்கரவர்த்தியான துட்டகாமினியால் அமைக்கபட்ட சேதியத்துடன் குறிக்கப்பட்ட ஆணையும் இந்நினைவுச்சின்னத்திற்கு அண்மையில் பொறிக்கப்பட்டிருந்தது. அக்கல் வெட்டின் வாசகம் ‘அரசனாயிருந்தால் என்ன குடியானவனாய் இருந்தால் என்ன ஒருவருமே இவ்வழியால் பல்லக்கிலே சிவிகையிலோ செல்லலாகாது’ எனக் கூறியது. இதனை உறுதிப்படுத்துவது போல் ஈழாளன் வீரமரணமடைந்து எழுநூறு வருடங்களிற்குப்பின் கி.பி.ஆறாம்நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்ச காலத்திலும் தொடர்ந்த இந்ந டைமுறையை கூறவரும் ஆசிரியரான மகாநாம ‘இன்றும் இலங்கையின் அரசர்களாயினும் அந்தஇடத்தை கடந்து செல்லும்போது இசையை நிறுத்திவிட்டு மௌனமாக வணங்கிவிட்டே செல்வார்கள்’ (And evento thisday the prince of Lanka when they drew near to this place are wont to silent their music because of this eorship) எனக் கூறுகின்றார்.

அன்று தொடக்கம் இச்சேதியம் என்றதூபியை அண்மித்ததும் யாவரும் தமது வாத்திய இசைகளை நிறுத்தி தூபிக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்’ இலங்கை சுதந்திரமடையும்வரை காணப்பட்ட இவ்வழமை இன்று அருகிவிட்டது. எனினும் இற்றைக்கு பத்துவருடங்களிற்கு முன்னும்(2004) இந்நினைவாலயத்திற்கு அஞ்சலி செலுத்துவோருக்கு பூக்களைவிற்கும் பெண்ணொருவர் இது ஏலாரசோண என உறுதிகூறியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஈழாளன் வீரமரணமடைந்த குறிப்பிட்ட இடத்திலேயே இவருக்கென நினைவுத்தூபி துட்டகாமினியால் அமைக்கப்பட்டு இருந்தது. இது ஈழாளன் நினைவுத்தூபி(ElalaTomb) என காலம்காலமாக அழைக்கப்பட்டு வந்தது. ஈழநாட்டில் இருந்து வந்ததனால் அல்லது ஈழநாட்டை ஆண்டதனால் ஈழாளன் (Eelalan) எனும் குறிப்பிட்ட இத்தமிழ்ப்பெயர் காரணப்பெயராக காணப்படுகி ன்றது. பின்னர் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடிகளினால் (EELARA)ஈழாரா எனும் அப்பெயர் (Elara)எல்லாரா என மாற்றமடைந்துள்ளது. தூயதமிழ்ப்பெயரான ஈழாளன் என்பது பாளி யேர்மன் ஆங்கிலம் எனும் மொழி மாற்றங்கள் கடந்து எல்லாளன்(Ellalan)என மீண்டும் தமிழில் வழங்கப்படுவது ஈழத்தமிழினத்தின் தூரதிஸ்டமே!

ஈழாளன் பெயரில் அமைக்கப்பட்ட Elala Tomb இற்கு எதிராக அமைந்திருந்த வீதியிலேயே வேலுப்பிள்ளை அப்பாவிற்கான விடுதி அமைந்திருந்ததது. இதனால் வீட்டிலிருந்து வெளியில் எங்கு செல்வதானாலும் ஈழானின் நினைவைத் தாங்கிநின்ற அச்சேதியத்தை பார்க்காமல் இவர்களால் எங்கும் செல்ல முடியாது. இதுதினசரி நடைபெறும் சம்பவமாகும். இந்நிலையிலேயே பவித்திரமான பார்வதிஅம்மா நான்காம்முறையாக கருவுற்றார். இக்கருவே பிரபாகரனாக பூமியில் அவதாரமெடுத்தது. தினம்தினம் ஈழாளன் நினைவோடு அவரைத்தகனம் செய்த விடத்தில் எழுப்பப்பட்ட அவன் நினைவுத்தூபியினை உள்ளன்போடு தரிசித்து வாழ்ந்த இத்தம்பதியினருக்கு தமிழ்ஈழம் என்றநாட்டை உருவாக்குவதற்கு போராடிய மகன் பிறந்தது ஆச்சரியமில்லை.

