1995ல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பகுதி புலிகள் கையில் இருந்தது. சிங்கள ராணுவம் யாழ்ப்பாண கோட்டை, பலாலி விமானப்படைத்தளம், அதற்குள் அடங்கிய காங்கேசன் துறைமுகம் (காங்கேயன்துறை என்பதே சரி) போன்றவற்றில் ஆடுகளைப் போல பட்டி அடைக்கப்பட்டிருந்தது.
பலாலி படைத்தளத்தைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். மொத்த யாழ். மாவட்டத்தில், பரந்து விரிந்து கிடந்த பலாலி படைத்தளத்தின் பரப்பளவு மட்டும் 8 விழுக்காடு.
யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினருக்கு உணவு, ஆயுதம், மருந்து போன்றவை அந்த காலகட்டத்தில் வான் வழியே கொண்டு செல்லப்பட்டு வந்தன.
இந்தநிலையில், பலாலி விமானப்படைத்தளத்தில் இருந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில், ஓர் அவ்ரோ சரக்கு விமானம் அநுராதபுரத்துக்குப் புறப்படத் தயாரானது. வழமையான விமானம் அது.
சார்லி ரோஜர் HS – 748 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த விமானத்தில், விமானப்படையின் வடபகுதி தளபதி விங் கமாண்டர் ரோகன் வீரசிங்கே உள்பட நான்கு விங் கமாண்டர்கள், 35 ராணுவத்தினர், ஊர்காவற்துறை பகுதியில் நடந்த சண்டையில் காயமடைந்த 4 படையினர், விமானஊழியர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 48 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த 8 ராணுவத்தினரின் உடல்களும் விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தன.
விமானம் ஓடுதளத்தில் ஓடி மேலேறி பறந்தபோது மெல்லிய மழைத்தூறல் பொசுங்கிக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம். அதையடுத்து விமானத்தின் இரு ரோல்ஸ்ராய்ஸ் இயந்திரங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
பதற்றம் அடைந்த விமானத்தின் வலவர், விமானத்தை திருப்பி ஓடுபாதைக்கு மீண்டும் கொண்டுவர முயன்றார். ஆனால் முடியவில்லை. விமானம் வெடித்து கடலில் விழுந்தது. விமானத்தில் இருந்த அத்தனைப் பேரும் பலியானார்கள். விமானம் வெடித்து, ஓடுதளத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் விழுந்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த புலிகளின் ஏவுகணை தாக்கித்தான் விமானம், பலியானது என்பதுகூட இலங்கை படையினருக்குத் தெரியவில்லை. வழக்கம்போல, இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சரத் முனசிங்கேவிடம் , “புலிகளின் ஏவுகணை தாக்கி விமானம் விழுந்திருக்குமோ?” என்று கொழும்பில் செய்தியாளர்கள் கேட்டபோது, சரத் முனசிங்க அதை அடியோடு மறுத்துவிட்டார்.
இதற்கிடையே ஏவுகணை தாக்குதல் நடத்தி விமானத்தை வீழ்த்தியது பற்றி புலிகளும் மூச்சு விடவில்லை. அடுத்த விமானத்தை தாக்கி தகர்ப்பதற்காக அவர்கள் மற்றொரு ஏவுகணையுடன் தயாராகக் காத்திருந்தனர்.
இதற்கு மறுநாள் 29ஆம்தேதி சனிக்கிழமை காலை 8.45 மணி. மீண்டும் ஓர் அவ்ரோ விமானம், இந்தமுறை கொழும்பு ரத்மலானை விமானநிலையத்தில் இருந்து பலாலிக்குப் புறப்பட்டது.
சார்லி ரோஜர் 834 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த விமானத்தில் பாதுகாப்புப் படையினர் மொத்தம் 52 பேர் இருந்தனர். அவர்களில், அவ்ரோ விமான ‘விபத்தை‘ பற்றி புலனாய்வு நடத்த வந்த அலுவலர்களும் அடங்குவார்கள். விமானப்படை ஏர்மார்ஷல் ஒலிவர் குணதிலகவும் அந்த விமானத்தில் இருந்தார்.
அநுராதபுரத்தில் சற்றுநேரம் தரித்துநின்ற பின் அந்த விமானம், பலாலி நோக்கி புறப்பட்டது. விமானத்தை ஓட்டியவர் விங் கமாண்டர் சிரந்த குணதிலக. இவர் இலங்கை விமானப்படையின் ஏர்வைஷ் மார்ஷலான ஹாரி குணதிலகவின் இளைய மகன். மற்றொரு விமானப்படை அலுவலரான ரோஷன் குணதிலகவின் சகோதரர்.
ஐந்தாயிரம் அடி உயரத்தில், பலாலி விமானதளத்துக்கு 4 மைல் தொலைவில் விமானம் வந்தபோது, தொண்டமானாறு பகுதியில் இருந்து விமானத்தை நோக்கி ஓர் ஏவுகணை சீறிப்பாய்ந்து வந்தது.
