காலடியில் அமைதியாக உறங்கும் ஈழ தமிழ் மூத்த குடிகளின் பண்டைய வரலாறு

259

நாம் ஒரு மாபெரும் அறிவியல் மாற்றத்திற்கு உட்பட வேண்டும். இந்த உலகம் இடையுறாது மாறிக்கொண்டிருக்கிறது இந்த மாற்றங்களை உள்வாங்கி இனி ஏற்படப்போகும் மாற்றங்களை முன்னுணர்ந்து அறிவார்ந்து செயற்படவேண்டியது அவசியமாகிறது.

கருத்தைக் கருத்தாக எடுக்கும் நாகரிகம் எம்மிடம் இன்னும் வளரவில்லை. வரலாற்று ஆய்வியலில் எம்மிடம் ஒரு பிழையான மரபியலே உண்டு. ஒரு நீண்ட போராட்டமும் அதன் தொடர்ச்சியில் பேரழிவைச் சந்தித்திருக்கின்ற போதிலும் அறிவியல்த் துறையில் மாற்றம் ஏற்படாமை எம்மினத்தின் துரசிஸ்டமே.

வரலாறு என்கின்றபோது ‘சமூகத்தின் இயங்கு போக்கினையும், அவ்வியக்கத்திற்கு உந்துதலான சக்திகளையும், ஆழமாக அணுகும் ஒரு அறிவியல் துறையாகும்.

இந்தப் பிண்ணணியில் இலங்கைத் தமிழர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள் அவ்ஒடுக்குமுறைக்குப் பின்னாலிருக்கின்ற உந்துசக்தியைக் கண்டறிந்து சுட்டிக்காட்டும் ஒரு சிறிய தேடலாகவே இப்பத்தி அமைகிறது.

இலங்கையினுடைய வரலாற்றை அறிவியல் நோக்குடன் ஆய்வுசெய்யும் முயற்சி இன்றுவரை இல்லை என்றேகூறவேண்டும். பொதுவாக பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் முடிவுறும்வரை இலங்கையின் ஆதிவரலாற்றை அறிவியல் ரீதியில் ஆய்வுசெய்யும் முறையானது புறக்கணிக்கப்பட்டே வந்திருந்தன.

ஆனால் இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டு இந்திய வரலாற்று ஆய்வினை அறிவியல் ரீதியில் முறையாக ஆய்வு செய்யும் முறை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழகத்தின் வரலாறோ இருட்டடிப்புச் செய்யப்பட்டன என்பது வேறுகதை.

ஆனால் இலங்கையிலோ பிரித்தானியர் ஆட்சி முடியும்வரை இலங்கை வரலாறு ஒரு பாடமாகவோ பாடசாலைகளில் படிப்பிக்கப்படவில்லை.

1942 ஆண்டில்தான் இலங்கையில் முதலாவது பல்கலைக்கழகம் (University collage of Ceylon) ) ஆரம்பிக்கப்பட்டு அது லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு அதில் வரலாறு கற்ற மாணவர்கள் பிரித்தானிய வரலாற்றையும், ஐரோப்பிய வரலாற்றையுமே கற்றனர்.

பின்னர் பிரித்தானியர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெறும் தறுவாயில் இலங்கைஅரசு தமக்கென ஒரு வரலாற்றுப் பாடநூல்கள் தேவைப்பட்டபோது இலங்கை பல்கலைக்கழக கல்லூரி விரிவுரையாளராக இருந்த ஜி.சி.மெண்டிஸ் The Early History of Ceylon (1940 என்ற நுலை எழுதினார்.

இதுவே முதலாவது இலங்கையர் எழுதிய இலங்கை வரலாற்று நூலாகவுள்ளது. இது பாளியிலும், சிங்களத்திலும் எழுதப்பட் வரலாற்று மூலங்களை வைத்து ஆரியர் குடியேற்றம் என்ற நிகழ்ச்சியுடன் இவரது நூல் தொடங்குகிறது.