கர்ப்பமுண்டாகிய பெண் தொடர்ச்சியாக எதனை மிகக்கவனமாக உள்ளு ணர்வுடன் பார்க்கின்றாரோ அல்லது சிந்திக்கின்றாரோ அப்படியே கருவிலிருக்கும் குழந்தையின் உணர்வுகளும் உருவாகும் என்பது இன்றைய நவீனவிஞ்ஞான கண்டுபிடிப்பாகும். இதுவே அறுபது வருடங்களிற்குமுன் பிரபாகரன் உருவாகிய அதிசயவரலாறாகும். இதனையே திருமூலர் தனது நூலான திருமந்திரத்தில்

ஏயம்கலந்த இருவர் தம்சாயத்து

பாயுங்கருவும் உருவாம் எனப்பல

காயங்கலந்தது காணப்பதிந்தபின்

மாயங்கலந்த மனோலயமானதே!

என முதலாம் பாகத்தின் 459வது பாடலில் விளக்கியுள்ளார். நவீன விஞ்ஞானத்தின் ஒப்பியல்ஆய்வின் முடிபுகளிற்கு பலநூற்றாண்டுகளிற்கு முன்பே இவ்வாறு கூறியிருப்பது தமிழர்களின் நுண்ணிய அறிவுக்கு உற்றசான்றாகும்.

ஈழாளனின் முன்னோர்களை பாளிமொழியிலான மகாவம்சம் ‘அஸ்வ-நாவிகா’ என்றே குறிப்படுகின்றது. இதில் அஸ்வம் என்பது குதிரையைக் குறிக் கின்றது. நாவிகா என்பது நாவாய்எனும் தமிழ்ச்சொல்லின் பெயரடியாகப் பிறந்த தாகும். இதுகப்பலைக் குறித்து நிற்கின்றது. ஈழத்தில் நல்லவகை குதிரைகள் இல்லாமையினால் வேறுநாடுகளில் இருந்து கப்பல்களில் குதிரைகளைக் கொண்டு வந்துவிற்கும் கடல்வணிகர்களே இவ்வாறு அஸ்வநாவிகர் என அழைக்கப்பட்டனர். ஈழாளன் எனும்பெயர் காலவோட்டத்தில் ஏலேலன் என திரிபடைந்தது. இந்நிலையில் ஏலேலசிங்கன் என புகழப்பட்ட இவனது திறமையைக்குறிக்கும் சொற்றொடராக ‘ஏழேழுகடல் சென்றாலும் ஈழாளன் கப்பல் திரும்பிவரும்’ என்ற முதுமொழியும் ஏலேலா அல்லது ஏலாலா போன்ற கப்பற்பண்ணும் தமிழரிடையே இன்றும்வழங்கும் இவரதுமரபிற்கு உறுதியானசான்றாகும். இதுபோலவே பிரபாகரனும் அவரது தாய்தந்தை வழியிலான இருவழி பரம்பரையினரும் பெரும்கடல்வணிகர்களே.

1976இல் முதன்முதலாக ஆறுகுதிரைச்சக்தி கொண்ட கடற்கலங்களின் வெளியிணைப்பு இயந்திரமொன்றையும் 1978இல் ‘பஞ்சவர்ணக்கிளி’ என்ற படகையும் பிரபாகரன் கொள்வனவு செய்திருந்தார். இதன்தொடராக 1984இல் முதலாவது வர்த்தககப்பலான ‘சோழன்’ கப்பல்மூலமாக கடல்வழி வணிகத்திற்குள் கால்வைத்த இவர் தனது இருபதிற்கு மேற்பட்ட கப்பல்கள்மூலம் மேற்படி வர்த்தகம் புரிந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பிடித்தநூல்களாக கடல்புறா மற்றும் கடலோடி என்பனவற்றை இவர் குறிப்பிடுவார்.