ஏவுகணை பாய்ந்து வருவதை பார்த்துவிட்ட வலவர் சிரந்த குணதிலக, ‘ஏவுகணை வருகிறது’ என்று அலறினார். ஆனால் அதற்குள் விமானம் அடிபட்டு சிதறி, பலாலி விமானப்படைத் தளத்துக்கு 7 கிலோ மீட்டர் வெளியே நிலாவரை பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. பலாலி விமானப் படைத்தளம், அதைச்சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு வலயத்தை அமைத்திருந்த நிலையில், இந்த பாதுகாப்பு வலயத்துக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு வெளியே விமானம் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் 30 ராணுவத்தினர், 12 கடற்படையினர், 12 விமானப்படையினர், 2 காவல்துறையினர் என 59 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. மொத்தம் 52 பேர் என்றும் தகவல் பரவியது. எது எப்படியோ விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர்தப்பவில்லை.
அடுத்தடுத்து நாள்களில் 16 மணிநேர இடைவெளியில் இரண்டு விமானங்களை புலிகள் சுட்டுவீழ்த்தி விட்டதால், இலங்கை முழுவதும் பரபரப்பு ‘பக்’கென பற்றிக் கொண்டது. இந்த சம்பவம் நடந்தபோது அதிபர் சந்திரிகா பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதிர்ந்து போன அவர் உடனடியாக நாடு திரும்பினார்.
புலிகளின் தாக்குதலின் எதிரொலியாக பலாலி விமானப்படைத்தளத்தில் அனைத்து விமானப்போக்குவரத்துகளும் உடனே நிறுத்தப்பட்டன.
புலிகள் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதல் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், அதன் விமானிகளை இலங்கைக்கு மேலே 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அறிவுறுத்தியது.
இதனிடையே புலிகள் பயன்படுத்திய ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று பலவாறான கேள்விகள் நாலா திக்கிலும் எழுந்தன. புலிகள் ரஷியத் தயாரிப்பான ஸ்ட்ரெலா அல்லது இக்லா ஏவுகணையைப் பயன்படுத்தியிருக்கலாம், அல்லது ஒருவேளை அது அமெரிக்கத் தயாரிப்பான ஸ்டிங்கர் ஏவுகணையாக இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் வட்டமிட்டன.
ஒலியைவிட ஒன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடிய அமெரிக்க ஸ்டிங்கர் ஏவுகணை, தோளில் இருந்து ஏவப்படக்கூடியது. 4 கிலோ மீட்டர் தொலைவு வரை இது அதிக ஆற்றலுடன் செயல்படக் கூடியது. ரஷிய ஏவுகணைகள் ஒன்றும் தக்காளித் தொக்கல்ல. ஆற்றலில் ரஷிய ஏவுகணைகளும் படுசமர்த்து. ஒலியை விட 3 அல்லது 4 மடங்கு வேகத்தில் பாயக் கூடிய விமான வீழ்த்தி ரஷிய ஏவுகணைகள் உண்டு.
இக்லாவின் உச்சகட்ட வேகம் நொடிக்கு 570 மீட்டர். ஸ்ட்ரெலாவும் லேசுபட்டதல்ல. ராடாரின் கண்ணில்படாமல் 2,300 மீட்டர் உயரத்துக்குக் கீழே திருட்டுத்தனமாகப் பறக்கும் விமானங்களை மிரட்டி, ‘மேலே போ, மேலே போ என்று ஒரேடியாக ‘மேலே’ பறக்க வைக்கக்கூடிய ஏவுகணை அது.
ரஷிய மொழியில் இக்லா என்றால் ஊசி. ஸ்ட்ரெலா என்றால் அம்பு.
இறுதியில், புலிகள் பயன்படுத்திய ஏவுகணை, ரஷிய உருவாக்கமான ஸ்ட்ரெலா -2 என தெரியவந்தது. தரையில் இருந்து புறப்பட்டு வான் இலக்கைத் தாக்கும் உணர்மோப்பத்திறன் கொண்ட இந்த ஸ்ட்ரெலா -2 ஏவுகணை புலிகளிடம் இருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலி விமானப்படைத்தளத்தின் இயக்கம் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டது.
ஈழப்போர் வரலாற்றில் தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இரு விமானங்களை அடுத்தடுத்து புலிகள் வீழ்த்தியது அதுவே முதல்முறை.
புலிகள் வீசிய ஏவுகணைகள். ஈழப்போர் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சிங்கள விமானப்படையின் சிறகுகளை அறுத்து புலிகள் வானில் நடத்திக் காட்டிய புதிய பாய்ச்சல் அது.
நன்றி மோகன ரூபன்