இலங்கையில் வாழ்ந்த ஆதிக்குடிகளை ஒதுக்கியும், தம்மினத்துள் அவற்றினை அடக்கியும் இலங்கையினுடைய வரலாற்றை குறிப்பிட்ட நிகழ்ச்சியுடன் குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடங்கி ஒரு தனியோர் இனக்குழுவின் சொத்தாகவும், காலத்துக்கு காலம் அந்த இனக்குழு தென்னிந்தியாவிலிருந்து வந்து காலத்துக்கு காலம் வேறோர் இனக்குழுவால் தாக்கப்பட்டதாகவும் புனையப்பட்டு வரலாறு விளக்கப்பட்டது.

அதேவேளை 1950களில் இலங்கை தொல்லியல் திணைக்களம் உருவாக்கப்பட்டு அதன் ஆணையாளர் செனரத் பரணவிதான நியமிக்கப்பட்டார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஓர் அதிகாரபூர்வமான அறிஞராக இவரே கருதப்பட்டார். இதனால் தான் தொல்லியல் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் தொல்லியல் பேராசிரியராக நியமித்தது அரசு.

இவரை பேராசிரியராக நியமிக்கபட்டதன் பின்னர் இவர் மூலம் அரசாங்கம் இலங்கை வரலாற்றுநூல் ஒன்றை. எழுதுவித்தது. இதில் பரணவிதான தன்னுடைய மனஓட்டத்திலிருந்தே அந்நூலினை எழுதியிருந்தார்.

இதுதான் இலங்கையின் அதிகாரபூர்வ வரலாறாக 1960 களிலிருந்து 1977 வரை அரசால் அங்கீகரிக்கப்பட்டும் இருந்தது.
ஆரியர் இலங்கையில் குடியேறிய நிகழ்ச்சியுடன் தான் இலங்கை வரலாறு ஆரம்பித்தாக Aryan Settlements The Sinhalese என்ற அத்தியாயத்தில் பரணவிதான எழுதுகிறார்.

அதில் முதலாம் அத்தியாயத்திலேயே (The Triumph of Dutthagamini) துட்டகெமுனு போர் பற்றி பரணவிதான கூறும்போது ‘அன்னியர் ஆதிக்கத்திலிருந்து சிங்களரை விடுவிக்க நடத்தப்பட்ட ஒரு விடுதலை இயக்கப்போர் என்று எழுதியுள்ளார்.

திரு.செனரத் பரணவிதான தெரிவித்த கருத்துக்களை ஏனைய வரலாற்றாசிரியர்கள் ஏற்கத்தயங்கினாலும் அதை மறுக்கத் திராணியற்றே காணப்பட்டனர்.

ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாமதேரர் எனப்படும் தேரர் அனுராதபுரத்தில் மகாவிகாரை என்ற பௌத்தப்பெரும்பள்ளியினை சேர்ந்த ஒரு பிக்கு. இலங்கையில் பௌத்த மதத்தின் வரலாற்றை சொல்லுவதற்கே மகாவம்சத்தை எழுதினார் என்பது தெளிவாகத்தெரிகிறது.

அதாவது ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் ‘சமயப்பற்றுடையோர் பேரின்பம் பெறுவதற்கு இயற்றப்பட்டது” என்று வருகிறது

துட்டகெமுனு – எல்லாளன் போர் பற்றி மகாநாமதேரர் கூறும் மொழி அமைப்பு முறைமையை விட நீண்ட காவியத்தன்மை கொண்ட நடையுடன் காணப்படுவதனால் மகாநாமதேரரின் பின்னர் வேறொருவரால் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டு தமிழருக்கு எதிரான முறையில் சிறப்பாக சிங்கள மக்கள் மனதில் தமிழருக்கு எதிரான நிலையை உருவாக்குவதற்கு எழுதப்பட்டிருக்கலாம் என பௌத்தம் வளர்த்த தமிழர்கள் என்ற கட்டுரையில் கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் கூறுகின்றார்.

இதுவே தமிழர்களுக்கு எதிராக சிங்களமக்களின் மனநிலைகளை மாற்றி மகாவம்ச மனோ நிலையில் இருந்து வரலாற்றை திரித்தும் அரசியல் தேவைகளுக்காக பிழையாகவும் எழுதப்பட்டதனால் காலங்காலமாக அம்மண்ணில் வாழ்ந்த தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்த குடியேறிகள் என்று புனையப்பட்டன. இதற்கு ஐரோப்பியர்களே வித்திட்டவர்களாகவே உள்ளனர்.

போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் அழித்த கோயில்களைப் பதிவு செய்வதற்கு அவர்களின் கத்தோலிக்க மதகுருவான பெர்ணாஓ த கெய்ரோஸ் (Fernao De Queyroz) என்பவர். இலங்கை வரலாற்று நூல் ஒன்றினை எழுதினார் இதுவே இலங்கை வரலாறு பற்றி எழுந்த முதலாவது நூலாகும்

இதன்பின்னர் ஒல்லாந்த அறிஞனான பிலிப்புஸ் பால்தேயுஸ்(Philipus Baldeus) அவர்களும் அதன்பின்னர் வந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் சிலரும் தங்கள் குறிப்புகளிலும், பதிவுகளிலுமாக இலங்கையின் வரலாற்றினைப்பற்றி மிகக் குறைவாகவே எழுதியிருந்தனர்.

குறிப்பாக பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அதன் ஆட்சியாளர்கள் இலங்கையின் ஆதி வரலாற்றை அறிவதில் ஆர்வம் காட்டி அது தொடர்பாக தேடியபோது அவர்களிடம் கிடைத்தது பாளிநூல்களும், சிங்கள நூல்களும், சில தமிழ் நூல்களுமே இவ்வாறு ஆங்கில ஆட்சியாளர்களிடம் கிடைத்த தமிழ்நூல்கள் பலவும் வரலாற்றைச் சொல்லும் நூல்களாகக் காணப்படாமையால் அவர்களி கவனம் சிங்கள பாளி நூல்களின் பக்கம் திரும்பியது.

இதனால் தீபவம்சம், மாகாவம்சம், சூழவம்சம், முதலான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன. அதேகாலப்பகுதியில் பொலநறுவை, அனுராதபுரம் ஆகிய நகரங்களின் அழிவுகள் ஆய்வுசெய்யப்பட்டு அதன் தகவல்களும் இந்நூல்களோடு இணைக்கப்பட்டு இலங்கை பற்றிய வரலாற்று நூல்கள் எழுதுவதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது.

ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட காலணித்துவகாலப் படைப்புக்கள் பாளி, சிங்கள நூல்களில் கூறப்பட்ட வரலாற்றை விமர்சிக்காது அப்படியே ஏற்றுக்கொண்டு இலங்கையின் வரலாற்றை எழுதினர். (உதாரணம் சிங்கத்திலிருந்து மனிதன் பிறந்ததான விஜயனின் பிறப்பு.)

தமிழர்களையும், சிங்களவர்களையும் பிரித்தாளுவதற்கு ஏதுவாக இந்த வரலாற்றை திட்டமிட்டு பிரயோகித்தனர். இவர்களே சிங்களவர்களை ஆரியர்கள் என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் உண்மைக்குப் புறம்பாக கூறினர்.

மகாவம்சத்தில் ஆரியர் என்ற பதம் இடம்பெறாத போதும் நவீன மரபணுவியல் ஆய்வு இன்று அறிவியல் ரீதியாக பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டபோதிலும், அரசியல் மயப்பட்டு இக்கருத்து மக்கள் மயப்படுத்தப்பட்டு மேற்கூறிய சிங்கள வரலாற்றாசிரியர்களால் பரப்பப்பட்டது.

இலங்கை வரலாறு பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம் இந்த ஆங்கில நூல்கள் வாயிலாக உருவாகின.
இதனால் சிங்கள மக்களே இலங்கையின் முறையான குடிகள் என்றும் தமிழ்மக்கள் இந்தியாவிலிருந்து வந்த படையெடுப்பாளர்கள் என்றும் கருதப்பட்;டது. இக்கருத்தே காலணித்துவகால வரலாற்று நூல்களில் அதிகம் காணலாம்.

இதன்பின்னணியில் நோக்கினால் தவறான நோக்கில் பார்க்கப்பட்ட மகாவம்ச மனநிலைதான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைகளுக்கு காரணமாகிவிட்டது.

