புலிகள் கெரிலா அமைப்பாக இருந்திருந்தால் பெரும் ஆயுத வழங்களின் தேவை ஏற்பட்டு இருக்காது.

254

ஆயுதங்களுடன் இரணை மடுவில் இறங்கவேண்டிய
புலிகளின் AN-72 சிறிய கார்க்கோ விமானம்.
தமிழர் தரப்பால் முற்பது வருடங்களுக்கு மேலாக இரத்தமும், சதையும் கொண்டு கட்டி எழுப்பப் பட்ட ஆயுத போராட்டம், இரண்டு வருடங்களில் இல்லாமல் போனது, இன்றும் எம் மக்களுக்கு கனவு போலவே தோன்றுகின்றது. இன்றும் அதை ஜீரணிக்க முடியாது தவிப்போரை கண்களால் பார்க்கின்றோம்.
அதற்கான காரணத்தை தேடினால், ஒரு படை நடவடிக்கைக்கோ, அல்லது அதன் எதிர் நடவடிக்கைக்கோ, ஆயுதக் கையிருப்பு என்பது பிரதானமானது.

அது தங்கு தடையின்றி கிடைப்பதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது. புலிகள் கெரிலா அமைப்பாக இருந்திருந்தால் பெரும் ஆயுத வழங்களின் தேவை ஏற்பட்டு இருக்காது.
அனால், ஒரு மரபுவழி இராணுவமாக வளர்ச்சி கண்டபின், தொடரான ஆயுத வழங்கள் மற்றும் ஆயுத கையிருப்பை பேணுவது பிரதானமானது. வெற்றியை அடைய ஒரே வழியும் அதுவே. எமது ஆயுத வழங்கள் வழிகளை சர்வதேசத்துடன் இணைந்து எதிரி அழித்த போது, எமது படைநடவடிக்கையில் பெரும் பின்னடைவை புலிகள் சந்தித்தனர்.

இதை வாசிக்கும் போது இவ்வளவு திறமைகளையும், உத்திகளையும், எதையும் செய்யும் ஆற்றல் கொண்ட போராளிகள், பணம் தேவை படும் போதெல்லாம் கொட்டிக் கொடுக்க தயாரான புலம்பெயர் மக்களையும் கொண்ட ஒரு விடுதலை அமைப்பு ஆயுதம் பெறுவதற்கு கடல் மார்கமான திட்டம் ஒன்றை தான் வைத்திருந்தார்களா??

அதற்கு ஒரு மாற்று திட்டம் அவர்களிடம் இல்லையா?? இது போன்ற கேள்விகள் எழுவதை தடுக்க முடியாது. அப்படி ஒரு திட்டம் இருந்திருந்தால் அந்த திட்டம் ஏன் வெற்றி அளிக்கவில்லை??
2003ம் ஆண்டுக்கு பின் கடல் புலிகளின் கைகளில் இருந்த ஆயுத கொள்முதல் நடவடிக்கை, சர்வதேச உளவுத்துறையாலும், அவர்களின் உதவியுடன் சிங்கள கடற்படை, கடல் மூலமான ஆயுத வழங்களை தடுத்து அழித்த போது, தலைவர் அவர்களால் அந்த நேரத்தில் 2006ம் ஆண்டு பொட்டம்மான் அழைக்க பட்டு புது வேலை திட்டம் ஒன்று அவரிடம் முன் வைக்கப் பட்டது. அதாவது ஆகாய மார்க்கமாக ஆயுதங்களை வன்னிக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்னும் மாற்று திட்டமே அதுவாகும்.

அதன் படி அம்மானின் நேரடி கண்காணிப்பில் நாலு பேர் கொண்ட அணியொன்று உருவாக்கப் பட்டது. அம்மானுடன் சேர்த்து இந்த ஐந்து பேரை தவிர போராளிகளுக்கோ, தளபதிகளுக்கோ இந்த நடவடிக்கை பற்றி தெரியாது ரகசியமாக வைக்கப் பட்டது.
வெளிநாடுகளில் புலிகளின் உளவுத்துறையின் மறைப்பில் இருந்து (அன்டர்-கவர் ஒப்றேசனில்) இயங்கிய போராளிகளில் இருவரும், மற்றைய இருவரும் வன்னியில் இருந்து, இந்த விமான ஆபரேஷனை கவனித்த ஞானவேல், தமிழ்குமரன் ஆகும். இந்த நாலு பேருக்கும் மேலதிகாரியாக அம்மானே இருந்தார்.