பிரபாகரனின் தாயாரான பார்வதிஅம்மா வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையில் வாழ்ந்த வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் புதல்வியாவார்;. வல்லிபுரம் பருத்தித்துறையைச் சேர்ந்த சம்பானோட்டிக்கரையார் எனப்புகழ்பெற்ற வரும் ‘மெத்தைவீட்டு’ நாகலிங்கம் என அழைப்கப்பட்ட ‘தெய்வர் நாகலிங்கத் தின்’ மைந்தனாவார். பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார்கோவிலை இவரின் மூதாதையினரே அமைத்திருந்தனர். நாகலிங்கம் ஆங்கிலேயஅரசினால் ‘முதலியார்’ பட்டம்பெற்ற பெருமைக்குரிய கப்பல்உரிமையாளர் மட்டுமன்றி பெரும் நிலபுலம்களிற்கு அதிபதியானவர். இவர்பெயரில் நாகலிங்க முதலியார்வீதி எனும்வீதி இன்றும் பருத்தித்துறையில் உண்டு. இவர்தனது பேத்தியான பார்வதியம்மா பிறப்பதற்கு முன்னரே 26நவம்பர் 1909ஆம் ஆண்டில் மறைந்து விட்டார்.(Notes On Jaffna(1920) page91) பார்வதியம்மாவின் புகழ்பெற்ற மைந்தனான மேதகு பிரபாகரன் பிறந்த நன்நாளும் 26நவம்பர் 1956 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்னே அதிசயஒற்றுமை. வரலாறுகள் திரும்பும் போது விருட்சமாகின்றனவா!

தாய்வழியில் இத்தகைய சிறப்புவாய்ந்த தலைவர் தந்தைவழியிலும் மிகவும் சிறப்புபெற்றவராவார். குறிப்பாக வேலுப்பிள்ளையின் பூட்டனாராகிய திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் 12கப்பல்களிற்கு அதிபதியாக விளங்கி 300இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு எசமானாக விளங்கியவர். அதுமட்டுமல்ல பல்வேறு நாடுகளுடனும் கப்பல்தொடர்புகளை வைத்திருந்த பெரும் கடல்வணிகனாவார். ஆரம்பத்தில் காலி சந்திரமௌலீஸ்வரர் கோவிலை நிர்மாணித்த இவரே 1856இல் வற்றாப்பளை கண்ணகைஅம்மன் கோவிலை முதன்முதலில் கற்கட்டிடமாக அமைத்திருந்தார். இவர் அமைத்த ஏனைய கோவில்கள்களாக முல்லைத்தீவு கள்ளப்பாடு பிள்ளையார்கோவில் மற்றும் பர்மாவின் அரக்கனில் அமைந்திருக்கும் முருகன்கோவில் என்பன குறிப்பிடத்தக்கன. இறுதியாக 1983.06.08இல் வல்வெட்டித்துறை வாலாம்பிகா வைத்தீஸ்வரன் கோவிலை நிர்மாணித்தார். கோயில் திருப்பணிகளிலும் சமூகத்தின்வளர்ச்சியிலும் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்து வல்வெட்டித்துறையின் சமூகத்தலைவராக(எசமான்) விளங்கிய ‘பெரியவர்’ திரு.வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் நந்தனஆண்டு ஐப்பசி மாதம் 11ம்நாள் அதாவது 24.10.1892 ஆங்கிலநாளில் தன்பூதவுடல் நீங்கி புகழுடன் இறைவன் திருப்பாதம் அடைந்திருந்தார்.