மகாவம்சம் வரலாற்றுக் காலத்திற்கு பின்னான நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி பதிவு செய்திருக்கிறது. ஆனால் வரலாற்றுக்கு முற்பட்ட நிகழ்வுகளை புனைகதையாகவும், திரித்தும் கூறியுள்ளது. இதை பௌத்தம் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்னர் ஏன் விஜயன் வரும் முன்னர் இவங்கையில் ஒரு நாகரிகமடைந்த மக்களும், அரசுகளும் இருந்தது என்பதனை அண்மைய தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன.

விஜயன் வருவதற்கு முன்னர் நாக அரசுகள் இலங்கையின் வடபகுதியில் இருந்தது என்பதற்கு 1969, 1985, 1989, 1990, 1992 ஆகிய ஆண்டுகளில் அனுராதபுரத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளே நிரூபிக்கின்றன. இதில் 1990 ஆம் ஆண்டு பேரா.செரான் தெரணியகல மேற்கொண்ட ஆய்வில் கி.மு.500ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு.700 இற்கும் இடைப்பட்ட காலத்தைய பானையோடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்து. அதில் ‘தயாகுட” என் எழுதப்பட்டிருந்தது. இதன் தமிழ்வடிவம் தயாவினுடைய குடம் என்பதாகும். இதனுடைய காலம் இன்றைய கீழடியையும் விஞ்சிநிற்கிறது.

இவ்வாறு அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட பலதர ஆய்வுகளில் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுக்களில் ‘சிவ, சிவகிரத, சிவகுத்த, சிவநாக, காலசிவ, மகாசிவ, கந்த, குமார, விசாக” போன்ற பெயர்கள் பௌத்தத்திற்கு தானங்கொடுத்தவர்களாகக் குறிப்பிடப்படுகிறது. சிவ என வரும் பெயர்கள் இக்காலப்பகுதிகளில் தமிழகத்தில் இல்லை.

அத்துடன் தேவநம்பிய தீசனின் தந்தையின் பெயர் மூத்தசிவனாகவும், பேரனின் பெயர் மகாசிவ எனவும் மகாவம்சம் கூறுவதிலிருந்து பௌத்தம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் சைவமும் அதனைப்பின்பற்றியவர்களும் அனுராதபுரத்தை ஆண்டிருக்கின்றனர். என்பதனை அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வே காட்டுகிறது.

1957 களில் வென்சில்வேனிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த விமலா பேக்லி அவர்கள் மன்னார் பொம்பரிப்பு பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் 8000 சவ அடக்கத் தாழிகளைக் கண்டெடுத்தார். சவ அடக்கங்கள் காணப்பட்ட போதிலும் இதன் நாகரிகம் கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தாழிகள் அனைத்தும் கிழக்கு மேற்க்காகப் புதைக்கப்பட்டிருந்தது. கிழக்கு மேற்காகப் புதைக்கப்படுவது தமிழர்களின் வழக்கமே. ஆரியர்கள் வடக்கு தெற்காகவே புதைப்பர். இதனுடைய காலம் கி.மு.1000 ஐ சேர்ந்தது என அவர் தெரிவித்திருந்தார் எனினும் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் இலங்கைத் தொல்லியல்துறையால் கையகப்படுத்தப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.

இது விஜயனுக்கு முன்னர் ஒரு பெரும் நகர நாகரிகம் இருந்தது என்பதனை ஆதாரப்படுத்துகிறது.

1990 இல் மாகம எனப்பட்ட திஸ்ஸமகாராமப் பகுதியில் உள்ள அக்குறுக்கொடப் பகுதியில் ஜேர்மன் தொல்லியல் ஆய்வாளர்களால் மேற்கொண்ட ஆய்வில் 125 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஒரு பானை ஓட்டில் திரளிமுரி என்றும் அதில் கண்டெடுக்கப்பட்ட நாணயத்தில் ‘சடநாகராசபுர” என்கின்ற வாசகமும் தமிழ்ப்பிராமி கண்டெடுக்கப்பட்டது. இது கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்கின்றது. இது நாகராசபுரம் என்கின்ற பெயரில் ஒரு நகரநகரிகம் இருந்ததனை உறுதிசெய்கிறது.