இதே நேரம் வன்னியில் சண்டையும் உக்கிரமாகி இருந்தது. வெளிநாட்டில் இருந்த இருவரையும் புதிய வேலையில் இணைத்தபின் அவர்கள் உக்ரேனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு போன இருவருக்கும் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான். தெரியாத புதிய நாடு, வித்தியாசமான மொழி, எல்லாமே புதிது தான்.

உண்மையில் இது ஒரு ஆபத்தானதும், கடினமான பணி. மிகவும் நுணுக்கமாகவும், அவதானமாகவும், நீண்ட கால திட்டத்தில் செய்யப் படவேண்டிய ஒன்று. ஆனால் அந்த இருவருக்கும் இதற்கான சந்தர்ப்பமும்,அவகாசமும் வழங்கப் படவில்லை.
மிகவும் இக்கட்டான நிலையில் புலிகளமைப்பும் இருந்தமையால் இவர்களுக்கு மிகவும் நெருக்குதல் கொடுக்கப் பட்டது. ஒரு வாறு அபிரிக்க நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்கும் தரகர் ஒருவனை அந்த போராளிகள் கண்டு பிடித்து விட்டனர்.

அவன் மூலமாக ஆயுதம் அனுப்பும் முயற்சியில் இருக்கும் போது, தொடர்ந்து போராளிகளுடன், தொடர்பில் இருந்த அந்த தரகன் மூன்று நாட்கள் எந்தவித தொடர்பும் இல்லாது போனான். இவர்கள் குழப்பத்தில் இருந்த போது மீண்டும் தொடர்பில் வந்தான்.

தனக்கு சுகயீனம் அது தான் தொடர்பு எடுக்கவில்லை என்று காரணம் கூறினான். சந்தேகம் அடைந்த போராளிகள் இருவரும் இது பற்றி தலைமைக்கு தெரியப் படுத்தினர். ஆனால் மிக இக்கட்டில் இருந்த காரணத்தாலும், இன்னொரு தரகனை பிடிப்பதற்கு நேர அவகாசம் இல்லாத காரணத்தாலும் வேறு வழியின்றி அவனிடமே போகும் நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தாக்குதலின் பின் சி.ஐ.எ வின் கழுகு பார்வை போராட்ட அமைப்புகள் மேல் விழுந்த பின் அவர்களது பார்வை ஆயுத கடத்தல் செய்வோரை நோக்கி குறிவைத்தது.

எல்லா நாட்டு ஆயுத தரகர்களையும் தமது கண்காணிப்பில் கொண்டு வந்திருந்தனர். இதில் மொசாட்டும் (இஸ்ரேலின் உளவுத்துறை) கூடிய கவனம் செலுத்தியது.
ஆக, கண்காணிப்பில் இருந்த தரகர் பலர் கடத்தப்பட்டு காணாமல் போயினர். சிலர் கொல்லப் பட்டனர். சிலர் கைது செய்யப்பட்ட பின் தங்களுக்கு ஏற்றால் போல அவர்களை மாற்றி, மீண்டும் உலவ விட்டனர்.

புலிகளால் ஒழுங்கு செய்யப் பட்ட தரகரை புலிகள் தொடர்பெடுத்ததை, மணந்து பிடித்த சி ஐ எ அவனை தூக்கி தங்களுக்கு சார்பாக மாற்றிய பின் விட்டிருந்தது.
இதை ஊகித்த பின்னும் புலிகள், சில வேளை உண்மையிலேயே அவன் சொல்லிய காரணமும் உண்மையாக இருக்கலாம்? என்னும் 20%நம்பிக்கையில் வேறு வழி இல்லாது தங்கள் முயற்சியை தொடங்கினர். எல்லாம் தயார் என்ற விபரம் உக்ரேனில் இருந்து வன்னிக்கு அறிவிக்கப்பட்டது.

ஆயுதங்களுக்கான பண ஏற்பாடுகளை ஞானவேல் கவனித்துக் கொண்டார்.
முதலாவது விமானத்தில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டதும் ஆயுதங்களுக்கான பணம் உக்ரேனில் வைத்து செட்டில் செய்யப்பட்டது. முதல் ட்ரிப்புக்கான தேதியும் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதி ஒன்றில், இரணமடுவில் இருந்த புலிகளின் விமான ஓடுதளத்தில் உக்ரேன் விமானம் இறங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழ்குமரன் கவனித்தார்.