‘குடிதழிஇக் கோலோச்சு மாநிலமன்னன்

அடிதழிஇ நிற்குமுலகு’

என்பதற்கிணங்க அவர்மறைந்து 122வருடங்கள் கடந்தபின்னும் வல்வெட்டித்துறையில் இன்றும் அவர் எசமான் என்றே அழைக்கப்படுகின்றார்.அவர்வாழ்ந்த வீடு எசமான்வீடெனவும் அழைக்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல அவர் வழிவந்த பரம்பரை யினரும் எசமான்குடும்பம் என இன்றும் அளவிறந்த மரியாதையுடன் அழைக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

1850களின்பின் பெரும் உச்சத்தைதொட்ட வெங்கடாசலபிள்ளையின் சந்ததியில் 1954இல் வந்து பிறந்தவரே தலைவர் பிரபாகரனாவார். மலையென கிளம்பும் அலைகளினூடே நிலைதளம்பாது கப்பலினை நகர்த்திச்செல்பவரே கப்பல் தலைவராவார். இதுபோலவே எத்தனை இடையூறுகள் வந்தபோதிலும் ஓயாதஅலைகள் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப்போரை நடத்திச்சென்றவர் தலைவர் பிரபாகரனாவார்.

அநுரதபுரத்தில் பிரபாகரன் உருவாகிய ஏலாலசோண என்ற அப்பகுதியிலேயே வேலுப்பிள்ளை பார்வதிதம்பதியினர் மேலும் ஒருவருடம் வாழ்ந்திருந்தனர். சிறுவனான தலைவர்பிரபாகரன் கருவாகி மழலையாகி தத்தித்தவழ்ந்து நிமிர்ந்து நடைபயின்றது ஈழாளன் ஆண்டமண்ணில் மட்டுமல்ல அவன் வீழ்ந்தபின் தகனம் செய்யப்பட்ட அதேஇடத்தில் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகளிற்குமுன் ஈழாளனாக வீழ்ந்த அன்றைய ஈழம் அவர் வீழ்ந்தஇடத்திலேயே மீண்டும் பிரபாகரனாக எழுந்து தமிழீழமாக மலர்ந்தது புதுமை.

இவ்வாய்வுக்கு நேரடியாக தகவல்தந்தோர்

திருவேங்கடம் வேலுப்பிள்ளை(தந்தை)

பார்வதிஅம்மா வேலுப்பிள்ளை(தாய்)

மனோகரன் வேலுப்பிள்ளை(சகோதரன)

வல்லிபுரம் வேலுப்பிள்ளை(தாய்மாமன்)

திரு.ஸ்ரனிஸ்லோஸ் முன்னால்அதிபர் சென்ஜோசப் கல்லூரி அனுரதபுரம்

சின்னையா சிவசப்பிரமணியம். மரக்காலை அதிபர் அனுரதபுரம்

நடராசா சிவரெத்தினம் முன்னால் பணிப்பாளர் இலங்கைவங்கி வடபிரதேசம்

எடுத்தாளப்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகள்

The Dipavamsa. Hermann Oldenberg

The Mahavamsa. Wilhelm Geiger

The Mahavansa. mudaliyar L.C.Wijesinha

Index To The Mahawansa. John Still

Rajavalia. B.Gunasekara

Ancint Ceylon(EaRliest DaGabas) H.Parker

In Old Ceylon. Reginald Farrer

Voices From Ancient Srilanka. Ananda W.P.GuRuge

Outlines Of Ceylon History. Donald Obeysekere

History of Ceylon. Ceylon university Press

Historiography in A Time of Ethnic Conflict. R.A.L.H.Gunawardana

Historical guide To Anuradhapura’s Runs H.E.Weerasooriya

The Sacred City Of Anuradhapara. Walisinga Harischandra

Iiankayil Inaththuvamum Camuka Mattamum. Sociai And Social Association

Notes on Jaffna. John. H. Martyn

மகாவம்ச சிங்களவர் கதை. எஸ்.பொ

மகாவம்சம். எஸ்.சங்கரன்

எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும். கலாநிதி ஜேம்ஸ் தே.இரத்தினம்

சிங்களவரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை. வில்ஹெம் கெய்கர்

பருத்தித்துறையூராம். பா.இரகுவரன்

வரலாற்றில் வல்வெட்டித்துறை. பா.மீனாட்சிசுந்தரம்

தினக்குரல் வாரமலர் 26.11.2006

நன்றி வரதன்