இம்மட்பாண்டஓடு இன்று சிதைக்கப்பட்டுள்ளது. இது பௌத்தத்தின் முன்னர் இங்கும் ஒரு நாகரிகம் இருந்ததனை தெளிவுபடுத்துகிறது. அத்துடன் ‘உதிரன், சபிஜன்” பெயர்பொதித்த நாணயங்களும் கண்டெக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆனைக்கோட்டையில் 1981 களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் கி.மு 3ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த மனித உடலும், ஆனைக்கோட்டை முத்திரையும் கண்டெடுக்கப்பட்டது. இம்முத்திரையில் ‘கோவேத” என எழுதப்பட்டிருந்தது. இது வடபகுதியில் ஒரு நகரநாகரிகம் பௌத்தத்தின் முன்னரே இருந்தது என்பதனைத் தெளிவுபடுத்துகிறது.

அடுத்து கந்தரோடையில் 1917, 1957, 1964, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் எண்ணற்ற நாகர்களின் தடயங்களும், 18 அடுக்கு கொண்ட நகர நாகரிகத்தில் எச்சங்களும் கண்டுபிடிக்கப்ட்டன. இதை ‘Kantharodai Civilization of Ancient Jaffna” என்ற பெயரில் கலாநிதி எஸ். தியாகராஜா அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்.

இதில் குறிப்பாக 1917 ஆம் ஆண்டு கந்தரோடையை முதன்முதலில் ஆய்வுசெய்த திரு.போல் பீரிஸ் அவர்கள் 1919 பெப்ரவரி 22 ஆம் திகதி டெய்லி நியூஸ் ஆங்கிலப்பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி முக்கியமானது அதை இங்கு தருகின்றேன்.

”I hope the Tamil People will realise that in truth, there is buried in their sands, the story of much more fascinating development than they had hitherto dreamed2″ என்றார். அதாவது இதுவரை கனவிலும் எண்ணிப்பார்க்காத தமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக் கட்டடம் பற்றிய சான்றுகள் உண்மையகவே மண்ணுள் புதைந்திருப்பதை தமிழ்மக்கள் ஒரு காலத்தில் உணர்வார்கள் என நம்புகின்றேன்.

இதுவே இதன் தமிழ்வடிவம். இக்கந்தரோடை நாகரிகம் கிமு.500 இற்கும் கி.மு 600 இற்கும் இடைப்பட்டது என்கிறது தொல்லியல் ஆய்வு முடிவுகள். எனவே இது பௌத்தத்திற்கு முந்தைய நாகரிகம் இருந்துள்ளது என்பதனை ஆதாரப்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழர் வரலாறு திருத்தி எழுதப்படுவதன் அவசியத்திற்கு வலுச்சேர்க்கிறது.

1992 ஆண்டு காலப்பகுதியில் பூநகரி மண்ணித்தலையில் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த “ஈலா” என்ற மட்பாண்டமும் “வேள்” என்கின்ற வாசகமுடைய மட்பாண்டமும் கண்டெடுக்கப்பட்டது இது இந்த ஆய்விலேயே ஈழம் என்கின்ற பெயர் முதன்முதலில் காணப்படுகிறது. இவையும் வரலாறு திருத்தி எழுதப்படவேண்டிய அவசியத்தைக் காட்டுகிறது.

2011 ஆம்ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையே திருத்தி மீள அமைக்ககும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது சில தொல்லியல் தடயங்கள் காணப்பட பிரித்தானிய டெர்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த றொபின் கொன்னிங்காம் அவர்களாலும் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவும் இணைந்து நடத்திய தொல்லியல் ஆய்வின் முடிவுகள் 2017 இல் வெளிவந்திருந்தன.

இது இற்றைக்கு 2700 ஆண்டுகளின் முன்னர் யாழ்க்கோட்டையானது ஒரு துறைமுக நகரமாக பூம்புகார், கொற்கை ஆகிய தமிழக துறைமுகங்களிற்கு இணையாக விளங்கியது என்பதனை நிரூபித்திருக்கிறது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள், உரோமர்களுடனும், சீனர்களுடனும், பாரசீகர்களுடனும் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தினை எடுத்துக்கூறியதுடன் நாகர்களின் தொல்தடயங்களையும் காட்டியது.