அன்றைய தினத்தில் விமானத்தில் ஆயுதங்கள் வருகின்றன என்ற விபரம், பொட்டு அம்மானுக்கு சொல்லப்பட்டது. அன்றைய தினத்தில், உக்ரேனில் உள்ள “Simferopol” என்ற சிறிய ஏர்போர்ட் இது 1930-களில் அமைக்கப்பட்ட பழைய விமான நிலையம். இங்கிருந்து AN-72 விமானத்தில் ( இது ஒரு மீடியம் சைஸ் கார்கோ விமானம். ரஷ்ய தயாரிப்பு). ஆயுதங்கள் ஏற்றப்பட்டது.

இவர்கள் ஏற்பாடு செய்த கார்கோ விமானம் ஆயுதங்களுடன் புறப்பட்டதை, போராளிகள் இருவரும் பார்த்தார்கள். அதன் கார்கோ டர்மினலில் இருந்து புறப்பட்ட விமானத்துக்குள் நிஜமாக என்ன லோட் செய்யப்பட்டிருந்தது என்பதை அருகில் நெருங்கி செக் பண்ண உக்ரேன் அரசால் இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Simferopol விமான நிலையத்தில் வைத்து, இரணமடுவுக்கு செல்வதற்கான பிளைட்-பிளான் ஒன்று இவர்களுக்கு காட்டப்பட்டது. அங்கிருந்து சுமார் 6450 கி.மீ. தொலைவில் உள்ளது இரணமடு. இரணமடுவில், அதிகாலை நேரத்தில் விமானம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், விடிந்த பின்னரும் விமானம் வந்து சேரவில்லை. வன்னியில் இருந்து உக்ரேனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. உக்ரேனில் இருந்தவர்கள், ஆயுத வியாபாரியை தொடர்பு கொண்டார்கள். விமானத்தை எப்படியும் தொடர்பு கொண்டபின் விபரம் தெரிவிப்பதாக கூறினார் ஆயுத வியாபாரி.
சில மணி நேரத்தின்பின் ஆயுத வியாபாரி “விமானம் தரையிறங்கி விட்டது. ஆனால், தவறான இடத்தில் இறங்கியுள்ளது. அங்கே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் விமானி” என்றார் ஆயுத வியாபாரி தரையிறங்கியதாக கூறப்பட்ட தவறான இடம் எது என்று தெரியுமா??

அது, இந்தியாவில், மும்பைக்கு அருகில் உள்ள ரத்னகிரி ஏர்போர்ட்! (Ratnagiri Airport )
2008-ல் இந்த சம்பவம் நடந்த காலத்துக்கு, சில வாரங்களின்பின் மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித் துறையிடம் இருந்து, இந்திய கடலோரப் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்ட விமான நிலையம் அது. புலிகளுக்கு ஆயுதம் ஏற்றிச் சென்ற உக்ரேன் விமானம் ஏன் அங்கே தரையிறங்கியது?
அப்போது தான் ஒரு உண்மை புலிகளுக்கு புரிந்தது. அந்த ஆபிரிக்கனூடாக, வெள்ளையர்கள், இந்திய “ரோ”வுடன் கூட்டுச் சேர்ந்து இந்த சதியை செய்து முடித்திருந்தனர்.

இந்த உதவியை காங்கிரஸ் அரசு, சிங்கள அரசுக்காக செய்து உதவியது.
போராட்டம் அழிவின் பின்னால் இருந்த கரங்கள் மிகவும் வலிமையானவை. சிங்களத்துடன் நாம் மோதவில்லை. கண்ணுக்கு தெரியாத பல எதிரியுடனும் நாம் மோதினோம். எந்த வித நாடுகளின் உதவியும் இல்லாமல் ஒரு பலகீனமான ஒரு இனம், கடைசிவரைக்கும் தமது சக்தியை ஒன்று திரட்டி போரிட்டனர்.

அதன் பின் சி ஐ எ வால், அந்த இரு போராளிகளையும் கைது செய்ய எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அவர்கள் வெள்ளையருக்கு தண்ணி காட்டி அங்கிருந்து தப்பி சென்றபின், அவர்களின் அடுத்த முயற்சியை தொடங்கினர்.

-கதிர்-