இதனால் றொபின் கொன்னிங்காம் மீண்டும் ஒருதடவை யாழ்க்கோட்டையில் ஆய்வைச் செய்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இது விஜயன் காலத்திற்கு முன்னரே இலங்கையில் ஒரு நாகரிகம் மட்டுமல்ல ஒரு துறைமுக நகரமே இருந்தது என்பதை தொல்லியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றது. இது ஈழத்தமிழர் வரலாற்றை திருத்தி எழுதப்படவேண்டும் என்பதனை திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறது.

மேலும் வன்னிப்பகுதி எங்கும் போருக்கு பின்னர் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் அனைத்தும் பௌத்தத்தின் முன்னர் இலங்கையில் நாகர் அரசுகள் இருந்தது என்பதனை நிரூபிக்கின்றது.

குறிப்பாக நெடுங்கேணி, புதூர் பகுதியில் உள்ள நாகதாளி, கல்லிருப்பு, வவுனிக்குளம், கரும்புள்ளியான் போன்ற இடங்களைச் சொல்லாம்.

இதில் வவுனிக்குளத்தினை சுற்றி ஒரு ஆறுமைல் சுற்றுவட்டத்திற்குள் பரந்துபட்ட அளவில் ஏராளமான தொல்லியல் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் விசேடமாக நாகர்களின் கல்வெட்டுக்களையும் அவர்களின் கட்டடக்கலையையும் சொல்லாம். அவர்களின் கட்டடக்கலையின் சிறப்பம்சம் தூண்தாங்கு துளைகற்களாகும்.

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்கள் கீழடிக்கு இணையாக உள்ளது. வவுனிக்குள நாகரிகம் கி,மு 500 ஆண்டுகளிலிலேயே ஒரு பெரு நகரமாக இருந்திருக்கிறது என்பதனை அங்கு 2013 முதல் 2020 வரை மேற்கொள்ளப்பட்ட சிறு சிறு ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இது விஜயனுக்கு முந்தைய நாகரிகம் வன்னிப்பகுதியில் இருந்ததனை காட்டுகிறது. இதனால் தான் இதை வவுனிக்குள நாகரிகம் என்கின்றேன்.

இதைவிட கிழக்கு மாகாணங்களில் 2012 முதல் 2018 சில இடங்களில் பேராசிரியர் பத்மநாதன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கி.மு.3 நூற்றாண்டைய நகர்களின் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் ”வேள்ணாகன் மகன் வேள்கண்ணன் வேள்கண்ணன் மகன் வேள்ணாகன்” என்று எழுதப்பட்டிருக்கிறது இது மட்டக்களப்பில் மட்டுமல்ல. வன்னிப்பிரதேசமெங்கும் காணப்படுகிறது.

தமிழகத்தில் இல்லாத சிறப்பம்சம் ஒன்று ஈழத்தில் காணப்படுகிறது.
அதாவது ஈழத்தில் கி,மு காலத்தைய சிவ என்ற பெயர்கள் காணப்பட்ட தொல்லியற்தடயங்கள் காணப்பட தமிழகத்தில் இவை இல்லை. அத்துடன் நாகர்களின் பெயர்களும், ஊர்களும் தமிழகத்தில் காணப்பட்டாலும், நாகர்களின் கட்டடக்கலையும், அவர்கள் பொறித்த கல்வெட்டுக்களும் ஈழத்திலேயே சிறப்பாக உள்ளது என்பதனை போருக்கு பின்னான ஆய்வுகள் காட்டுகின்றன.

எனவே மகாவம்சமும், தமிழர்களும், மகாவம்சம் ஒதுக்கிய தமிழர்கள், மகாவம்சத்தின் வரலாற்று நம்பகத்தன்மை, சிங்களவர்களின் மரபணுவியற்கூறுகள் என மேற்கூறப்பட்ட தலைப்புக்களில் ஒரு விரிவானஆய்வுகளை மேற்கொண்டு தொல்லியல் மற்றும் மரபணுவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களோடு ஈழத்தமிழர்களின் வரலாறு திருத்தி எழுதப்படவேண்டும்.

அ.மயூரன் MA